நேற்றை ஹிந்து நாளிதழில் வெளியான Vedantic Attachment and Islamic Idolatry எனும் கட்டுரையைப் படித்தபோது நமது வலதுசாரிகளில் சற்றே புத்திசாலிகளாக உள்ளவர்கள் கூட காவி வண்ணம் பூசிக் கொள்ளும் போதுஎப்படி கோமாளிகளாகிப் போகிறார்கள் என வியப்பேற்பட்டது. அதாவது இந்துத்துவாவை ஆதரிக்கும் போது எந்த தர்க்க நேர்த்தியும் அற்ற பிதற்றலாக, சுத்த பேத்தலாக அவர்களின் கருத்துக்கள் அமைகின்றன; ஆனால் தத்துவம், பொருளாதாரம் என்றெல்லாம் வரும் போது நிதானமாக உரையாடுகிறார்கள்; தாமரைப் பூவைக் காட்டினால் சுத்த லூசாகி விடுகிறார்கள். இவர்களின் எழுத்துக்கள் சற்றே அறிவு படைத்தவர்களைக் கூடமுடியை பிய்த்துக் கொள்ள வைக்கிறது; சொல்லப் போனால் எதிர்த்தரப்பினரை தம் தரப்பை ஏற்றுக் கொள்ளவைப்பதல்ல, தம் கோமாளித்தனக் கருத்தக்களால் அவர்களை பைத்தியம் பிடிக்க வைப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது. “பேட்மேன்” படத்தில் வரும் நோக்கர் பாத்திரத்துடன் நமது வலதுசாரிஅறிவுஜீவிகளை தாராளமாக ஒப்பிடலாம். குறிப்பாக, தேவ்தத் பட்டாநாயக்கின் இந்த கட்டுரை அப்படியான உச்சகோமாளித்தனம்.
இதைப் பாருங்கள்:
Why is such pragmatism not displayed when it comes to much less significant Islamic structure in India? Does the attachment of a section of Muslims to Babri Masjid lean towards idolatry? Or is it a fight for justice over a land dispute, and a case of land grabbing stretched over decades? Is the compensation not enough?//
மக்காவில் வழிபாட்டிடங்கள் உடைக்கப்படுவதைக் கொண்டு அவர் பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுவது இங்கு தெளிவு. ஆனால் இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா?
மக்காவில் அரசாங்கத்தால் நபியின் மனைவி கதீஜாவின் வீடு உள்ளிட்ட வரலாற்று கட்டமைப்புகள் உடைக்கப்படுவதும் இந்தியாவில் அயோத்தியில் இந்துத்துவ கும்பலால் ஒரு மசூதி நொறுக்கப்படுவதும் ஒன்றல்ல. அங்கே வஹாபிய மேலாதிக்கம் காரணமாக, இடத்தையோ சிலையையோ ஒருவர் வழிபடக்கூடாது எனும் நோக்கில், சில தர்ஹாக்களும் இடங்களும் அழிக்கப்படலாம். அது நியாயமா என்பது வேறு கேள்வி. ஏனென்றால் அது இஸ்லாத்துக்குள் தூய்வாதத்தை ஏறகலாமா எனும் கேள்வி சம்மந்தப்பட்டது.
ஆனால் அதுவும் ஒரு மக்கள் திரளை அந்நியப்படுத்தி எச்சரிக்கும் நோக்கில் மசூதியை இடிப்பதும் ஒன்றல்ல.
