Skip to main content

ஐபேடுடன் புளூடூத் கீபோர்டுகளை பயன்படுத்துவது


இணைய சந்தையில் பத்துக்கும் மேற்பட்ட பலவிதமான புளூடூத் கீபோர்டுகள் கிடைக்கின்றன

Folio வகை: இது ஒரு புத்தகத்தை போல திறந்து மூடுவது - ஒரு பகுதி ஐபேடுக்கான உறை என்றால் மற்றொன்று கீபோர்ட். Logitech Slim Folio இதற்கு நல்ல உதாரணம். லாஜிடெக்கின் கீபோர்ட் பிரசித்தமானது. ஆனால் இதை மடியில் வைத்து ஓரு லேப்டாப்பை போல தட்டச்ச முடியாது. ஆக, மாற்று மடிக்கணினியை பரிசீலித்து வந்த நான் folio கீபோர்ட் வாங்குவதைப் பற்றி எதையும் தீர்மானிக்க முடியாதிருந்தேன். வேறென்னென்ன கீபோர்டுகள் உண்டு எனப் பார்த்தேன்.


Clamshell வகை: உங்கள் மடிக்கணினியில் திரையை மட்டும் பெயர்த்தெடுத்து வெற்றாக்கி விட்டால் வருவது தான் கிளாம்ஷெல் கீபோர்ட். இதில் நீங்கள் ஐபேடை இணைத்து விட்டால் அப்படியே ஒரு மடிக்கணினி போல வேலை செய்யும். கீபோர்டையும் திரையையும் இணைப்பது புளூடூத்.
நான் Logitech Slim Folio வாங்கலாம் என முடிவெடுத்த போது அது அமேசானில் காணாமல் போய் விட்டது (இது அடிக்கடி நிகழ்வதே). சரி உடனடியாக ஒரு கணினி தேவை என்பதால் ஒரு generic சீன கீபோர்டை வாங்கி பயன்படுத்தினேன்.(Keyboard Case Compatible with Ipad என்பது தான் இதன் பெயரே). 
இதன் அனுகூலங்களை முதலில் சொல்கிறேன்:
ஓரளவுக்கு சுமாரான chiclet கீபோர்ட். தட்டச்சுவதில் எந்த சிரமமும் இல்லை, பிரமாதமான சுகானுபவமும் இல்லை. இதன் திரையை 360 கோணத்தில் திருப்ப முடியும் என்பதால் சினிமா பார்க்க, மின்னூலை படிக்க வசதி. இதை நீங்கள் போனைப் போல சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். அமேசானில் மூன்று மாத வாரண்டி தான் கொடுத்தார்கள். அதற்கு மேல் தாங்காது போல என நினைத்தேன். அப்படியே தான் ஆறாவது மாதத்தில் இறுதி மூச்சை விட்டது. இரண்டு பிரச்சனைகள்: சார்ஜ் செய்வதற்கான போர்ட் அகன்று விட்டது. அதை மாற்றவும் முடியாது. புளூடூத் திடீரென கோளாறு பண்ணியது. அதை unpair செய்து, அதை மறக்கும்படி கட்டளையிட்டு பின்னர் நினைவுபடுத்தி ஜோடி சேர்க்கவெல்லாம் முயன்றேன். ம்ஹும். படுத்தே விட்டது

தனியான கீபோர்ட்: இந்த வகையில் கீபோர்டும் ஐபேடும் தனித்தனியாக இருக்கும். இதன் அனுகூலம் நீங்கள் தேவைப்படும் போதெல்லாம் ஐபேடை வாசிக்கவோ படம் பார்க்கவோ எடுத்து வைத்துக் கொள்ளலாம். வளர்ந்து விட்ட உங்கள் மகன் / மகள் சட்டென நொடியில் ஆறுமாத குழந்தை ஆகிடுவதைப் போல. இதிலும் லாஜிடெக் தான் ராஜா.

Logitech K480 தான் இந்தியாவில் கிடைக்கும் தனியான புளூடூத் கீபோர்டுகளில் சிறந்தது, மலிவானதுஆனால் இது ரொம்ப கனமானது. ஐபேடுடன் இதை எடுத்து செல்வது தலைக்கு மேலே ஒரு நாற்காலியை தூக்கிக் கொண்டு உட்கார இடம் தேடுவதற்கு சமம்.

இதன் தட்டச்சு பொத்தான்களும் சௌகர்யமானவை அல்ல. ஒன்று நொச்சு நொச்சு என்று பழைய எந்திர தட்டச்சை போல சத்தம் போடும். அது பழகினாலும் கூட இதன் பொத்தானின் (retro பாணி) குழிவான வட்டமான வடிவம் என் விரல்களை பதம் பார்த்து விட்டது. அதாவது ஒரு பொத்தானை நீங்கள் அழுத்தி விட்டு அடுத்த பொத்தானுக்கு போகும் முன்பு உங்கள் விரல் இடம் பெயருமே, அப்போது விரலின் நுனி இதன் வெளிவிளிம்பில் பட்டு அழுத்தும். உயர்ந்த விளிம்பு என்பதால் மென்மையான காயங்களை ஏற்படுத்தும். நான் எழுதும் வேகத்தில் இதை கவனிக்க மாட்டேன். ஆனால் ஒரு மாதத்தில் என் விரல் நுனியில் நிரந்தரமாகவே ஒரு மெல்லிய வலி, எரிச்சல் ஏற்பட தொடங்கி விட்டது
இந்த பொத்தான்களின் ஸ்பிரிங் போன்ற துள்ளலை நான் விரும்பினாலும், இதில் தொடர்ந்து அநாயசமாக நீண்ட கட்டுரை / நாவல் அத்தியாயங்கள் எழுத முடிந்தாலும், என் விரல்களை ஒரு அன்புக் காதலியை போல கொஞ்சாமல், கோபக்கார மனைவியை போல துன்புறுத்திக் கொண்டே வந்தது ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போய் விட்டது. அப்படித் தான் அடுத்த கீபோர்டுக்கு வந்தேன்.

