Skip to main content

பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கின் பூடகம்


பாத்திமா லத்தீப்பின் தற்கொலை வழக்கு (ஸ்வாதி கொலை வழக்கு போன்றே) பூடகமானது. சில கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் இல்லை:
1) பேராசிரியர் சுதர்சனன் பத்மநாபன்  செய்த குற்றம் தான் என்ன? அவர் பேசிய மத-துவேசம் கொண்ட வாக்கியம் என்ன?
2) அவர் நேரடியாக தற்கொலைக்குத் தூண்டினாரா
3) வகுப்பில் பொதுமன்றத்தில் அவர் மாணவியை அவமதிக்கும்படி பேசினாரா? ஆம் எனில் அது என்ன? இத்தனை பேர் இருந்த ஒரு கல்வி நிறுவனத்தில் ஒருவர் கூடவா இதை வெளியே வந்து சாட்சியமாக சொல்ல மாட்டார்களா?
4) ஒரு ஆசிரியர் தன் மாணவிக்கு CIA மதிப்பெண்ணை குறைத்து வழங்கியதை தற்கொலைக்கான தூண்டுதல் / உளவியல் ரீதியான ஒடுக்குமுறை என நாம் சித்தரிக்க முடியுமா? அது நியாயமா? அதற்கு சட்டத்தில் இடமுண்டா?

5) ..டியில் சாதிய / மத ஒடுக்குமுறைச் சூழல் இருக்கலாம் - இருக்கிறதெனில் அதனால் தான் பாத்திமா போன்றவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் எனில் அது என்ன? ஆடை அணிவதில், கருத்துக்களை வெளிப்படுத்துவதில், மத அடையாளங்களைப் பூணுவதில், சைவ / அசைவ உணவை உண்பதில் தடைகள் உண்டா? இந்த கலாச்சார நடைமுறைகளை வைத்து யாரேனும் அவமதிக்கப்படுகிறார்களா? எங்கே எப்போது என்று மற்றும் எப்படி?
6) தற்கொலை என வழக்கு கட்டமைக்கப்படுவதை பாத்திமாவின் அப்பா எதிர்க்கிறார் - தன் மகள் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக, ஆகையால் இது ஒரு கிட்டத்தட்ட கொலை என அவர் நம்பலாம். அதற்கு ஆதாரம் இருப்பின் கராறாய் விசாரணை நடத்தப்பட வேண்டும். காவல்துறையின் போக்கில் சந்தேகம் ஏற்பட்டதனாலே அவர் சி.பி. விசாரணிஅ வேண்டுமென கோரிக்கை வைத்தார். தொடர்ந்து ..டி பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்தார். கேரள மாநில முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தார். அவர் இந்த குற்றச்சாட்டுகளையும் துல்லியமாக வெளிப்படையாக வைக்கவில்லை. தன் மகளின் தற்கொலைக் குறிப்பை அவர் வெளிப்படுத்தவில்லை (பாத்திமாவின் சகோதரி அதை புகைப்படம் எடுத்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள்; ஊடகங்களில் வெளியான படம் போலியானது என்றும் சொல்கிறார்கள்). வெறுமனே பெயர்களை உதிர்த்திருக்கிறார். இது பிரச்சனையை மேலும் பூடமாக்கி விட்டது. நாளை வழக்கு விசாரணையில் அந்த பேராசிரியர் குற்றமற்றவர் எனத் தெரிய வந்தால் இப்போது ஏற்பட்டுள்ள சமூக சித்தரிப்பு / இந்த முகத்தில் பூசப்பட்ட கரி அகலுமா? அவர் ஆய்விதழ்களில் முற்போக்கு அரசியல் கட்டுரைகள் எழுதுபவர் என்கிறார்கள். அவர் உண்மையில் மதவெறியர் அல்லவெனில் இந்த ஊடகங்களின் கூட்டுவேட்டை நியாயமாகுமா? இதற்கு பாத்திமாவின் அப்பா பொறுப்பேற்பாரா?
பாத்திமாவின் அப்பா ஒன்று தன் மகளின் மரணம் தற்கொலை அல்ல, அது குறித்து சந்தேகமிருக்கிறது என சொல்லி இருக்க வேண்டும். அல்லது நேரடியாக ஆதாரங்களை வெளியிட்டிருக்க வேண்டும். அவரது செயல் இரண்டுக்கும் இடைப்பட்டது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாகவே நம்புகிறேன்.

பொத்தாம்பொதுவாக எதிரிகளை கட்டமைக்கக் கூடாது இல்லையா? ..டி மட்டுமல்ல எந்த உயர்கல்வி நிறுவனத்திலும் சாதி/மத ஒடுக்குமுறை உண்டெனில் அதை வெளிப்படையாக ஆதராங்களுடன் விவாதிக்க வேண்டும், கண்டிக்க வேண்டும்.
 இப்போதுள்ள ஊடக கட்ட பஞ்சாயத்து சூழலில் அங்கு வேலை செய்பவர்கள் எல்லாரும் பிராமணிய மனநிலை கொண்டவர்கள் / மதவெறியர்கள் / சங்கிகள் எனும் சித்திரம் உருவாகிறது. இது அங்கு வேலை செய்பவர்கள் / படிப்பவர்களை காயப்படுத்தும்; அவர்களுக்கு உளவியல் நெருக்கடி ஏற்படுத்தி தம்மளவில் சிறு சிறு குழுக்களாக பிரியத் தூண்டும்.
என் அனுபவத்தில் நான் வசித்த இடங்களில் இருந்து படித்த / வேலை பார்த்த இடங்கள் வரை தொடர்ந்து சாதிய ஒடுக்குமுறை குறித்த பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். சாதியக் குழுமங்கள் செயல்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்றாத இடங்களே இல்லை. இந்தியச் சூழலில் இதைத் தவிர்க்க முதல் வழி சாதிய / மதப் பிரவினையை சமூகவெளியில் குறைப்பது தான். அடுத்து அரசு / தனியார் நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்புகள் வருடத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும். அடுத்து, இட ஒதுக்கீட்டை இன்னும் கூடுதலாக நடைமுறைப்படுத்தலாம் (தகுதிப்பாடு என்பது ஒரு அபத்தம்; வாய்ப்பு கொடுக்கப்பட்டால் கல்வியில் அனைவரும் சமமாவார்கள்). ஆனால் இப்படி ஒரு சமத்துவத்தை நீங்கள் நிறுவனங்களில் செயற்கையாக உருவாக்கினாலும் அது நீடிக்காது; மாற்றம் சமூக அளவில் முதலில் நிகழ வேண்டும். நீங்கள் உங்கள் சாதிக்குள்ளே (அல்லது மதத்துக்குள்ளே) பெண் கொடுத்து / எடுத்து விட்டு வெளியே பாகுபாடு இருக்கக் கூடாது என்றால் அது அபத்தம் இல்லையா? பாசாங்கு இல்லையா


விரைவில் இந்த வழக்கு முடிக்கப்பட்டு விசாரணை முடிவுகள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அரசல்புரசலாக குற்றச்சாட்டுகளை கிளப்புவதை நாம் நிறுத்த வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...