Skip to main content

குழந்தைகளின் மரணங்கள்


தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் 11 குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்திருக்கிறார்கள் என்கிறார்கள். அவர்களில் 3 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர். 4 பேர் காப்பாற்றப்பட்டும் இறந்து போயிருக்கின்றனர். காப்பாற்றப்பட்ட குழந்தைகளும் கூட 15-25 அடி ஆழமுள்ள ஆழ்துளைகளில் விழுந்தவர்கள். அவர்களை விழுந்த மூன்று நான்கு மணிநேரங்களுக்குள் மீட்டு விட்டனர். நேரம் ஆக ஆக குழந்தைகள் தப்பிக்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து போகிறது என ஆழ்துளையில் விழுந்த குழந்தைகளை மீட்கும் எந்திரத்தை கண்டுபிடித்த மணிகண்டன் சொல்கிறார்
மணப்பாறை அருகே நடுக்காட்டிப்பட்டியில் (தற்போது இறந்து போயுள்ள) சிறுவன் சுஜித் விழுந்த ஆழ்துளைக் கிணறு வெகு ஆழமானது; மேலும் மழை பெய்து நிலம் ஈரமாகி சுலபத்தில் இளகக் கூடிய நிலையில் இருந்தது. அவன் விழுந்து பல மணிநேரங்களுக்குப் பிறகே மீட்புப்பணி தொடங்கியது. அப்போதும் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் குழிக்குள் மண் சரிந்து அவன் மேலும் கீழே 90 அடி ஆழத்துக்கு சென்று விட்டான். இப்படி சுஜித்தின் விசயத்தில் ஆரம்பத்தில் இருந்தே அவனைக் காப்பாற்றும் வாய்ப்பு மிகவும் குறைந்தே இருந்தது
ஆனால் அரசு எந்திரம், அமைச்சர்கள், ஊடகங்கள், ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் இந்த மீட்பு நடவடிக்கைகளில் இருந்ததால் நாம் அவனை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என நம்பத் தொடங்கினோம். போகப் போக சமூகவலைதளங்களில் நமது பரிதவிப்பு அரசின் மீதும், மீட்புப்படையினர், அதிகாரிகள் மீதும் கோபமாக திரும்பியது. அவர்கள் தம்மால் முடிந்ததை செய்தார்கள், அவர்களின் கவனக்குறைவினாலோ அக்கறையின்மையினாலோ திறமையின்மையாலோ சுஜித் இறக்கவில்லை என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்

