Skip to main content

சாகித்ய அகாதெமியிடம் (கூடவே அரசிடமும்) வைக்க வேண்டிய கோரிக்கைகள்


1) சாகித்ய அகாதெமி பரிசைப் பற்றி இளங்கோ கிருஷ்ணன் சொல்வதைப் போல வருடத்திற்கு ஒரு பரிசு என்பதை நான்கு அல்லது ஐந்து பரிசுகளாக வகுத்துக் கொள்ளலாம். நாவல், சிறுகதை, கவிதை, உரைநடை, விமர்சனம் என்பதோடு, எதிர்காலத்தில், பதிப்பிக்கப்பட்ட திரைக்கதைக்கும் ஒரு விருதை வழங்கலாம். இது வருங்காலத்தில் தமிழில் திரைக்கதை எனும் துறை ஒரு எழுத்துத் துறையாக மாற உதவும்.
2) நிச்சயமாக பரிசுத்தொகையை அதிகரிக்க வேண்டும். 25 லட்சம் ஒரு நல்ல தொகை. அல்லது வேறு சில மாநில அரசுகள் பண்ணுவதைப் போல பரிசு பெறும் படைப்பாளிக்கு ஒரு புது வீட்டை அளிக்கலாம்.
3) எப்படி யுவ புரஸ்கார் எனும் வகைமை உள்ளதோ அதே போல பெண் படைப்பாளிகள், மாற்றுப்பாலினத்தோர் எழுத்துக்களுக்கென தனி பரிசுகளை அகாதெமி உருவாக்கலாம்.
4) விருதாளர்களை பாராளுமன்றத்தில் வைத்து பிரதமர் கௌரவிக்கலாம். இது தேசம் முழுக்க ஒரு கவனத்தை உண்டு பண்ணும். உலக அளவில் கூட பேசப்படலாம்.

5) விருதுபெற்ற படைப்பாளிகளை மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் வருடத்திற்கு சில மாதங்கள் வருகை தரும் பேராசிரியர்களாக நியமித்து, படைப்பிலக்கியம் சார்ந்து உரைகளை வழங்க செய்யலாம். இதை பல்கலைக்கழக விதிமுறை ஆக்க வேண்டும்.
6) இதைத் தொடர்ந்து இந்த படைப்பாளிகளின் பெயரில் ஆய்வு நல்கைகளை அமைத்து, அவர்களின் எழுத்து குறித்து மாணவர்கள் ஆய்வு செய்து நூல்களை பிரசுரிக்க தூண்டலாம். இந்த பணியை அகாதெமியிடம் இருந்து மத்திய பல்கலைக்கழகங்கள் எடுத்துக் கொள்வதே சிறப்பாக இருக்கும்
7) இதைத் தொடர்ந்து பரிசீலனைக்கு உள்ளான, ஆனால் பரிசு வழங்கப்படாத படைப்பாளிகளின் பட்டியலை எதிர்கால நம்பிக்கையாளர்கள் என அறிவிக்கலாம். மேற்கில் நடப்பது போல இவர்கள் 3-6 மாதங்கள் தங்கி எழுதுவதற்கு அமைதியான ஊர்களில் விடுதிகளை அமைத்துத் தரலாம்.
8) விருது பெற்றவர்களின் படைப்புகளை மொழியாக்கும் பணியில் அகாதெமி தீவிரம் காட்ட வேண்டும். விருது பெற்ற படைப்பு என்றில்லாமல் அன்னாரது அனைத்து படைப்புகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும். வருடத்திற்கு இவ்வளவு நூல்களை மொழியாக்கி வெளியிடுவோம் என முன்னமே அகாதெமி அறிவித்து அந்த இலக்கை அடைய முயல வேண்டும். இப்போதைக்கு அகாதெமியின் பதிப்புப் பணியில் உள்ள மெத்தனம் தவிர்க்கப்பட வேண்டும்.
9) பள்ளி துவங்கி கல்லூரி, பல்கலைக்கழகம் வரை எல்லா பாடத்திட்டங்களிலும் அகாதெமி விருதாளர் ஒருவரின் படைப்பையாவது சேர்க்க வேண்டும் என கல்வித்துறை ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். இதில், நிச்சயமாக, மொழியாக்கப்பட்ட அகாதெமி விருது பெற்ற புத்தகங்களையும் கூடுதலாக சேர்க்கலாம். அதாவது மாணவர்கள் ஒரு தமிழ் விருதாளரின் படைப்புடன் மராத்தி, குஜராத்தி, தெலுங்கு போன்ற மற்றொரு மொழியின் படைப்பையும் மொழியாக்கத்தில் படிக்க வேண்டும். இதன் மூலம் கணிசமான இளம்தலைமுறையினர் விருது பெற்ற படைப்பாளியை வாசித்தறிய வழிவகை ஏற்படும்.
10) தேர்வுக்குழுவில் உள்ளவர்கள் தமது அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து முடிவெடுக்க மாட்டோம் என எழுத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒவ்வொரு முறை பரிசு அறிவிப்பு வெளியிடும் போது இந்த ஒப்புதலையும் வெளியிட வேண்டும். முழுக்க அரசியல் சார்பற்ற நிலை சாத்தியமில்லை என்றாலும் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தவும் இலக்கிய பரிசுகள் அரசியல் சார்பற்றவை எனும் நம்பிக்கையை பரப்பவும் இது உதவும். இப்போதுள்ள நிலை என்ன? தேசிய விருதுகளில் இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் வலதுசாரிகள் தம் தரப்பினரை தேர்வுக்குழுவுக்குள் எப்படியாவது அனுப்ப முடியுமா எனப் பார்க்கிறார்கள் என நினைக்கிறேன். அகாதெமி விருது என்பது இரு அரசியல் முனைப்புகளுக்கு இடையிலான போட்டியாக மாறக் கூடாது.  

