Skip to main content

மகாராஷ்டிரா அரசியல் தகிடுதித்தங்கள்: பாஜக எனும் டெர்மினேட்டர்


மகாராஷிரா அரசியல் களம்சூது கவ்வும்படம் போல பல வாய்பிளக்க வைக்கும் திருப்பங்களுடன் உள்ளது. முதலில் பாஜகவும் சிவசேனாவும் எதிரெதிர் அணிகளாக நின்று மோதும் என்றார்கள். அடுத்து என்.சி.பி, காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்த்தார்கள். இதனிடையே எங்களுடன் சேராவிட்டால் ஆளுநர் ஆட்சி தான் என அமித் ஷா வழக்கமான அஸ்திரத்தை ஏவினார். நான் கூட பாஜக மகாராஷ்டிரத்தை மற்றொரு காஷ்மீர் ஆக்கி விடுமோ என கவலைப்பட்டேன். ஆனால் ஷாவோ நம் கவனத்தை முழுக்க சிவசேனா / பவார் பக்கம் திருப்பி விட்டு இரவோடு இரவாக பவாரின் மருமகன் அஜித் பவாரின் துணையுடன் என்.சி.பியை பிளந்து அதன் ஆதரவுடன் பாஜக ஆட்சிக் கட்டிலை கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளார் - பத்னாவிஸ் முதல்வர், அஜித் பவார் துணை முதல்வர்

எப்போதும் அமித் ஷா ஒரு ஆட்சிப் பிரச்சனைக்கு மூன்று நான்கு தீர்வுகளை தன் பட்டியலில் வைத்திருப்பார், ஒன்று சரியாக வரவில்லையென்றால் அதற்கு ஈடாக அடுத்த தீர்வுகளை ஒரே சமயம் பரிசீலிப்பார் என நினைக்கிறேன். இந்த சாணக்யத்தனத்தை வியப்பதை விட இதைக் கொண்டு பாடம் கற்பதே முக்கியம். அடுத்த சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடக்கையில் பாஜகவின் நோக்கம் எப்படியாவது ஆட்சியில் இடம் பிடிப்பதாக இருக்கும்; அதுவும் பத்து இடங்களிலாவது வெற்றி பெற்று விட்டால் கூட்டணிக் கட்சியுடன் (அதிமுக) சீமான் மற்றும் சினிமா கட்சிகள், கூடவே சாதிக் கட்சிகள் என ஒரு அணியை உருவாக்குவார்கள். இதற்கு அடுத்ததாக திமுகவை ரெண்டாகப் பிளந்து, இன்னொரு பக்கம் அதிமுகவின் சில அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து ஒரு அணியை உருவாக்க முடியுமா எனப் பார்ப்பார்கள்

அதாவது அடுத்த தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் அதனால் பலனிருக்காது - பாஜக சுலபத்தில் அதிமுகவை ரெண்டு, மூன்று அணிகளாக உடைத்து விடும். அடுத்து துணை முதல்வர் பதவியை ஒரு பாஜக தலைவருக்கு - தமிழகத்தில் எந்த மக்கள் செல்வாக்கும் இல்லாத, தமிழக செண்டிமெண்டுகளை தொடர்ந்து புண்படுத்தும் விதமாகப் பேசுகிற ஒருவருக்கு - வாங்கிக் கொடுத்து விடும். அவரை வைத்து பாஜகவே ஆட்சியில் உள்ளதான பிம்பத்தை நேரடியாக ஏற்படுத்தும்

எப்படிப் பார்த்தாலும் தமிழகத்தில் அடுத்த ஆட்சியை பாஜகவை கைப்பற்றாமல் இருக்க ஒரே வழி தான் - பெரும்பான்மை இடங்களை திமுக கூட்டணி பெற்று விடுவது. அதிமுக கூட்டணி மற்றும் மூன்றாம், நான்காம் அணிகள் நிர்மூலமாவது. அப்போது மட்டுமே திமுகவால் பாஜக படையெடுப்பை தடுத்து ஒரு அரணை அமைக்க முடியும். வலுவாக ஆள முடியும்

சரி பாஜக வசம் தமிழகம் முழுக்க போனால் என்னவாகும்
பாஜகவால் இப்போது நேரடியாக செயல்படுத்த முடியாத திட்டங்கள் நிறைவேற்றப்படும்
அதில் முதலாவதாக தமிழுணர்வை காயடிப்பது இருக்கும் - அதற்குத் தோதாக பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை கட்டாயமாக்குவார்கள்
அடுத்து தொடர்ந்து இந்துக்கோயில்களை புனரமைத்து பெரும் விழாக்களை எடுத்து, சில பல மதப்பிரச்சனைகளைத் தூண்டி கலவரங்கள் செய்ய முடியுமா என முயல்வார்கள்.
தொடர்ந்து அமித் ஷாவின் இருப்பு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும்படி ஊடகங்களை முடுக்கி விடுவார்கள். சொற்ப இடங்களை வென்றிருந்தாலும் கூட ஆட்சியை தாமே நேரடியாக நடத்துவதாக ஒரு பிம்பத்தை உண்டு பண்ணி, கடும் பிரச்சாரங்களை முன்னெடுத்து திராவிட கட்சிகளை விட மேலான ஆட்சியை தமிழகத்தில் பாஜக தருவதாக சித்தரிப்பார்கள். இதை வைத்து அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழக களத்தில் தாம் மட்டுமே ஒரே பெரிய கட்சி என காட்டிக் கொள்ளவும் திராவிட அரசியலுக்கு ஒரே மாற்று இந்துத்துவா என பிரச்சாரம் பண்ணவும் முயல்வார்கள்.