குழந்தைகள் சம்மந்தப்பட்ட விபத்துகளில் நாம் கையாலாகாத நிலையில் மாட்டி தத்தளிக்கிறோம். இது இயல்பே. ஆனால் இங்கு நாம் யாரையும் சுலபத்தில் பழிக்க முடியாது. யாரை பழிப்பது?
அந்த ஆழ்துளைக் கிணறை தோண்டி விட்டு கான்கிரீட் இட்டு மூடாமல் சென்றவரையா? இப்படி ஒரு ஆழமான துளையை தம் சொந்த நிலத்தில் (வெறுமனே மண்ணை இட்டு மூடி) விட்டு வைத்திருந்த குழந்தையின் பெற்றோர்களையா? அவர்களைப் பழிக்கலாம். ஆனால் பல வருடங்களாக மண்ணிட்டு மூடப்பட்டு அந்த ஆழ்துளையின் மீது மக்கள் நடந்து சென்றிருக்கிறார்கள். அதை ஒட்டி விவசாயம் நடந்திருக்கிறது. அது ஒரு ஊடுபாதையாக இருந்திருக்கிறது. அதிகமாக பெய்த மழை மண்ணை இளக வைத்திருக்காவிடில் சுஜித் விழுந்திருக்க மாட்டான். சுஜித்தின் அப்பாவும் இதையே தான் சொல்கிறார். இத்தனை வருடங்களாக இளகாத மண் இப்போது இப்போது இளகி குழந்தை அதற்குள் மாட்டிக் கொள்ளும் என சத்தியமாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கூடுதல் துரிதத்துடன் இயங்காத மீட்புப்படையினரையும் அரசு எந்திரத்தையுமா பழிக்கப் போகிறோம்?
அவர்கள் தமது செய்முறைப்படி செயல்பட்டிருக்கிறார்கள். மணிகண்டனின் கருவியை விட்டம் துளையின் விட்டத்தை விட அதிகமாக இருந்ததால் அது வேலை செய்யவில்லை. ஈரமான மண் தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது. பக்கத்தில் ஒரு துளையை இடலாம் என்றால் அங்கே பாறைகள் அதிகம். எந்திரமே பழுதாகி விடுகிறது. வழக்கமான வறட்சியான சற்றே இறுக்கமான பாறைகள் இல்லாத நிலமென்றால், குழந்தை விழுந்த சில மணிநேரங்களிலே அவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தால் காப்பாற்றி இருப்பார்கள்.
தனது பிம்பத்தைப் பற்றி அதிகம் கவலைப்படும், குழந்தையின் உடம்பை பொதுமக்களுக்கு காட்டாத அரசையா? ஆம், இன்றுள்ள உணர்ச்சிகரமான நிலையில் எந்த அரசுமே அப்படித் தான் செயல்பட முடியும். ஒரு குழந்தையை கூட காப்பாற்றத் தெரியாத கையாலாகாத அரசே என கோஷம் எழும்ப எவ்வளவு நேரம் ஆகும் சொல்லுங்கள்?
ஆம், இனிமேல் அந்த பகுதி மக்கள் கூடுதல் சுதாரிப்புடன் இருப்பார்கள். ஆனால் விபத்துகள் நடந்தே ஆகும். இந்த சம்பவத்தை தமிழகத்தில் ஒரு குடும்பம் டிவியில் நேரலையாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்போது அந்த தம்பதியின் ரெண்டு வயது குழந்தை குளியலறை டிரமுக்குள் விழுந்து இறந்து போயிருக்கிறது. இதை எப்படி புரிந்து கொள்வது?
 குழந்தையை கூட கவனிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்களே என நாம் கொதிக்கலாம். ஆனால்  இப்படித் தான் நிகழ்கிறது. நான் என்னுடைய நாயை எப்போதும் என் பார்வை வட்டத்தில் வைத்திருப்பேன், அவன் தனியாக இருந்தால் எதாவது சேட்டை பண்ணுவான் என்பதற்காக. அதாவது நான் வீட்டிலிருந்தால் 24 மணிநேரமும் அவன் என் கவனத்தில் இருப்பான். தூங்கும் போது கூட அவன் அருகில் இருக்கிறானா என தேடுவேன். அப்படி இருந்தும் கூட நான்கு வருடங்களுக்கு முன்பு அவனை நான் வெளியே அழைத்து சென்றிருந்த போது ஒரு நிமிடம் என் போனைப் பார்த்து விட்டு தலையை தூக்கினால் அவனைக் காணவில்லை. எதையோ துரத்தி பக்கத்து தெருவுக்கு ஓடி விட்டான். கடைசில் எப்படியோ அலைந்து திரிந்து அவனை கண்டுபிடித்தேன்
இது ஒரு செல்லப்பிராணியை பொறுத்தமட்டில் சாத்தியம். ஆனால் குழந்தைகள் சற்றே தற்சார்பு கொண்டவர்கள். பசியெடுத்தால் ஒழிய குழந்தைகள் பெற்றோரைப் பற்றி யோசிக்கப் போவதில்லை. அவர்கள் தனியாக விளையாட, உலகை நாடி அறிய விரும்புவார்கள். இதனாலே அவர்கள் அதிகமாக விபத்தில் மாட்டுகிறார்கள், தொலைந்து போகிறார்கள். நான் பெற்றோர்களை ஒருநாளும் பழிக்க மாட்டேன்
தொடர்ந்து மழைபெய்தால் சற்றே பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்து மக்கள் சாவதில்லையா? ஏன் இத்தனைக் காலமும் பழைய கட்டிடங்களில் வசித்தீர்கள் என கேட்க முடியுமா?
