விரைவில் துவங்க இருக்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா துவக்க மட்டையாளராக களமிறங்குவார். இது ஒரு திடீர் திருப்பம், குறிப்பாக தவன் ஆட்டநிலை காரணமாக நீக்கப்பட்டு அவரிடத்தில் வந்த ராகுலும் வறட்சியை சந்தித்து வந்த நிலையில் இளம் துவக்க மட்டையாளர்களை களமிறக்காமல் ஒரு யு-டர்ன் எடுத்து 32 வயதாகும் ரோஹித் ஷர்மாவிடம் சென்றிருக்கிறார்கள் தேர்வாளர்களும் தலைவர் கோலியும்.
இதுவும் கூட இவர்களாக யோசித்து எடுத்த முடிவாகத் தெரியவில்லை - சமீபமாக சவுரவ் கங்குலி இதை பரிந்துரைக்க ஊடகங்களில் இது ஒரு நல்ல முடிவாக இருக்குமா என சர்ச்சிக்கப்பட்டது. சேவாக்கின் உதாரணத்தைக் கொண்டு ரோஹித்தும் ஒரு அதிரடி துவக்க வீரராக இருப்பார் என ஒரு கனவுக்கோட்டையை ரசிகர்கள் கட்டி எழுப்பினார்கள். இதுவரையிலும் ரோஹித் எண் 5 / 6இல் மட்டுமே ஆட முடியும் என கூறி வந்த இந்திய அணித்தலைமை இப்போது முழுக்க தன் முடிவை மாற்றி உள்ளது. இப்படி இந்திய கிரிக்கெட் அணித்தேர்வில் “லாட்டரிச் சீட்டு விற்பனை” தொடர்கிறது; இந்த முறை ரோஹித்துக்கு பரிசு விழுந்திருக்கிறது, ஆனால் இதுவும் எத்தனை நாளுக்கென தெரியவில்லை.
இங்கு ரோஹித் ஷர்மா ஒரு டெஸ்ட் துவக்க மட்டையாளராக சோபிக்க முடியுமா என பார்க்க போகிறோம். அவருக்கு அதற்கான மனப்பான்மை, பொறுமை, தொழில்நுட்ப நேர்த்தி உள்ளதா? இல்லை என்பதே என் கருத்து. ஏன்?
டெஸ்ட் போட்டிகளில் ரன்னடிக்க ஒன்று வலுவான ஆட்ட தொழில்நுட்பம் வேண்டும் அல்லது நிலையான துணிச்சலான மன அமைப்பு / எதற்கும் அசராத அணுகுமுறை வேண்டும். சேவாக்கிடம் இரண்டாவது இருந்தது; அவர் ஆடும் போது அவுட் ஆகி விடுவாரோ என இந்திய ரசிகர்கள் பயந்ததை விட இன்னும் பத்து ஓவர்கள் இப்படியே போனால் நம் கதி என்னாவது என எதிரணி வேகவீச்சாளர்கள் பயந்ததே அதிகம். சேவாக்கை இப்படி தோல்வி பயமே இன்றி ஆட வைத்தது கங்குலியின் ஆதரவுக்கரம்.