அமித் ஷாவின் வியூகங்களைக் காணும் போது எனக்கு அரபியும் ஒட்டகமும் கதை தான் நினைவுக்கு வருகிறது. ஒட்டகத்துக்கு என்றுமே தலையை உள்ளே விட்டால் போதாது. அதன் ஆகிருதியும் சுபாவமும் ஒண்டிக் கொள்வதை அனுமதிக்காது. இந்தியாவில் எந்த கட்சியாலும் பாஜகவுடன் இணக்கமாக இருந்து காலத்தை ஓட்ட முடியாது. அது ஒரு எம்.என்.ஸியைப் போன்றது - எப்படி பெரும் கார்ப்பரேட்டுகள் சின்னச் சின்ன நிறுவனங்களை முழுங்கி செரிக்குமோ அப்படியே பாஜகவும் மாநில கட்சிகளை எதிர்கொள்ளும். ஒரே கட்சி, ஒரே மதம், ஒரே மொழி எனும் புள்ளிகளின் திரளும் ஒரே தேசம் என்பதே அவர்களின் முழக்கம்.
 இத்தகைய குழிபறிக்கும் சூழ்ச்சிகளை முன்னர் காங்கிரசும் நிகழ்த்தியிருக்கிறது என்றாலும் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு.
 காங்கிரஸ் ஒரு சமரசக் கட்சி. ஓரளவுக்கு அவர்களுக்கு அடிபணிந்து போகும் மாநிலக் கட்சிகளை ஏற்பார்கள்; ஆனால் பாஜக ஒரு சுனாமி அலை. அதன் முன்னர் போய் தலைகுனிந்து நின்றால் அடித்துக் கொண்டு போய் விடும். மகாராஷ்டிர அரசியல் இதற்கு நல்லதொரு சான்று.
 தமிழகத்தின் நிலைமைப் பாருங்கள் - முன்பு எப்போதாவது பெரும் மக்கள் தலைவர், முதல்வர் மருத்துவமனையில் மர்மமான முறையில் மரணமடைய, அதை பின்னணியில் வைத்து அரசியல் பேரங்கள் நடந்து, குதிரை பேரம் நடந்து இப்படி மக்கள் ஆதரவு இல்லாத ஒருவர் முதல்வராக பதவியேற்று இப்படி நீடித்திருக்க முடியுமாமேலும் யோசித்துப் பார்த்தால் கிழக்கிந்தியா கம்பெனியின் ஒரு நவகாலனிய வாரிசு போலவே பாஜக இன்று செயல்படுகிறது.
 கம்பெனியுடன் கூட்டணி அமைத்து வியாபாரம் பண்ணத் தொடங்கினால் விரைவில் கம்பெனி தன் கூட்டாளியை துரத்தி விட்டு ஆட்சியை பறித்துக் கொள்ளும். அடுத்து தேசம் முழுக்க கம்பெனியின் கீழே வரும். கம்பெனி நிர்தாட்சண்ணியமாக நடந்து கொள்ளும். அதற்கு மக்களின் உணர்வு, ஆட்சியின் எதிர்காலம், வரலாறு எதுவும் முக்கியமல்ல. அடித்துப் பிடுங்கும் இந்த காலனிய அரசியலை அமித் ஷா ஒரு    கலையாகவே வளர்த்தெடுத்திருக்கிறார். எப்படி கம்பெனிக்கு தனிமனிதர்கள், கொள்கை, விமர்சனங்கள் முக்கியமல்லவோ அப்படியே பாஜகவுக்கும். தனிமனிதர்கள் முக்கியமாகும் போது அங்கு பல்வேறு தரப்புகளுடன் இணக்கமாகப் போவது எதிர்கால நலனுக்கு அவசியமாக இருக்கும். ஆனால் பாஜகவுக்கு அத்தகைய சிக்கல்கள் இல்லை - பாஜகவின் வெற்றிகளை வைத்து அமித் ஷாவின் குடும்பத்தினர் பெரும் லாபம் காண முடியும் என்றாலும் அக்கட்சியின் எதிர்காலம் மோடியோ, ஷாவோ அல்ல. மோடியை வரும் ஆண்டுகளில் பாஜக உதிர்க்கும் என்றால் ஷா அதற்கு அடுத்த ஆண்டுகளில் சிதறிப் போவார். அடுத்தடுத்து தன்காலனியப்பரவலுக்கு உதவியாக இருக்கும் தலைவர்களை பாஜக பதவியில் அமர்த்தும்.
 பாஜகவுக்கு மனிதக் கண்களோ, மனித இதயமோ இல்லை. வாரிசு அரசியலின் ஊழல்கள், தீமைகள் இல்லை என்பது அனுகூலம் என சிலர் எண்ணலாம். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இதுவே பாஜகவை மிக மிக ஆபத்தான கட்சியாக்குகிறது. பாஜகவுக்கு வாரிசுத் தலைவர்களே தேவையில்லைஅதற்குத் தேவை டெர்மினேட்டர்களே. கட்சியின் அரூபமான தலைமையின் ஆணையை ஏற்று உணர்வுகளற்று ஆவேசமாகக் கிளம்பும் டெர்மினேட்டார்கள். காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப உருவத்தை மாற்றி சஞ்சரிக்கும் டெர்மினேட்டரின் பல்வெறு வெர்ஷன்கள்.


டெர்மினேட்டர்களை நேரடியாகத் தாக்கவோ அழிக்கவோ முடியாது. அவர்களுடன் கூட்டணி குடும்பம் நடத்தவும் முடியும். அவர்கள் மனிதர்கள் அல்ல. இந்த சந்தர்பத்தில் இந்தியாவின் மாநிலக் கட்சிகள் ஒட்டுமொத்தமாய் மனதிற் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் - ஒருநாளும் டெர்மினேட்டருடன் கைகுலுக்கக் கூடாது

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...