Skip to main content

ஒற்றன் (1)


அசோகமித்திரனின் “ஒற்றன்நாவலை நான் இரண்டாவது முறையாக படிக்கிறேன். முதலில் படித்த போதிருந்த அதே உணர்வு தான் இப்போதும் - வடிவ பரிசோதனை செய்திருக்கிறார், ஆனால் அது அவ்வளவு துல்லியமாக கைவரவில்லை. “ஜெ.ஜெ: சில குறிப்புகள்நாவலில் டைரிக் குறிப்பும் துண்டுத்துண்டான மனநிலையும் வடிவம் என்றால் இதில் பயணக்குறிப்புகள். அசோகமித்திரன் அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்கள் தங்கி எழுதும் திட்டம் ஒன்றில் பங்கேற்ற அனுபவங்கள். ஆனால் அசோகமித்திரன் பயணக்குறிப்புகளைக் கொண்டு கதைசொல்லி நிலையற்று, மையமற்று போவதை, அதன் சுதந்திரத்தைப் பேசாமல் (அதுவே எளிது) இந்த குறிப்புகளின் ஊடாக ஒரு கோர்வையான கதையை சொல்கிறார். இந்த கதையை மேலோட்டை மட்டும் உருவினால் ஒண்டுக்குடித்தனங்களில் வாழும் ஜனங்களின் கதை ஒன்று வருகிறது. அல்லதுவியட்நாம் வீடுபோன்ற ஒரு கதை


அடிப்படையில் ஒரு எதார்த்த கதை. பரீட்சார்த்த தொழில்நுட்பமும் எதார்த்த கதைகூறலும் இணைந்து ஒரு முகமற்ற வடிவத்தை இக்கதை பெற்றிருக்கிறது. “பாவம் டல்பதடோஎனும் அவரது அதிகம் பேசப்படாத நாவலும் இப்படி உதிரி உதிரியான சித்திரங்களால் முழுமைபெற்றும் முழுமைபெறாத வகை படைப்பு தான்ஆனால் அசோகமித்திரனின் சிறப்பு அவர் இந்த வழக்கமான கதையை அபாரமான உளவியல் ஆழத்துடன் நேர்த்தியுடன் சொல்லுகிறார் என்பது

பல நாடுகளை சேர்ந்த எழுத்தாளர்கள் ஏழெட்டு மாதங்கள் அமெரிக்காவில் சேர்ந்து தங்குகிறார்கள்; ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை, சிக்கல், ஏக்கம், குழப்பம், குடும்ப, அரசியல் பின்னணி. அவர்களும் சுலபத்தில் ஒரு குழாமாக இணைவதில்லை (எழுத்தாளன் அடிப்படையிலோ ஒட்டாத பாதரசம் தானே). இருந்தும் அவர்கள் பரஸ்பரம் கைகோர்த்து பயணிப்பதற்கான பல சந்தர்பங்கள் அமைகின்றன. இன, சாதி, மத பேதங்களைக் கடந்து மனிதன் ஒன்று தான் என அசோகமித்திரன் வலியுறுத்துகிறார்; அப்படி ஒன்றுதான் என நினைக்கும் போதும் அவன் புரிந்து கொள்ள முடியாத ஒரு சிக்கலான வஸ்துவாகவும் இருக்கிறான், எதிர்பாராமைகளால் உறவுகளுக்கு இடையே நிறைய அபத்தங்கள், முரண்கள் நிகழ்கின்றன. இதை அசோகமித்திரன் சித்தரிப்பது தான் இந்நாவலை அபாரமான படைப்பாக்குகிறது.

