எங்கள் கல்லூரியில் மாலை வேளை நடக்கும் எலெக்டிவ் வகுப்பில் நான் இரண்டாம் வருடமாக நாவல் எழுதும் கலையை கற்பிக்கிறேன். கடந்த வருடம் 17 மாணவர்கள். இவ்வருடம் 45ஆக உயர்ந்து விட்டது. பெரிய வகுப்புகளின் சௌகரியங்கள் 45இல் ஐந்து பேராவது ஒரு நாவலை அரை கல்வியாண்டுக்குள் முடித்து விடுவார்கள் என்பது. கடந்த முறை ஒருவரே முடித்தார். இந்த முறை 12 அத்தியாயங்கள், அத்தியாயத்துக்கு 5-7 பக்கங்கள் என ஒரு இலக்கை கொடுத்திருக்கிறேன். ஆகையால் இம்முறை நாவலை எழுதி முடிப்பது சற்று சுலபமாக அமையும் என கணிக்கிறேன்.
மாணவர்களை தினமும் நாவலை எழுத வைப்பதே என் பிரதான நோக்கம். ஏனென்றால் இத்தகைய வகுப்புகளுக்கு வருவோருக்கு அதுவே பெரும் சவால் - அவர்களால் எழுத முடியும், அவர்களுக்கு மொழித்திறனும், வாசிப்பும் உண்டு, ஆனால் தினம் தினம் ஒரே புத்தகத்தில் வேலை செய்வது கடினம். அந்த பயிற்சியை எப்படியாவது கொடுத்து விட வேண்டும். இன்றைய முதல் வகுப்பில் அதை பற்றியே முக்கியமாக பேசினேன்.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நாவல் உண்டு, அது எழுதப்படாமலே பல சமயம் போய் டுகிறது என்பது என் நம்பிக்கை. அது இலக்கிய நாவலோ, வெகுஜன நாவலோ, எளிய துப்பறியும் நாவலோ, பதின் வயதினருக்கான ரொமான்ஸ் நாவலோ - ஒவ்வொன்றும் ஒரு வகையான சவால்.
இம்முறை திரைக்கதை கலை குறித்த புத்தகங்களில் இருந்து எடுத்துக் நிறைய விசயங்களை (ராபர்ட் மெக்கீயின் Story போன்ற புத்தகங்கள்) நாவலுக்கும் பொருத்திக் கொண்டு கற்பிக்கலாம் என நினைக்கிறேன்.
நாவல் கலையை கற்பிக்கும் வகுப்புகளில் பொதுவாக சில சட்டகங்களை, வரையறைகளை, எளிய சூத்திரங்களை அளிப்பார்கள். அதை கவனித்தால் இவ்வளவு ஈஸியா என மூக்கில் விரல் வைப்போம். ஆனால் வீட்டுக்குப் போய் எழுதினால் அது அவ்வளவு சுலபமல்ல எனப் புரியும். எழுத்தைப் பொறுத்தமட்டில் எனக்கு கோட்பாடுகளில் நம்பிக்கை குறைவு. எளிய தவறுகள் சிலவற்றை தவிர்க்க உதவுமே ஒழிய அவை தரும் போலி நம்பிக்கை ஆபத்தானது.
தொடர்ந்து இத்தகைய பட்டறைகளில் கலந்து கொண்டு எப்படி நாவல் எழுதுவது என வக்கணையாகப் பேச மட்டும் கற்றுக் கொள்ளும், ஆனால் ஒரு அத்தியாயம் கூட ஒழுங்காக எழுதியிராத, பலரை எனக்குத் தெரியும். நீங்கள் கிரிக்கெட்டை கற்றுக் கொள்ள செல்லும் போது ஒரு பயிற்சியாளர் உங்களை அமர வைத்து forward defense பற்றி கோட்பாட்டு வகுப்பெடுக்க மாட்டார். பாட்டுக் கற்க போகும் போது அங்கு குரு ஸ்வர வரிசையை குறிப்புகள் தருவார், ஆனால் அதோடு விடாமல் பாட வைப்பார். ஆடியே விளையாட்டை கற்கிறோம்; பாடியே பாட்டைக் கற்கிறோம். ஆக எழுத்தை மட்டும் எப்படி பேசியே கற்க முடியும், எப்படி அதை மட்டும் விவாதித்து கற்க முடியும்?
ஆனால் அதற்காக மாணவரின் கையைப் பற்றி எழுத வைக்கவும் முடியாது. அவர்களாகவே எழுத வேண்டும். இப்படித் தான் எழுதுவது என செய்து காட்டவும் முடியும். இதெல்லாம் எழுத்துக் கலையைப் பற்றி பேசுவதன், பேசிக் கற்பிப்பதன் சிக்கல்கள்.
நான் இந்த சிக்கலுக்கு ஒரு சுலபத் தேர்வை இன்னும் காணவில்லை என்பதே ஒரு குற்றவுணர்வை, ஒருவித சோர்வை ஏற்படுத்துகிறது. சில நாட்களில் எதற்கு இந்த தேவையில்லாத வேலை, எழுதுவதே என் பணி, எழுத்தைக் கற்பிப்பதல்ல என நினைப்பேன். ஆனால் ஒரு திறமையான புது எழுத்தாளனை கண்டடையலாமே, எழுதுவது குறித்து உரையாடலாமே, நிறைய பேர்களை ஊக்கப்படுத்தலாமே என ஒரு சபலம் தோன்ற மீண்டு விடுவேன்.
இந்த வகுப்புகள் ஒரு எழுத்தாளனாகவும் ஆசிரியனாகவும் எனக்கு அளிக்கும் உற்சாகமும் ஆற்றலும் அளப்பரியது. அதை வைத்து (கடந்து இரு வருடங்களாக எழுதி வரும்) வரும் என் நாவலையும், மாணவர்கள் தம் நாவலை நிறைவு செய்து சமர்ப்பிக்கும் போது, என்னால் முடிக்க இயன்றால் முத்தாய்ப்பாக இருக்கும்! அதுவே என் கனவு!