ஒரு அபத்தமான ஷாட்டை ஆடி அவர் அவுட் ஆனால் கங்குலி அவரை குச்சியெடுத்து முட்டியில் அடிக்க மாட்டார்; முதுகில் தட்டிக் கொடுப்பார். சேவாக் அப்போது இந்திய அணியின் கொரில்லா தாக்குதல் படைத்தளபதி. தாக்குவது ஒன்றே அவரது இலக்கு, ரன் குவிப்பதோ அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதோ அல்ல. சேவாக்குக்கு கிடைத்த இந்த சுதந்திரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாதபடி அவர் தொடர்ந்து வெற்றிகரமாக இருந்தார் - வெளிநாடுகளில் பல ஆட்டங்களில் இந்தியா முன்னிலை பெற காரணமானார்; அவர் களமிறங்குவதே ஒரு “சம்பவமாக” அமைந்தது; முழுநீளத்தில் வீசினால் அவர் அழகாய் டிரைவ் செய்து பவுண்டரிக்கு விளாசுவார். உடனே வேகவீச்சாளர்கள் சற்றே நீளத்தை குறைப்பார்கள்; சேவாக் இதை எதிர்பார்த்து பின்னங்காலுக்குப் போய் வெட்டி ஆடுவார். பவுன்சர் போட்டால் குனிந்து அதை தன் போக்கில் விட்டு விடுவார். சேவாக்கை கட்டுப்படுத்த ஒரே வழி முதல் ஓவரில் இருந்தே எல்லைக்கோட்டில் தடுப்பாளர்களை நிறுத்தி, அவரது பவுண்டரி ஷாட்களை ஒற்றை ஓட்டங்களாக சுருக்கி, பந்தை தொடர்ந்து offஇல் வைடாக போடுவது. ஆனால் அது ரிஸ்கான வியூகம். பந்து ஸ்விங் ஆகாவிட்டால் இரண்டே ஓவர்களில் சேவாக் எதிரணியில் எல்லாரையும் பைத்தியம் பிடிக்க வைப்பார். இப்படி மிகத்தெளிவான் ஒற்றை திட்டத்துடன் களமிறங்கிய சேவாக் ஒரு தனி நட்சத்திரமானார்; ஒருநாள் போட்டிகளை விட அவர் டெஸ்ட் போட்டிகளிலேயே அவர் அதிகமாய் ரன்குவித்தார்.
ஆனால் சேவாகுக்கு இணையாக அடித்தாடும் திறன் கொண்டிருந்தும் ரோஹித்தால் ஏன் இதுவரை இந்த மாதிரியான தாக்கத்தை டெஸ்ட் வடிவத்தில் ஏற்படுத்த முடியவில்லை? ஒரே காரணம் ரோஹித்தின் ஆட்ட பாணி சேவாக்கில் இருந்து மாறுபட்டது என்பது.
சேவாக்கின் ஆட்டம் முதல் பந்திலேயே டாப் கியரில் செல்வது; ஆனால் ரோஹித்தோ மெதுவாக ஆரம்பித்து, பலவீனமான இரண்டாம், மூன்றாம் நிலை பந்து வீச்சாளர்களை சாத்தி ரன் ரேட்டை மெல்ல மெல்ல ஏற்றி நீடித்து ஆடுவார். அதாவது சேவாக் ஒருநாள் போட்டிகளில் முதல் பத்து ஓவர்கள் ஆடினால் 80 ரன்கள் சாதாரணமாக அடிப்பார். 20 ஓவர்களுக்குள் சதத்தை அடித்து முடித்து வெளியேறி விடுவார். ஆனால் ரோஹித்தோ முப்பது ஓவர்களில் “பொறுமையாக” சதத்தை எட்டி அடுத்த இருபது ஓவர்களில் வேகமாய் அடித்து மற்றொரு நூறு ரன்களை குவிப்பார்.
வலுவான பந்து வீச்சை தவிர்த்து சொத்தையான வீச்சாளர்களை பயன்படுத்தி ரன்குவிப்பது ரோஹித் ஷர்மாவின் பாணி - இது ஒரு டிப்பிக்கல் மும்பை கிரிக்கெட் பேட்டிங் வியூகம். சச்சின், காம்பிளி என பலரும் இப்படித் தான் ஆடினார்கள். அதிக ரிஸ்க் இல்லாமல் துவக்கி சமயோஜிதத்துடன் அடித்தாடி எதிரணியின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ரன் குவிப்பது தான் மும்பை மட்டையாட்ட மந்திரம்.
பலரும் நம்புவது போல ரோஹித் சேவாக்கின் ஆட்டமாதிரி படி ஆடுபவர் அல்ல - அவர் நேர் எதிரானவர். ரோஹித்தின் மட்டையாட்ட டெம்பிளேட் டெஸ்ட் போட்டிகளில் எடுபடும் என நான் நம்பவில்லை. ஏன் என சொல்கிறேன்:
டெஸ்ட் போட்டிகளில் நீங்கள் ரன் அடிக்க ஒன்று புஜாரா போல அபார பொறுமைசாலியாக இருக்க வேண்டும். மட்டை போட்டே பந்து வீச்சாளர்களை சோதித்து தளரடிக்க வேண்டும்; அவர்கள் நம்பிக்கை இழக்கும் வரை தடுத்தாடி பின்னர் ஊர்ந்து ஊர்ந்து சதமடிக்க வேண்டும். ரோஹித்துக்கு இதற்கான பொறுமை சத்தியமாக இல்லை; தொழில்நுட்ப கட்டுறுதியும் இல்லை.