இஸ்லாமியரின் வழிபாட்டிடம் நவீன இந்தியாவில் இடிக்கப்படுவதற்கு இரு விளைவுகள் உண்டு:
1) அந்த தலத்தில் வழிபாடு செய்து வந்த மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி வருகிறது. உதாரணமாக, நாளை இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் ஒரு பகுதியில் உள்ள ஒரு பிரசித்தமான மசூதியை ஒரு கும்பல் இடித்து அங்கு கோயில் கட்ட நினைத்தால் அது நடைமுறை சார்ந்த பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒரு வழிபாட்டிடம் என்பது மக்கள் சமூகமாக்கல் செய்கிற இடம்; அது மக்கள் தம்மை சமூகமாக உணர்வதற்கான இடம்; அங்கே தானதர்மம், சமூகத்தொண்டு ஆகிய நற்செயல்களும் நடக்கலாம். அங்கே அந்த மக்கள் திரளுக்கான பண்பாட்டு மூலதனம் உற்பத்தியாகிறது (கூட்டுப்பிரார்த்தனை மற்றும் சடங்குகள் குறித்த பயிற்சியினால்). வழிபாட்டிடங்கள் வெறுமனே நம்பிக்கை சார்ந்த ஒரு விசயம் மட்டுமல்ல. மக்காவில் ஒரு தர்ஹா இடிக்கப்பட்டாலும் மக்கள் ஒரு ‘பெருங்கதையாடல்’ வழிபாட்டிடத்துக்காவது செல்லலாம். ஆனால் இந்தியாவில் நீங்கள் தர்காவில் இருந்து மசூதிக்குப் போக முடியாது. நீங்கள் மசூதியில் இருந்து வெற்றிடத்துக்கும், அழிவு குறித்த கற்பனை வெளிக்குள்ளும் தான் சென்றாக வேண்டும். பட்டாநாயக் கேட்பது போல மக்கள் தங்களுக்கு தரப்பட்ட மாற்று இடத்தில் ஒரு மசூதி கட்டிக் கொண்டு நகர முடியாது. வழிபாட்டிடம் என்பது கழிப்பறை அல்ல தோன்றுகிற இடத்துக்கு மாற்றுவதற்கு. அது நீங்கள் வசிக்கிற இடத்தில் அருகில், அல்ல திரளான மக்களின் வாழ்விடத்துக்கு மையத்தில் இருக்க வேண்டும்.
2) இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே, அதாவது காலனியாதிக்க காலத்தில் இருந்தே, எரிந்து வரும் பிரச்சனை அயோத்தியா வழக்கு. பாபர் மசூதி இடிக்கப்படுவதை இஸ்லாமிய மக்கள் அரை நூற்றாண்டுகளாக இந்தியா முழுக்க இஸ்லாமியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், நடத்தப்படுவதாக அஞ்சப்படும் தாக்குதல்களின் பின்னணியில் வைத்தே பார்ப்பார்கள். மக்காவில் இடிக்கப்படுவதை அந்த ஊர் மக்கள் அப்படிப் பார்க்க மாட்டார்கள். அயோத்தி என்பது இந்துக்கள்-இஸ்லாமியர் இரு சாராருக்கும் இங்கு ஒரு குறியீடு; மக்காவில் ஒரு தூணோ வீடோ இடிக்கப்படுவது இப்படியான குறியீடு ஆகாது.
தேவ்தத் பட்டாநாயக் இந்த கட்டுரையில் இப்படி சம்மந்தமில்லாத இரு விசயங்களை முடிச்சுப் போட்டு பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்துவது விஷமத்தனமானது. அவர் தொன்மங்களைப் பற்றி சுவாரஸ்யமாக, சற்று ஆழத்துடன் எழுதுகிறவர் தான். அந்தளவில் எனக்கு அவரைப் பிடிக்கும். ஆனால் இத்தகைய மதவாத அடிவருடிக் கட்டுரைகளை அவர் எழுதும் போது என்றாவது கையில் மாட்டினால் சாணியை முக்கிய செருப்பால் அடிக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. அமைதியான என்னையே இப்படி சிந்திக்க வைக்கிறார் பாருங்கள். அது தான் இவரைப் போன்றவர்களின் வெற்றி. அதனால் வேண்டாம். அவரை அடுத்த முறை எங்காவது நேரில் பார்க்க நேர்ந்தால் மனதுக்கு ரெண்டு அடி கொடுத்து விட்டு கடந்து விடலாம்.