இன்று என் வேலையிடத்தில் நான் காண நேர்ந்த இரு குழந்தைகள் இடம் குறித்த என் பார்வையை முழுக்க மாற்றினார்கள்.
முதல் குழந்தை அவனது அப்பாவுடன் கையைப் பற்றி வந்தான். நான்கு வயதிருக்கும். பள்ளி சீருடை அணிந்திருந்தான். அவனுடைய அப்பா (அவர் அங்கு ஒரு ஊழியர்) சைன் இன் செய்ய மேலே மாடிக்கு செல்ல்லும் முன் சில நிமிடங்கள் குழந்தையை கீழே உணவருந்தும் இடத்தில் ஒரு மேஜை அருகே விட்டு செல்கிறார். நான் பின்னால் ஒரு மேஜை அருகே என் சக்கர நாற்காலியை “பார்க்” செய்து ஒரு தேநீரை ருசித்தபடி எழுதிக் கொண்டிருக்கிறேன். கடைக்கண்ணால் குழந்தை படிக்கட்டையும் தன்னைக் கடந்து செல்லும் அந்நியர்களையும் கவனித்துக் கொண்டு நிற்கிறான். நிமிடத்துக்கு நிமிடம் பதற்றம் ஜுரம் போல ஏறுவதை அவன் முகத்தில் பார்க்கிறேன். நான் எழுதுவதைத் தொடர்கிறேன். அப்போது ஒருவர் வந்து “யாருப்பா நீ? ஏன் தனியா நிற்கிறே? என்னாச்சு?” என அக்கறையாய் விசாரிக்க அவன் பதிலளிக்காமல் முழிக்கிறான். பயந்து அழுகிறான். இப்போது அவர் தன் பையை கீழே வைத்து விட்டு அவன் முன் மண்டியிட்டு ஆறுதல்படுத்துகிறார். அவன் பதில் சொல்லாமல் தாரைத்தாரையாய் கண்ணீர் வடிக்கிறான். நான் எழுதுவதை விட்டு விட்டு அங்கு செல்லுமுன்பு நான்கைந்து பேர்கள் கூடுதலாய் சேர்ந்து விட்டார்கள்.
அவனுக்கு தமிழ் தான் புரியும் எனத் தெரிய வர தமிழிலும் அவனிடம் விசாரிக்கிறோம். அவனுடன் வந்தது அவன் அப்பா என நான் ஆரம்பித்து நினைத்தாலும் இப்போது ஒரு குழப்பம் வருகிறது. யாராவது தெரியாமல் அங்கே கொண்டு விட்டு விட்டு போய் விட்டார்களா? ஆனால் அது அப்பா தான். “அம்மா எங்கே?” “அம்மா எங்கே?” எனும் கேள்விகளுக்கு அசைந்து கொடுக்காதவன், கூடுதலாய் அழுதவன், “அப்பா எங்கே?” என்றதும் நிதானமாகிறான். தளும்பி நிற்கும் விழிகளால் பார்த்து நெஞ்சங்களை கரைத்து விட்டு தன் அப்பா மேலே மாடிக்கு சென்றிருப்பதாய் சைகை செய்து சொல்கிறான். இப்போது குறிப்பாய் விசாரிக்கப்பட அவன் அமைதியாகி தன் அப்பாவின் பெயரைக் குறிப்பிடுகிறான். ஆனால் கூட்டத்தைக் கண்டு ஏனோ அவன் மீண்டும் அழுகிறான். இப்போது ஒருவர் அவன் அப்பாவைப் போய் அழைத்து வருவதாய் உறுதிப்படுத்துகிறார், அவன் அதை நம்பத் தயாரில்லாதது போல கூடுதலாய் அழுகிறான். இப்போது அவன் அப்பாவே வந்து அரவணைத்து அழைத்து செல்ல, ஒரு டிப்பிக்கல் ஆணைப் போல, வேகத்துடன் கண்ணீரைத் துடைக்கிறான். சின்ன பயத்துடன் அப்பாவின் கையைப் பற்றி அங்கிருந்து நடந்து அகல்கிறான்.