மனிதன் பேரன்பு மிக்க மனிதன் கோமாளியாகவும் இருக்கிறான் - ஆப்பிரிக்க எழுத்தாளர் அபே அப்படித் தான் இருக்கிறார். அதிக விலையில் ஒரு சூட் தைத்துக் கொண்டு மாதக்கணக்கில் அதை மட்டுமே அணிகிறார், தன் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்குவதும் அமெரிக்காவில் வெளியிடுவதுமே நோக்கம் என்கிறார், அவரது தேசத்தின் ஜனாதிபதி / ஆட்சியாளரின் குடும்பத்துடன் தனக்குள்ள செல்வாக்கை பறைசாற்றுகிறார், தன் நாட்டில் தான் ஒரு மிக பிரசித்தமான நாவலாசிரியன் என்கிறார், ஆனால் சட்டென அங்கு ஆட்சி மாற்றம் வருகிறது, அவனது நாவலை யாரும் அமெரிக்காவில் கவனிக்கவில்லை, ஒரு சக எழுத்தாளரிடம் கூட நட்பை பராமரிக்காமல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்கு கிளம்புகிறார். இடையில் ஒரு ஜப்பானிய பெண் எழுத்தாளரிடம் விருப்பத்தை காட்ட முயன்று உதாசீனிக்கப்படுகிறார், அவரிடம் கரிசனமாக இருந்த கதைசொல்லியை தவறாக புரிந்து கொண்டு அடிக்கிறார், அவரைப் பற்றி பேசும் கதைசொல்லிசிலர் ஊரில் குடும்பம், உறவு என பாதுகாப்பாக இருந்து விட்டு அமெரிக்காவின் தனிமையில் மாட்டிக் கொள்ளும் போது மனம் தடுமாறி முன்னுக்கு பின் முரணாக நடந்து கொள்கிறார்கள், அது அவர்களின் தவறல்லஎன்கிறார்.

மனிதன் தன்னை உணர்ந்து நிதானமாக இருக்கும் போதும் கோமாளியாக இருக்கிறான் - சுயகட்டுப்பாடும் கரார்தன்மையும் தெளிவும் மிக்க பிராவோ அபேயின் மற்றொரு வடிவம். அவனும் அதிகம் மக்களோடு பழகுவதில்லை. நாவல் எழுதும் கலையை அவன் கதாபாத்திரங்களின் பரஸ்பர மோதலாகக் கண்டு அதை எளிமைப்படுத்த ஒரு சூத்திரத்தை வகுக்கிறான். அதையே ஒரு சார்ட்டில் பல வட்டங்களாக வரைந்து, ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு நிறம் வழங்கி, இந்த பாத்திரங்கள் வரும் இடங்களில் காட்சிகளில் என்னென்ன உணர்ச்சிகள் தோன்றும் என வரையறுக்கிறான். இந்த அறிவியல் நுட்பத்தைக் கண்டு கதைசொல்லி வியக்கிறார், பிராவோவை அவர் ஒரு மேதை எனக் கொண்டாடுகிறார், எல்லாரிடமும் அவனது புகழை கொண்டாடுகிறார் (இது போகும் போக்கைப் பார்த்தால் பிராவோ சொதப்பப் போகிறானோ என நமக்குத் தோன்றும், அப்படியே நடக்கிறது). பிராவோ அடுத்து வரும் வாரங்களை அறையில் தனியாக கழிக்கிறான், தினமும் ஒவ்வொரு மணிநேரத்தையும் நாவலை வடிக்க செலவழிக்கிறான். இதையும் கதைசொல்லி எண்ணி சிலாகிக்கிறார், ஒருநாள் பிராவோ ஒரு பெண்ணைத் தழுவி நடந்து செல்வதைப் பார்க்கும் வரையில். இப்பெண்ணுடன் தான் அவன் ஒரு மாதமாக அந்த அறையில் அடைந்து கிடக்கிறான், அவளை அவன் ஆரம்பத்தில் தன் நாவலை தட்டச்சும் நோக்கில் அழைத்து வந்ததாக (இங்கு தஸ்தாவஸ்கி நமக்கு நினைவு வருகிறார்) கதைசொல்லிக்கு தெரிய வருகிறது. பிராவோவின் மனைவி பிற்பாடு வருகிறாள். அதற்கு முந்தின இரவே அவன் அப்பெண்ணை வெளியேற்றி விடுகிறான். இந்த கூத்துகளுக்கு நடுவே அவன் தன் நாவலையும் எழுதி முடித்து விட்டான். ஆனால் இவ்வளவு அபாரமான திட்டமிடல்களுக்குப் பின்னரும் நாவல் முழுத்தோல்வியாக முடிகிறது. அது அவன் எழுதியவதிலேயே மிக மட்டமான நாவல் என அவன் மனைவி தெரிவிக்கிறாள், அதை பிராவோவும் ஏற்கிறான். தன் நாவல் ஏன் சரியாக வரவில்லை என அவனுக்குப் புரியவில்லை.
 இங்கு மற்றொரு விசயத்தையும் நான் குறிப்பிட வேண்டும்: எழுத்தனுபவத்தின் மாயவினோதப் போக்குகளை விவரிக்க முடியாது. அசோகமித்திரன் எதையும் தூலமாக காட்சிபூர்வமாக சொல்ல விழைபவர். அதனாலேயே அவர் பிராவோவின் படைப்பாக்கத் தோல்வியை காட்சிபூர்வமாக நமக்கு உணர்த்த காமத்தை கொண்டு வருகிறார். அவனுக்கு நேரும் அந்த பாலியல் விபத்தை (தட்டச்சுப்பவளுடனான கள்ள உறவு) கூடவே குறிப்பிடுகிறார். எப்படி காமத்தை முறைப்படுத்த முடியாதோ அதே போல எழுத்தையும் ஒரு சூத்திரமாக வகுத்திட முடியாது என்கிறார். அப்படி செய்ய முயலும் போது வாழ்க்கை பெரிய வேடிக்கையாகப் போய் முடிகிறது என அதை அசோகமித்திரன் பகடி பண்ணுகிறார் (அமெரிக்காவின் புனைவு எழுத்து பட்டறைப் பண்பாட்டை, அந்த எழுத்து சந்தையை அவர் இங்கு கேலி செய்கிறார் என எடுத்துக் கொள்ளலாமா?)

