CAA, NRCக்கு எதிராக கோலமிட்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்ட பெண்கள் ஒரு புது மாதிரியான போராளிகள் - ஹமீம் முஸ்தபா சொல்வதைப் போல அவர்கள் பண்பாட்டு மொழியை கையில் எடுத்திருக்கிறார்கள், தர்க்கரீதியான அரசியல் மொழியை அல்ல. அரசு பண்பாட்டு எதிர்ப்பரசியலையே அதிகம் கவனத்தில் கொள்ளும், அஞ்சும், அச்சுறுத்தும். ஜெயலலிதாவும் தன் ஆட்சியில் கலைஞர்கள் தன்னை எதிர்க்கும் போது கைது, தாக்குதல் என கடுமையாய் எதிர்வினையாற்றிருக்கிறார், ஆனால் அரசியல் எழுத்தாளர்களை அவர் பொருட்படுத்தியதில்லை.
காவல்துறையினர் இக்கைதுக்கு தந்த காரணமும் சுவாரஸ்யம் - கோலமிட்டு பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவே வழக்கை புனைந்திருக்கிறார்கள். கோலம் என்பது உங்கள் வீட்டுக்கு முன்னால் சாலையில் போடப்பட்டாலும் அதற்காக அரசு இதுவரை யாரையும் கைது பண்ணியதில்லை. ஏனென்றால் கோலம் என்பது ஒரு பொருள் அல்ல, அது காயப்போட்ட வடாம் அல்ல. அதன் மீது நீங்கள் ஏறி நடக்கலாம். ஆனால் இதைப் பற்றி பேசும் போது காவல்துறை CAAக்கு எதிரான போராட்டத்துக்காக சிலர் அனுமதி கோரியதாகவும், அது மறுக்கப்பட்டதாகவும் சொல்லி உள்ளது. இந்த கோலத்தையும் போராட்டத்துக்கான விண்ணப்பத்தையும் இணைத்துப் பார்க்கையில் ஒரு பொதுவான அம்சம் நம் கண்ணில் படுகிறது - வெளி.
போராட்டத்தின் போதும் கோலமிடும் போதும் நீங்கள் பொதுவெளியையே பயன்படுத்துகிறீர்கள். இந்த வெளி என்பது அரசுக்கு சொந்தமானது. கேட்க விநோதமாக இருக்கலாம், ஆனால் இது உண்மை - நகரத்தில் தனிவீடுகளில் கூட கோலமிடும் முற்றம் கதவுக்கு வெளியே தான் இருக்கிறது. அதாவது பொதுமக்கள் கால் படும் இடமே கோலமிடப்படும் இடம். ஆக அரசியல் கோலமிடுவது கிட்டத்தட்ட அரசியல் பதாகை ஒன்றை வெளியே வைப்பதற்கு இணையானது. நான் பேஸ்புக்கில் என் பக்கத்தில் எழுதும் போது பொறுத்துக் கொள்ளும் காவல்துறை காவல்துறையின் முகநூல் பக்கத்தில் அத்துறையை விமர்சித்து நான் எழுதினால் எனக்கு எதிராக கடுமையான வழக்குகளை இடும். முற்றத்தில், வாயிற்கதவுக்கு முன்னால், கோலமிடுவது, அந்த கோலத்தின் வழி, அரசுக்கு எதிராக கோஷமிடுவது நுட்பமாக பொதுவெளியில் முழங்குவதற்கு சமமானதும் தான். ஆனால் இதே கோலத்தை நீங்கள் வாயிற்கதவுக்கு உள்ளே, பொதுமக்கள் கண்ணில் படாத இடத்தில், உங்களுக்கு சொந்தமான இடத்தில், வரைந்தால் அரசால் உங்களை கைது பண்ண முடியாது. ஆனால் அது அரசியல் போராட்டமும் ஆகாது. பொதுவெளியை ஆக்கிரமிப்பதே அரசியல். உங்களை உதாசீனிப்போரின் தோளைத் தட்டி கவனத்தைக் கோருவதற்கு இணையானது அரசியல். இந்த கோல சர்ச்சை இதுவரையிலும் பொதுவெளி குறித்த நமக்கு இருந்த பிரக்ஞையை கூர்மைப்படுத்தி உள்ளது.
நாளை CAA ஒழிக என ஒரு கோஷத்தை டீஷர்ட்டில் பதித்து நீங்கள் அதை வெளியே அணிந்து சென்று அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டால் அரசு உங்களை கைது பண்ணுமா? நெற்றியில் இதே வாசகத்தை எழுதி சென்றால் உங்களை கைது பண்ணுமா? உங்கள் பைக்கில் எண் பலகைக்கு மேலே இவ்வாசகத்தை எழுதிச் சென்றால் அரசால், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறீர்கள் என, உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? நடைபாதையில் இருந்து ஒருவர் ஊதுபத்தி விற்கும் போதும் அவர் பொதுவெளியைத் தான் ஆக்கிரமிக்கிறார். அரசு கண்டுகொள்ளாது. அவர் அதே இடத்தில் இருந்து லாபம் தரும் ஒன்றை விற்றால் காவல்துறை லஞ்சம் கேட்டு உங்களை துரத்தி அடிக்கும். அதே இடத்தில் இருந்து அரசியல் செய்தால் காவல்துறை உங்களை கைது பண்ணி மிரட்டும். பொதுவெளி மக்களுக்கானதே, ஆனால் மக்களுக்கானதும் அல்ல. அரசியல்மயமாகும் போது மட்டுமே மக்கள் இந்த வித்தியாசத்தை உணர்கிறார்கள். அவ்வகையில் இந்த கோலப் போராட்டம் கவனிக்கத்தக்கது.
எடப்பாடியின் அரசு பாஜகவை திருப்திப்படுத்த எதையும் செய்யும் என்றாலும், சமூகவலைதளஙக்ள் வழியாக மக்கள் அதிகமாய் அரசியல்படும் இந்த சூழலில் பொதுவெளியில் நடத்தப்படும் போராட்டங்கள் புதுப்புது வடிவங்களை எடுக்கின்றன. அப்போது காவல்துறையால் முடிவதெல்லாம் மக்களை கைதுபண்ணி மிரட்டுவது தான்.