சற்று நேரத்தில் அங்கு மற்றொரு சிறுவனை அவன் அப்பா அழைத்து வருகிறார். அவனுக்கும் நான்கு வயதுக்குள் தான் இருக்கும், அதே சிருடை. அவனுடைய அப்பா அங்குள்ள உணவகம் ஒன்றில் பணி புரிகிறார். அவர் பையனை விட்டு சில நிமிடங்கள் கழிவறைக்குள் போய் விட்டார். அதற்குள் அவன் நாற்காலியில் ஏறி குட்டிக்கரணம் அடித்து, அங்கு பெருக்க வந்த பாட்டிகளை துரத்திக் கொண்டோடி, கூச்சலிட்டு அதகளம் பண்ணி விட்டான். உணவகத்தில் ஒரு பொறுப்பில் இருக்கிறவரைக் கண்டதும் போய் பேசினான். ஒரு நிமிடத்துக்குள் இத்தனையையும் அவன் எப்படி செய்தான் என நான் வியந்தேன்.
ஒரு குழந்தை பேசவே அஞ்சி கண்ணீர் வடிக்க மற்றொரு குழந்தை மொத்த இடத்தை ஆளுகை செய்கிறான். அவனுக்குள்ள தயக்கம் ஏன் இவனுக்கு இல்லை?
இரு குழந்தைகளுக்கும் முக்கிய வித்தியாசம் அவர்களின் ஆளுமை மட்டுமல்ல அவர்களுக்கு அந்த இடத்தில் உள்ள மனிதர்களுடன் உள்ள பரிச்சயமும் தான். இடமும் (வெளியும்) மனிதர்களும் ஒன்றே எனும் புரிதல் குழந்தைகளுக்கு கூர்மையாக உள்ளது. அதனாலே ஒரு புதிய இடத்திற்கு செல்லும் போது அவர்கள் அந்த இடத்தைக் கண்டு எதையும் மதிப்பிடுவதில்லை; தன்னை நோக்கி வரும் மனிதர்களையே கவனித்து அனுமானிக்கிறார்கள்; அடுத்தடுத்த செயல்களை ஊகிக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு தன்னை நோக்கித் திடீரென வந்து விசாரிக்கும் மனிதர்கள் திடீரென மூடுகிற ஒரு கதவுக்கு சமானம். இது நமக்குப் புரிந்து கொள்ள குழப்பமாக இருக்கும், ஆனால் குழந்தைகள் இயல்பாகவே அப்படித் தான் வெளியைப் புரிந்து கொள்கிறார்கள்.
குழந்தைகள் ஒரு புது இடத்துக்கு செல்லும் போது தம் பெற்றோரின் கையைப் பற்றி செல்வதை கவனியுங்கள். அது பாதுகாப்புக்காகவும் வழியறிதலுக்காகவும் மட்டுமல்ல. பெற்றோர் ஒரு புது இடத்துக்குள் புகுந்து நடந்து செல்ல அங்கு பல கதவுகள் குழந்தைக்குத் திறக்கின்றன. சற்று கூடுதல் துணிச்சலான குழந்தைகள் பெற்றோர்கள் அருகாமையில் இருந்தால் சற்று தொலைவு வரை தனியாக ஓடி விளையாடுவார்கள். ஆனால் தாம் தனியாக இருப்பதாக உணர்வு ஏற்பட்டால் உடனடியாய் அழுவார்கள். (இது வீட்டு நாய் தன் சொந்தக்காரருடன் புது இடத்துக்கு செல்வதற்கு இணையானது.)
குழந்தைகளிடம் நாம் முதலில் பேசும் போது நாம் முன்னேகி சென்று கேள்விகளைக் கேட்டால் அவர்கள் பயந்து அழுவதன் காரணமும் இது தான். அப்போது அவர்களுக்கு அந்த வெளி நான்கு சுவர்களாக மாறி எழுந்து வந்து தம்மை நெருக்குவதாகத் தோன்றுகிறது. அதனால் குழந்தைகளை நோக்கி நாமாக செல்லாமல் அவர்களை நம்மை நோக்கி வரவழைப்பது, அவர்களாக நம்மிடம் பேச வைப்பது முக்கியம். அப்போது உடனே நட்பாகி விடுவார்கள்.
முதல் குழந்தைக்கு அங்குள்ள மனிதர்கள் அந்நியம் என்பதால் அது தனக்கு சொந்தமில்லாத இடத்தில் தனக்கு சொந்தம் ஒரு சிறிய சதுர அளவு இடம் மட்டுமே என நினைத்து அசையாது நின்ற இடத்தில் நின்றான். ஆனால் அடுத்த குழந்தைக்கோ அங்குள்ள ஆட்கள் சிலரைத் தெரியும் என்பதால் மொத்தமும் தன் இடமே என நம்பி குதித்து கூச்சலிடுகிறான்.