Magic Keyboard: 
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு இது. தட்டச்ச விரல்களுக்கு வெகுசுகமானது. ஐபேடுக்கான உறை, கிளாம்ஷெல் ஏதும் இல்லை. மெல்லிசானது. எடை மிக மிக குறைவு

நான் இப்போது இந்த மேஜிக் கீபோர்டைத் தான் பயன்படுத்தி வருகிறேன். இதன் நிறைகுறைகளைப் பற்றி பின்னர் எழுதுகிறேன். இப்போதைக்கு இரண்டு விசயங்கள்:
1) இந்த கீபோர்டில் பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ள விதம் வெகுசிலாக்கியமானது. எந்த கீபோர்டுக்கும் உங்கள் விரல்கள் பழக சில நாட்கள் ஆகும். ஆப்பிள் கீபோர்டிலோ பழகவே தேவையில்லை. கைவைத்ததுமே, தொட்டால் பூமலரும் என்பது போல, அவ்வளவு லாவகமாக ஒப்புக் கொடுக்கிறது. கைகளை பரப்பி வைக்கவோ குவிக்கவோ அவசியமில்லை. பொத்தான்களில் விரல்கள் தவறாக பதிந்து எழுத்துப்பிழைகள் நேர்வதில்லை. வேறெந்த கீபோர்டையும் விட வேகமாய் இதில் தட்டச்ச முடிகிறது (ஆயிரம் சொற்களுக்கு முந்தைய கீபோர்டில் இருபது பிழைகள் என்றால் இதில் ஒன்று தான் வருகிறது). விரல்கள் களைப்பதில்லை. ஒரு மெத்து மெத்தென்ற கன்னத்தில் விரல்களால் தட்டுவதைப் போல, தொட்டு சீண்டுவதைப் போல இருக்கிறது.

ஆப்பிள் சார்ஜரில் இதை இரண்டு மணிநேரம் சார்ஜ் பண்ணினால்  ஒன்றிரண்டு வாரங்கள் வரும் என்கிறார்கள்
ஒரு வருடம் வாரண்டி. ஆப்பிள் தயாரிப்புகளை ரிப்பேர் பண்ணுவதெற்கென கடைகளை எல்லா ஊர்களிலும் வைத்திருக்கிறார்கள். அது ஒரு முக்கிய அனுகூலம். இந்த ஆதரவை வேறு சீன கீபோர்டுகளிலோ லாஜிடெக்கிலோ எதிர்பார்க்க முடியாது. அந்த பொருட்களை வாங்கி வருவது பெயர் தெரியாத ஒருத்தருடன் படுக்கைக்கு செல்வதைப் போல. அந்த ரிஸ்கெல்லாம் ஆப்பிளில் இல்லை.

முக்கியமான பிரச்சனை: ஆப்பிள் மேஜிக் கீபோர்ட் Mac மேஜைக் கணினிக்கானது. இதை ஐபேட் உள்ளிட்ட பிற ஆப்பிள் தயாரிப்புகளுடனும் பயன்படுத்தலாம் என்றாலும் கூட. இந்த கீபோர்டின் மின்கலத்தில் எவ்வளவு சார்ஜ் உண்டென நீங்கள் நேரடியாக பார்ப்பதற்கான indicator light இல்லை. ஐபேட் வழியாகவும் கண்டறிய முடியாது. (சமீபத்தைய அப்டேட்டுக்குப் பிறகு அந்த சாத்தியத்தை நீக்கி விட்டிருக்கிறார்கள்.) நான் இது குறித்து ஆப்பிள் கஸ்டமர் கேர் நங்கையிடம் பேசிப் பார்த்தேன். அவருக்கும் தெரியவில்லை. என் மேலாளரிடம் விசாரித்து விட்டு பொடிநடையாய் போனவர் தான். இன்னும் திரும்பவில்லை.


முடிவாக, இப்படி ஐபேடை மடிக்கணினியின் மாற்றாக பயன்படுத்துவது ஒரு மாற்றுசாதிப் பெண்ணை (அதுவும் நமக்கு உயர்சாதி), பெற்றோர் சம்மதமில்லாமல், மணப்பது போன்ற காரியம். அதில் சில சங்கடங்கள், சமரசங்கள் உண்டு. ஆனாலும் அது நிறைவான நல்லனுபவமே என்றால் ஏன்ஓடக்கூடாது, சொல்லுங்க?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...