கருணை வடிவானவர்களும் கோமாளியாகிறார்கள் - கதைசொல்லி மற்றும் ஜப்பானிய பெண் கவிஞர் கஜுகோவையும் இந்த கட்டற்ற அன்பாளர்கள் / கருணையாளர்களின் பட்டியலில் சேர்க்கலாம். கஜூகோவுக்கும் தவறானவர்களை (அபே) உதாசீனிக்கத் தெரியும்; கிட்டத்தட்ட எல்லாரையும் அரவணைத்து முத்தமிட்டு அன்பு பாராட்டத் தெரியும். அவளது ஜனநாயக முத்தங்கள் முத்தத்தையே முத்தமல்லாமல் ஆக்குகின்றன. அவள் தனது கவிதைகளை நாடகமாக, கன்னாபின்னாவென்று எந்த வடிவ ஒழுங்கோ இலக்கோ அல்ல நாடகமாக, அரங்கேற்றுகிறாள். ஒரு பாரில் பாரம்பரிய ஜப்பானிய உடையில் தோன்றி கவிதை வாசிக்கிறாள். பார்வையாளர்களாக வந்திருப்பவர்களுக்கு இரண்டு கோப்பை மது இலவசம் என்பதால் யாரும் அந்த கவிதைகள் மோசமாக உள்ளதை பொருட்படுத்தவில்லை. அவளும் கூடத் தான். அவளுக்கு அது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம். அவள் ஒரு போலியான இலக்கியவாதி அல்ல, ஆனால் எந்த மதிப்பீடுகளையும் வைத்து வாழ்க்கையை அளந்து பார்க்காத பெண் - எதுவுமே ரொம்ப முக்கியமில்லை, எதுவுமே ரொம்ப முக்கியமற்றதும் இல்லை என நினைப்பவள். இது ஒருவித கோமாளித்தனம்.
கதைசொல்லி ஆரம்பம் முதலே அனைவரிடமும் அன்பு பாராட்டுகிறவராக வருகிறார் - இதை அனைவரையும் மட்டற்று நேசிக்கும் மனப்போக்கு எனக் கொள்வதா அல்லது எல்லாரிடமும் இசைவாக செல்லும் போக்கு என்பதா?
 அவருடைய வாழ்க்கையில் வந்து செல்லும் கிட்டத்தட்ட எல்லாரையும் அவர் எந்த மதிப்பீடும் இல்லாமல் தான் ஏற்கிறார். அவர் அப்படி திறந்த மனம் கொண்டவர் என்பதால் பலவிதமான ஆட்கள், கவனத்தையும் அக்கறையையும் கோரும் ஆட்கள், அவரை தொடர்ந்து நாடுகிறார்கள். கதவில்லாத ஒரு விடுதியைப் போல இருக்கிறார். அசோகமித்திரன் இதையும் பகடி பண்ணுகிறார் என்பது தான் சிறப்பு. வெண்டுரா எனும் கறுப்பர் தன் ஊரில் பிரபல கவிஞன். ஆனால் அமெரிக்காவில் தனிமையில், ஆங்கிலத்தில் பேசத் தெரியாத பரிதவிப்பில், அவன் இருக்கையில் கதைசொல்லி அவனுக்குத் துணையாகிறார். மிஸிஸிப்பி நதியில் அவர்கள் படகில் போகையில் அவன் தொடர்ந்து வைனைக் குடித்து மொத்தத்தையும் வாந்தி எடுக்க கதைசொல்லி அதை கையில் ஏந்திக் கொள்கிறார். அந்த குழுவின் வழிகாட்டியுடன் சேர்ந்து தரையை சுத்தம் பண்ணி, வெண்டுராவையும் துடைத்து விடுகிறார். அதன் பிறகு வெண்டுரா வந்து அவருக்கு நன்றி சொன்னாலும் அன்பின் மிகுதி தருகிற அபத்தமான துன்பங்களையும் அசோகமித்திரன் சுட்டிக்காட்டுகிறார்

