நான் சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு கல்லூரிக்கு பேச சென்றிருந்தேன். அப்போது ஒரு ஆசிரியர் என்னிடம் அங்குள்ள அரசுப் பள்ளிகளின் அவல நிலை பற்றி புகார் சொல்லிக் கொண்டே வந்தார். அவரது பிரதானம் குற்றச்சாட்டு கராறான மதிப்பீடுகள் இன்றி மாணவர்களை ஆரம்ப கல்வி முதற்கொண்டே நாம் தேர்வாக்கி அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பி வருகிறோம். இந்த அரசுப்பள்ளி மாணவர்களை தனியார் மாணவர்களுடன் ஒப்பிட்டால் தரம் ரொம்ப தரைமட்டமாக இருக்கிறது என்பது. தயவுதாட்சண்னியம் பார்க்காமல் அரசுப்பள்ளி மாணவர்களை ஆரம்பக் கல்வி தொட்டே மதிப்பிட்டு தோற்கடித்தால் தான் ஆசிரியர்களும் அவர்களுக்கு அக்கறையாக பாடம் கற்பிப்பார்கள் என்றார் அவர் மேலும். நான் அவரிடம் “கல்வி என்றால் என்ன?” எனக் கேட்டேன். சரளமாக ஆங்கிலம் பேசுவதோ, மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் வாங்குவது மட்டும் கல்வி அல்ல. நேர்முகத்தில் பேசி வேலை வாங்குவதற்கான பயிற்சி மட்டுமே கல்வி அல்ல. கல்வி என்பது ஒருவரது ஆளுமை மெல்ல மெல்ல விகசிப்பதற்கு துணை செய்யும் ஒரு செயல்பாடு மட்டும் தான்; ஒரு வகுப்பில் எல்லா மாணவர்களும் ஒரே போன்ற தரத்துடன் படிக்க வேண்டும், ஒரே போன்ற முன்னேற்றம் பெற வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட பிராண்ட் போன்களை நூறு முறை வாங்கினாலும் அவை ஒரே போன்று செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பதைப் போன்றது, குழந்தைகளும் ஸ்மார்ட் போன்களும் ஒன்றல்ல எனக் கூறினேன். அவர் என்னை ஒரு பைத்தியத்தைப் பார்ப்பதைப் போல முறைத்தார்.
தனியார் கல்வியில் ஊறின இந்த மனநிலை கொண்டவர்கள் தாம் “தேர்வு தேர்வு” என சதா போர்முழக்கம் இட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கார்ப்பரேட் அடிமைகளுக்கு கல்விக்கும் நுகர்வுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. இவர்கள் இந்தியாவை ஒரு திறந்தவெளி பைத்திய விடுதியாக்கின பின்னர் தான் அடங்குவார்கள்.
ஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு என்பதை எதிர்காலத்தில் அரசுப்பள்ளிகளையும் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான ஒரு முன்னோட்டம் என்று தான் பார்க்கிறேன்.