மற்றொரு பாணி ஆரம்பத்தில் பொறுமை சாதித்து விட்டு அடுத்து மூன்றாவது வேகவீச்சாளர், நான்காவது ஐந்தாவது சுழலர்களை அடித்தாடுவது - இது கோலியின் பாணி. சற்றே மெதுவான கட்டுப்பாடான பந்து வீச்சாளர்களையும் சுழலர்களை அடித்தாடுவது ரோஹித்தின் பலம் அல்ல. குறிப்பாக சுழலர்களிடம் விக்கெட் கொடுப்பதை அவர் ஒருநாள் போட்டிகளில் வழக்கமாக வைத்திருக்கிறார் - அதுவும் கால்சுழலர்கள். இப்போது ரோஹித்தால் டெஸ்ட் போட்டியின் முதல் 20 ஓவர்களில் தடுத்தாடவும் முடியாது (டெஸ்டில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும்); கோலியைப் போல வேகமாய் ஒற்றை இரட்டை ஓட்டங்களுக்காக ஓடுபவரும் அல்ல ரோஹித். ஆகையால் அவர் ரன்களே இல்லாமல் தொடர்ந்து பல ஓவர்கள் தேங்கி நிற்பார்; புஜாராவைப் போல இதை ரசிக்க அவரால் முடியாது; விரைவில் எரிச்சலடைவார். சரி அப்படியே 80 பந்துகளில் பத்து ரன்கள் எடுத்த நிலையில் ஒரு நல்ல சுழலர் வந்தால் அவரை இறங்கி வந்து சாத்தி ரன் ரேட்டை ஏற்றவோ ரோஹித்தால் முடியாது; முடியும் ஆனால் அது அவரது இயல்பான ஆட்டம் அல்ல. முதல் 60-80 பந்துகளை சமாளிக்கும் காலாட்டம் வேறு அவருக்கு இல்லை.
சுருக்கமாக சொல்வதானால் ரோஹித்துக்கு இன்னமும் டெஸ்ட் ஆட்டத்தின் பார்முலா தெரியாது; அது அவருக்கு இயல்பாகவே பொருந்தி வராது; அதற்கான தொழில்நுட்ப கரார்தன்மையும் அவரிடம் இல்லை.
இறுதியாக கங்குலி சேவாக்குக்கு கொடுத்த துணிச்சலை, ஆதரவை, நிலையான அமைதியான சூழலை இன்றைய கோலி நிர்வாகம் ரோஹித்துக்கு ஒரு போதும் அளிக்காது. கோலியின் கீழ் இரண்டு மூன்று வாய்ப்புகளுக்கு மேல் யாருக்கும் கிடையாது; ஒழுங்காக ஆடுகிறவர்களே சதா பதற்றத்தில் தான் இருக்கிறார்கள்; ஏற்கனவே (டெஸ்டில்) தகிட ததிமி என தள்ளாடிக் கொண்டிருக்கும் ரோஹித்தா நிலைக்க போகிறார்?
அன்றைய அணியில் எண் 3இல் திராவிட், 4இல் சச்சின், 5இல் கங்குலி, 6இல் லஷ்மண் என அட்டகாசமான மத்திய வரிசை இருந்தது சேவாக்குக்கு இப்படியான அபார சுதந்திரத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால் இன்றைய அணியிலோ கோலியைத் தவிர யாரும் நம்பிக்கை அளிப்பதில்லை. கோலியின் அணியில் மற்றொரு சேவாக் சாத்தியமே இல்லை. அப்படி இருக்க எந்த நம்பிக்கையில் இப்போது ரோஹித்தை துவக்க வீரராக களமிறக்குகிறார்கள்?
இது ஒரு தற்காலிகமான பரிசோதனை என நினைக்கிறேன்; கோலி எனும் குழந்தைக்கு ஒரு புது விளையாட்டுக் கார் கிடைத்திருக்கிறது. ரெண்டே நாட்களில் அதன் சக்கரங்களை கழற்றிப் பார்த்து அது ஓடவில்லை என உறுதியானதும் அவர் கடாசி விடுவார்.
இல்லை ரோஹித் ஜெயித்து விடுவாரா? பார்ப்போமே!