இலாரியா எனும் அழகிய இளம்பெண்ணும் கதைசொல்லிக்கு தோழியாகிறார். அவள் பல்கலைக்கழக மாணவி. தான் வேலை செய்து சேர்த்த பணத்தைக் கொண்டு புனைவும் கலையை முறையாக கற்பதற்கு வந்திருக்கிறாள். அவள் ஒரு மெக்ஸிக்கனை காதலித்து ஏமாறுகிறாள். அந்த காதல் தோல்வி அவளை உருக்குலைக்கிறது. அவளால் தன் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. இதைச் சொல்லி அவள் கதைசொல்லியிடம் அழுகிறாள். அவர் சொல்கிறார்: “துக்கத்தை மட்டும் தனிமையில் தான் புரிய வேண்டும். துக்கத்தைப் பங்கிட்டு கொள்ளவே முடியாது.” இது நாவலில் ஒரு முக்கியமான வாக்கியம். மற்றொரு முறை அவள் தன் துக்கத்தை பகிர்ந்து கொள்ளும் போதும் கதைசொல்லி இது வெறும் மயக்கம், துக்கம் என்பது ஒரு கற்பிதம் என்கிறார். துக்கத்துக்கு நாமாக இடமளித்தால் ஒழிய அது நம்மிடம் வராது, நமது தெளிவின்மையே நம்மை திரும்பத் திரும்ப ஏமாற்றங்களை நோக்கித் தள்ளுகிறது என்கிறார். இதை நான் அசோகமித்திரன் கருத்தாக அல்ல, கதைசொல்லியின் பார்வையாகவே கொள்கிறேன். இதுவே இந்நாவலின் மையப்பார்வையாகவும் உள்ளது. இதை மேலும் விளக்குவது அவசியம்.

(தொடரும்)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...