இதையெல்லாம் ஒரு அரசு ஏன் செய்ய வேண்டும் எனும் கேள்வி எழலாம்:
1) படைப்பாளிகள் வெறுமனே கதை, கவிதை எழுதுபவர்கள் மட்டுமல்ல, அவர்கள் சமூகத்தின் நினைவுகளை பதிவு செய்பவர்கள்; பண்பாட்டை செழுமையாக்குபவர்கள்; மொழியை உயிர்ப்பாக வைத்திருப்பவர்கள். நல்ல தமிழை நாம் எப்போதும் நல்ல கதைகள், கவிதைகள் வாசித்தே கற்றுக் கொள்கிறோம் (நல்ல பேச்சாளர்களையும் கேட்டும் தான்.). 
2) எழுத்தாளன் அறிவைப் பெருக்குகிறான். அறிவுப்பணிக்காக அவன் எப்போதுமே இங்கு அங்கீகரிக்கப்படுவதில்லை.
3) அரசியலில், மேடைப்பேச்சுகளில், கல்விப்புல உரையாடல்களில் தோன்றும் கருத்துக்கள் பெரும்பாலும் இலக்கிய, விமர்சன எழுத்துக்களில் இருந்தே தோன்றுகின்றன. தமிழகத்தை எடுத்து கொண்டால் தமிழ் தேசியம், திராவிடம், சமூக நீதி என்பதெல்லாம் சில அரசியல் தலைவர்கள் கண்டுபிடித்தது அல்ல. இச்சொற்கள், இக்கருத்துக்களை பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தே பல சிந்தனையாளர்கள் பல நூறு பக்கங்களில் எழுதி எழுதி மெருகேற்றியவை. திமுக ஆட்சிக்கு வந்த துவக்க காலத்தில் தம்மை வடிவமைத்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கியது. ஆனால் போகப் போக அது இந்த கருத்து பங்களிப்பாளர்களை மறந்து நடைமுறை அரசியலில் அதிக அக்கறை செலுத்தியது. அதிமுகவுக்கு இந்த புரிதல் என்றுமே இருந்ததில்லை என்பதால் ஒரு லும்பன் பண்பாட்டை அவர்கள் இங்கு வளர்த்தார்கள் - அங்கிருந்தே மண்சோறு சாப்பிடுவது, தெர்மோக்கோலை மிதக்க விடுவது போன்றஅறிவுச்செயல்பாடுகள்முன்னிலை பெற்றன. சமூக சீரழிவுக்கும் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுவதற்கும் ஒரு நுண்ணிய தொடர்பு உள்ளது
இதே போல சினிமா, இசை, ஓவியம் உள்ளிட்ட பல கலை வடிவங்களுக்கும் எழுத்துக்கும் முக்கியமான தொடர்பு உள்ளது. நல்ல இலக்கியம் கொண்டாடப்படும் நாட்டில் சினிமாவும் மேம்பட்டதாக இருக்கும். இசை, ஓவியம் என பல கலைவடிவங்களும் மேம்படும். அனைத்துக்குமான அடித்தளம் எழுத்து தான்.
சமூக பண்பாட்டு அறிவுத்தள சீர்கேட்டை ஏற்பவர்கள் தாம் எழுத்தாளனை வெறுமனே பொழுதுபோக்கு கலைஞனாக, கதை எழுதுபவனாக பார்க்க விரும்புகிறார்கள்


இதனால் தான் ஒரு அரசு, பொறுப்பை உணர்ந்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட அரசு, எழுத்தாளர்களை போற்றிப் பாதுகாக்கும். இல்லாவிட்டால் நாம் விளங்க மாட்டோம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...