 என் நண்பர் தன் சகாக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. அது வெளியே ஓடிப் போன போது சாலையில் விரைந்து வந்த லாரி மோதியதில் இறந்து போனது. என் நண்பர் அந்த குற்றவுணர்வில் இருந்து மீளவே இல்லை
ஒரு புள்ளிவிபரப்படி உலகம் முழுக்க வருடத்துக்கு ரெண்டு மில்லியனுக்கு அதிகமாக குழந்தைகள் ஆபத்தான விபத்துகளில் மாட்டி காயப்படுகிறார்கள். இவர்களில் சிறு குழந்தைகளைப் பொறுத்தமட்டில் 40% மேல் இறந்து போகிறார்கள். நவீன வசதிகள் பொருந்திய அமெரிக்காவில் வருடத்திற்கு 12,000 குழந்தைகள் இது போன்ற விபத்துகளில் இறந்து போகிறார்கள். நான்கு வயதுக்கு உள்ளான குழந்தைகள் அமெரிக்காவில் இறந்து போவதற்கு வீட்டு நீச்சல் குளத்தில் மூழ்குவது பிரதான காரணம் என்கிறார்கள். (பாடகி சித்ராவின் குழந்தை இறந்து போனது நினைவுள்ளதா?) அதுவும் மிகச்சிறு குழந்தைகள் மூழ்குவதற்கு ஒரு அங்குல அளவுக்கு நீர் போதும் என்கிறார்கள். அமெரிக்காவில் வருடத்துக்கு 100 குழந்தைகள் சைக்கிள் ஓட்டிச் செல்லும் போது விபத்தாகி இறக்கிறார்கள். அதாவது சைக்கிளுக்கு என தனிபாதைகள் இருக்கும் போதே. ரெண்டு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் வருடாவருடம் சைக்கிள் ஒட்டியே கடும் காயங்களுக்கு ஆளாகிறார்கள் (இதற்காக குழந்தைகள் சைக்கிள் ஓட்டவே கூடாது என தடை செய்ய முடியுமா?) என்.டி.டி.வி இணையதளத்தில் உள்ள விபரப்படி, இந்தியாவில் தினமும் 20 குழந்தைகள் சாலை விபத்தில் மரணமடைகிறார்கள்.
ஏன் குழந்தைகள் விபத்துகளில் அதிகமாக சிக்கி உயிரழக்கிறார்கள்?
1) அவர்களின் பலவீனமான உடலமைப்பு - குழிகளில் விழுந்து மாட்டிக்கொள்ள அவர்களுக்கே சாத்தியம் அதிகம்.
2) அனுபவமின்மை, துடுக்குத்தனம். அபாயமான எதையும் நாடும் போக்கு.
3) என்னதான் குழந்தைகள் என வகைப்படுத்தினாலும் அவர்கள் மனதளவில் வளர்ந்து வரும் மனிதர்கள். பெற்றோர் / மூத்தோர் / ஆசிரியர்கள் கண்காணிப்பில் அவரக்ள் இருந்தாலும் அவர்கள் முழுக்க முழுக்க தம் தேர்வுகள், தேடல்களின் படித் தான் தன்னிச்சையாக இயங்குகிறார்கள். அதுவே அவர்களுக்கு பிடித்திருக்கிறது. இந்த தற்சார்பு நிலை முழுமையானதோ தகுதியானதோ அல்ல. தற்சார்பாக இருக்கும்படியான மனவளர்ச்சியோ உடல் வளர்ச்சியோ இல்லை எனிலும் அப்படி இருப்பதற்கான விழைவு அவரக்ளுக்கு அதிகம். இந்த இடைப்பட்ட மனப்போக்கு (பெற்றோர்களை சார்ந்து சார்ந்திராமலும் இருக்கும் போக்கு) அவர்களை அதிகமாக விபத்தில் மாட்ட செய்கிறது.
4) நாம் என்னதான் முயன்றாலும் இந்த உலகை முழுக்க குழந்தைகளுக்கு பாதுகாப்பாக மாற்ற முடியாது. இது வளர்ந்தவர்களுக்கான உலகம். இதை உணரும் குழந்தைகள் ஒவ்வொரு கணமும் தம்மை வளர்ந்தவர்களாக மாற்றிக் கொள்ள தவிக்கிறார்கள் (விளையாட்டுகளே அத்தகைய ஒத்திகைகள் தானே). சைக்கிள் ஓட்ட அனுமதித்தால் ஸ்கூட்டர் ஓட்டக் கிடைக்காதா என ஒரு பத்து வயதுப் பையன் ஏங்குகிறான். ஸ்கூட்டரைக் கொடுத்தால் கார் ஓட்ட முடியாதா என கனவு காண்பார்கள். நிறைய வீடுகளில் அப்பா அம்மாவிடம் சொல்லாமலே சாவியை எடுத்துக் கொண்டு வண்டியில் ஏறி கிளம்பி விடுகிறார்கள். பெற்றோர்களால் இவர்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

முப்பது வயதுக்கு மேலானவர்கள் சாலை விபத்தில் மரிக்கும் போது கூட தாய்மார் அந்த இழப்புணர்வில் இருந்து தம் இறுதி மூச்சு வரை மீள்வதில்லை. தாய்க்கு எப்போதுமே நாம் கைக்குழந்தைகள் தாம். சுஜித் விசயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே அவன் ஒரு கைக்குழந்தை. இது தவிர்க்க முடியாத மனநிலை. ஆனால் நாம் இதில் இருந்து மீண்டெ ஆக வேண்டும். மீண்டும் மீண்டும்இப்படி செய்தால் காப்பாற்றி இருக்கலாமோஎன மனதை உழல விடுவது, பேஸ்புக்கில் இது சம்மந்தமான பதிவுகளையே தேடிப்படிப்பது, நம் கூட்டு குற்றவுணர்வுக்கு வடிகால் தேடுவதற்கே.

 இது யாருடைய குற்றத்தினாலும் விளையவில்லை. மெல்ல மெல்ல இந்த துக்கத்தை நாம் கடந்து போய் விட வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...