ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் எனும் தமிழக அரசின் முடிவு ஏற்படுத்தி இருக்கிற நெருக்கடியை அறிவோம். வரும் காலங்களில் ஒன்றாம் வகுப்புக்கே இவர்கள் பொதுத்தேர்வு நடத்தினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இது அரசின் அறிவீனத்தின் விளைவு என பார்ப்பது மேம்போக்கானது என நினைக்கிறேன்; ஏனென்றால் நாம் வந்து அடைந்துள்ள இந்த நிலைக்கு நாமும் கல்வி நவமுதலாளித்துவ சந்தையில் தொடர்ந்து பண்டமாக்கப்பட்டு வருவதற்கும், எங்கும் வியாபித்துள்ள நுகர்வு மனநிலைக்கும் ஒரு தொடர்பு உள்ளது. நாமே நம் வாலில் நெருப்பு வைத்து விட்டிருக்கிறோம்; அது இப்போது நம் தலையை எட்டி உள்ளது. வரும் நாட்களில் நம்மை முழுக்க அது முழுங்கி விடும்.
முதலில் ஏன் தொடர்ந்து தேர்வுக்கு இவர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள் என யோசிக்க வேண்டும். இதற்கு சொல்லப்படும் நியாயம் கல்வியின் தரம் வீழ்ந்து விட்டது என்பது. இந்த ஒரு பிலாக்கணத்தை வைத்து உயர்கல்வியில் செமஸ்டர் முறையை முதலில் கொண்டு வந்தார்கள். வருடத்துக்கு ஒருமுறை தேர்வு எழுதிய மாணவர்கள் இப்போது இரன்டு முறை எழுதினார்கள். பின்னர் continuous internal assessment (தொடர் உள்மதிப்பீட்டுத் தேர்வு) எனும் முறையை கொண்டு வந்தார்கள். இப்போது மாணவர்கள் வருடத்திற்கு நான்கு மடங்கு அதிக தேர்வுகள் எழுதினார்கள்.
தேர்வுகள் கல்வி கற்றலை தீவிரமாக்கும் என வெளியில் இருந்து பார்க்கும் போது தோன்றலாம். ஆனால் நிஜத்தில் இது கல்விக்கு எதிரானது - கவனித்து விவாதித்து படித்து உள்வாங்கும் கால அவகாசம் மாணவர்களுக்கு இல்லாமல் போகிறது. படிக்கும் காலத்தில் கலை / இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுவது, சக மாணவர்களுடன் ஊர் சுற்றுவது, நேரடி அனுபவங்கள் மூலம் வாழ்க்கையை அறிவது, சமூக அரசியல் போராட்டங்களில் ஈடுபடுவது கிட்டத்தட்ட அசாத்தியம் ஆகும். தொடர் உள்மதிப்பீடு என்பது தொடர்ந்து மாணவர்களின் திறனை மதிப்பிடுவது எனும் நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் நடைமுறையில் அதுவு மற்றொரு தேர்வாக முடிந்து போகிறது. சில கல்லூரிகளில் தேர்வுக்கான ஒரு தயாரிப்புத் தேர்வையும் நடத்துகிறார்கள்; அத்தேர்வின் மதிப்பெண்ணையும் தொடர் உள்மதிப்பீட்டு மதிப்பெண்ணாக எடுத்தும் கொள்கிறார்கள். ஒரு செமஸ்டர் ஐந்து மாதங்கள் என்றால் விடுமுறைகள் போக நான்கு நான்கரை மாதங்கள் வகுப்புகள் நடக்கும் என வையுங்கள். இப்போது ஒவ்வொரு மாதமும் மாணவர்கள் ஏதாவது ஒரு தேர்வுக்காக படிக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. படிப்பை மதிப்பிட தேர்வு எனும் நிலை மாறி தேர்வுக்காக தேர்வு எனும் நிலை ஏற்பட்டு விட்டது.
தேர்வு என்பது எப்படிப் பார்த்தாலும் கல்வியின் தரத்தையோ அறிவையோ மதிப்பிடும் கருவியாக முடியாது - ஐந்து மாதங்களில் நீங்கள் உள்வாங்கும் விசயங்களை இரண்டு மணிநேரத் தேர்வில் காட்ட முடியாது. தொடர் மதிப்பீடும் மற்றொரு தேர்வு ஆகும் பட்சத்தில் அங்கும் மதிப்பெண் வாங்கும் முனைப்பே முக்கியமாக படிப்பே எந்திரமயமாகிறது. இந்த தேர்வு என்பதை கண்டுபிடித்த பைத்தியக்காரன் யார் என நான் இப்போதெல்லாம் சபிக்காத நாளில்லை.
