முதல் நாள் வாசிப்பின் போது நான் நேஹாவிடம் ஒரு பொய் சொன்னேன், “இந்த குழுவில் இருப்போர் ஒரு விதியை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு வாசிப்பு முடிந்ததும் அன்றைக்கு வாசித்ததைப் பற்றி அடுத்த நாள் ஒரு சிறிய குறிப்பு எழுதிக் காட்ட வேண்டும்.” நேஹா அதை நிஜமாக எடுத்துக் கொண்டு அடுத்த நாள் எழுதிக் கொண்டு வந்தார். அதை சற்று விரிவுபடுத்தி தரக் கேட்டேன். அப்படித் தான் நேஹா இந்த நூலுக்காக எழுதிய முன்னுரை தோற்றம் கொண்டது. அவர் அதன் பிறகு மிகுந்த ஆர்வத்துடன் அந்த சொற்ப காலத்தில் மூன்று அத்தியாயங்கள் எழுதினார்.
இந்த புத்தகத்தில் கலை, பெண் மனம், புகைப்படக் கலைஞனின் அறம், அரசியல், பெண்ணியம், கல்வி என பல தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன என்றாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமாக தோன்றுவன இரண்டு அத்தியாயங்கள்.
ஒன்று புல்வாமா தாக்குதலை ஒட்டி மரணம் பற்றி நானும் ஆயுஷும் எழுதின அத்தியாயங்கள். புல்வாமாவை அடுத்த ஒரு வாரத்தில் நாடெங்கும் அதே பேச்சு தான். தொலைக்காட்சிகள் தொடர்ந்து ராணுவ வீரகளின் உடல்களை, ஒப்பாரி வைக்கும் உறவுகளை, பழிவாங்கும் சூளுரைகளை காட்டி வந்தன. இந்த ஒளிபரப்பை தனது அப்பா வெறி பிடித்தாற் போல டிவியில் பார்ப்பதாகவும் அது தனக்கு எரிச்சலூட்டுவதாகவும் ஆயுஷ் சொன்னான். நாடே அப்படித் தான் பார்க்கிறது, அது ஒரு கூட்டு இரங்கல் நிகழ்வு என நான் சொன்னேன். அப்போது நாங்கள் இதைப் பற்றி மேலும் ஆராய வேண்டும் என முடிவெடுத்தோம். ஹைடெக்கர் மரணம் பற்றி எழுதுள்ளதை அடுத்த நாட்களில் தொடர்ந்து வாசித்தோம். வீட்டுக்குப் போய் குறிப்புகள் எடுத்து புல்வாமாவில் தொடங்கி மரணம் நம் ஒவ்வொருவருக்கும் எப்படியான அர்த்தத்தை அளிக்கிறது, ஏன் மனிதர்களுக்கு மரணம் இவ்வளவு ஆர்வத்தை கிளப்புகிறது, மரணத்தைப் பற்றி சிந்திப்பதால், மரணத்தின் வாயிலில் போய் நின்று எட்டிப் பார்க்கையில் நாம் அடையும் பயன்கள் என்ன என தத்துவார்த்தமாக இரு அத்தியாயங்கள் எழுதினேன்.
மற்றொரு நாள் சந்திப்பின் போது ஜோஷ்வா எனும் தலித் ஆய்வாளரான நண்பர் ஒருவர் எங்களுடன் வாசிப்பில் கலந்து கொண்டார். தத்துவம் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், ஒரு மனிதனின் சுயம் என்பதை தனிமனித பார்வையில் இருந்து மட்டுமே காண்பது சரியா, ஒரு தலித்தின் சுயம் / இருப்பு சமூக உறவாடல்களால் கீழ்மையாக கட்டமைக்கப்படும் போது ஹைடெக்கரின் தத்துவத்துக்கு அந்த பின்புலத்தில் என்ன மதிப்பு இருக்க முடியும், இந்த உலகில் நாம் “இருப்பது” மட்டும் நமது அசலான இருத்தல், அங்கு கருத்துக்கள், நம்பிக்கைகள் போன்ற சங்கதிகளுக்கு மதிப்பில்லை, அவை போலியானவை என நீங்கள் எப்படி கூற முடியும், சாதியை நாம் சில கருத்துக்கள், நம்பிக்கைகள் வழித்தானே உற்பத்தி பண்ணி மனிதனை ஒடுக்குகிறோம் என அவர் வினா எழுப்பினார். இக்கேள்விகள் எங்களை அடுத்து வந்த நாட்களில் மிகவும் தொந்தரவு பண்ணின.
ஆக அடுத்தடுத்த கூட்டங்களில் நாங்கள் சாதி குறித்து அதிகமாக விவாதித்தோம். அம்பேத்கரை வாசிக்க என்றே சில வாரங்களை ஒதுக்கினோம். அடுத்து அம்பேத்கரில் இருந்து ஹைடெக்கருக்கு மீண்டோம். ஆளுக்கு ஒரு அத்தியாயம் இதைக் குறித்து எடுத்துக் கொண்டோம். நான் என் அத்தியாயத்தில் இளையராஜா தனது தலித் அடையாளத்தை மறுப்பதன் நியாயம் என்னவாக இருக்க முடியும், சாதி என்பது அடையாளமா அல்லது இருப்பா, சாதி நம் மனதிலும் சமூக உறவாடல்களிலும் இருக்கிறதென்றால், அது நம் இருப்பாக நிச்சயமாக இருக்கிறதா, அரசியலும் இருப்பும் ஒன்றா ஆகிய கேள்விகளை எழுப்பினேன். ஹைடெக்கர் வழியாக பார்க்கையில் சாதியை கடந்த வாழ்வு ஒன்று சாத்தியமாகிறது, ஆனால் அது அதேநேரம் மிகவும் சிக்கலான ஒரு இருப்பு என்பதே என் கண்டடைதல். ஆயுஷும் இதே தரப்பை வேறொரு கோணத்தில் கையாண்டு எழுதி இருக்கிறான்.
நாங்கள் எடுத்துக் கொண்ட புத்தகப் பயணம் நிறைவுற்று விட்டது.
இனி எங்கள் முன் இருக்கும் சவால் இந்த புத்தகம் தரும் அழுத்தத்தை அடுத்த புத்தகத்தின் உருவாக்கத்தை பாதிக்காமல் தப்பித்துப் போவது, அதே களங்கமின்மையுடன் பயமற்ற உற்சாகத்துடன் தொடர்ந்து விவாதிப்பது மற்றும் எழுதுவது. தத்துவத்தை, அது என்ன தான் தீவிரமான கேள்விகளை எழுப்பினாலும், ஒரு ஜாலியான விளையாட்டாக மட்டுமே எடுத்துக் கொள்வது என ஆயுஷ் மற்றும் நேஹாவிடம் இன்று நிகழ்ச்சி முடிந்து டீக்கடையில் அமர்ந்திருக்கையில் சொன்னேன். ஏனென்றால் தீவிரமாக “இருக்கலாம்” அப்படி தீவிரமாக இருப்பதாய் சிந்தனையை தலையில் ஏற்றிக் கொண்டு திரியக் கூடாது, அது போலியானது என்றே ஹைடெக்கரும், இப்போது எங்களுடன் இருந்திருந்தால், சொல்லியிருப்பார். நாங்கள் அடுத்தடுத்த தத்துவ ஞானிகளுக்கு நகர்ந்தாலும் ஹைடெக்கர் அளித்த இந்த ஒளியை மட்டும் தொடர்ந்து கையில் ஏந்தி அணையாமல் இறுதி கொண்டு செல்ல வேண்டும்.