Skip to main content

வாசக சாலை மீதான ஜெயமோகனின் விமர்சனமும் அதன் பிழையும் (1)


ஜெயமோகனுக்கு தேவி ஶ்ரீராம் என்பவர் (நிஜமாகவே அப்படி ஒருவர் இருக்கிறாரா?) சமீபத்தில் எழுதிய கடிதத்தில் வாசக சாலையின் கூட்டங்களில் அர்த்தபூர்வமாய் எந்த உரையாடலும் நடப்பதில்லை; அங்கு பேசப்படுபவை வெறும் உளறல்கள், வம்பு பேச்சுகள் என சொல்கிறார். இதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஜெயமோகன் வாசக சாலை போன்ற அமைப்பினரின் இலக்கிய கூட்டங்கள்கேலிக்கூத்து”, “பயனற்றவை”, ஆகவே இவற்றை தனியே எதிர்க்க வேண்டியதில்லை, அவை தானேஅழிந்து விடும்என சாபம் வேறு விடுகிறார் (பார்க்கவாசக சாலை கூட்டங்கள் குறித்துகட்டுரை). இந்த கூற்றின் பிழை வெளிப்படையானது - ஜெயமோகனுக்கு வாசகசாலையில் கலந்து கொண்டுள்ள அனுபவம் உண்டென்றால் அவருக்கு அங்கு பயனற்றதாய் தெரியும் பேச்சுக்கள் யாருடையவை எனக் கூறி அதை மறுக்கலாம், விமர்சிக்கலாம். ஆனால் செவிவழிக் கூற்றின் அடிப்படையில் அவர் இவ்வாறு ஒரு அமைப்பை முத்திரை குத்துவது அறமல்ல


வாசக சாலை கூட்டங்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல ஊர்களில் வாரந்தோறும் நடக்கின்றன; ஒட்டுமொத்தமாய் இதுவரை பல நூறு கூட்டங்கள் நடந்திருக்கும். இக்கூட்டங்களில் வாசகர்கள் மட்டுமல்ல எழுத்தாளர்களும் தான் பேசுகிறார்கள். ஜெயமோகன் குறிப்பிடும் பாவண்ணனும் தான் வாசகசாலை கூட்டத்தில் உரையாற்றி நான் கேட்டிருக்கிறேன் (மிகுந்த கூச்சத்துடன் உரையாடும் பெருமாள் முருகனை எப்படி ஜெயமோகன் இந்தமகத்தான பேச்சாளர்கள்பட்டியலில் சேர்த்துக் கொண்டார் எனத் தெரியவில்லை). நான் சென்னையில் இருந்த போதும் பின்னர் பெங்களூருக்கு சென்ற பின்னரும் பலமுறை அவர்களின் அரங்குகளுக்கு சென்று இலக்கியம், தத்துவம் குறித்து விரிவாக உரையாற்றி இருக்கிறேன். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் சுழல் வட்டப்பாதை எனும் உருவகம் எப்படித் தோன்றி அது எப்படி தமிழ் பின்நவீன இலக்கியத்தில் செல்வாக்கு செலுத்தியது, அதன் தத்துவ, தொன்ம பின்புலம் என நான் பேசி இருக்கிறேன். தமிழ் நவீன கவிதையை விரிவாக பவர் பாயிண்டில் உதாரணங்களுடன் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். மௌனியை பற்றி நான் சமீபமாய் அங்கு பேசிய போது ஹைடெக்கர், பெட்ரோ பரோமா, இலக்கியத்தில் உருவக மொழியை எப்படி வாசிப்பது, ஒரு வாக்கியத்தின் நீளம் எப்படி கதைசொல்லியின் மனநிலையை சுட்டும் என ஆழமாக உரையாடினேன். (விஷால் ராஜா, சுநீல் கிருஷ்ணனைப் போல நான் மகத்தான விமர்சகனோ அவர்கள் அளவுக்கு புத்தகங்கள் எழுதியவனோ வாசிப்பனுபவம் கொண்டவனோ அல்ல என்றாலும் கூட ஏதோ எனக்குத் தெரிந்ததை பேசியிருக்கிறேன் என்கிற அளவில் இதை நான் சொல்லியாக வேண்டும்; சுநீல் மற்றும் விஷால் ராஜாவுடன் உன்னை ஒப்பிடும் அளவுக்கு உன் தகுதி என்ன எனக் கேட்காதீர்கள்; போகப் போக மெல்ல மெல்ல வளர்த்துக் கொள்கிறேன்.) இதே போன்ற உரைகளை அங்கு இலக்கிய எழுத்தாளர்களும் விமர்சகர்களும் பேசி நான் அங்கு கேட்டிருக்கிறேன்.
 ஆனால் வாசக சாலை முழுக்க வாசகர்கள் உரையாடுவதற்கான வெளி என்பதால் அங்கு நிபுணர்கள் உரை மட்டும் நிகழ்வதில்லை. சிறப்பு நிகழ்ச்சிகளில் மட்டுமே எழுத்தாளர்கள் அரங்கை எடுத்துக் கொள்வார்கள். மற்றபடி அவர்களின் இலக்கு எளிய ஆரம்பநிலை வாசகர்களுக்கு இலக்கியம் வாசிக்க ஒரு வாய்ப்பை, அதை ஒட்டி சமூகமாக்கல் செய்ய சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது. இந்த இலக்கை வாசக சாலை தொடர்ந்து எட்டி வந்திருக்கிறது. ஆக, அங்கு இலக்கிய உரைகளே நடப்பதில்லை என்பது பொய். ஒன்றிரண்டு முறை எட்டிப் பார்த்து விட்டு சிலர் தரும் புலனாய்வு அறிக்கையை வைத்து ஜெயமோகன் தீர்ப்பெழுதுவது சிறுபிள்ளைத்தனம்; தெரிந்த ஒன்றைப் பற்றி கருத்து சொல்லும் முன்பே நாம் நன்கு யோசித்து ஆராய வேண்டும் என்பார்கள். ஆனால் ஜெயமோகன் தான் பார்க்காத, கேட்காத ஒன்றைப் பற்றி இவ்வளவு தன்னம்பிக்கையாக பேசுவதைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை, பெருமூச்சு விடுவதைத் தவிர

ஜெயமோகனின் மற்றொரு கருத்து எனக்கு பெரிதும் ஆச்சரியம் அளித்தது - இலக்கிய செயல்பாடுகளையும் மேடைப்பேச்சையும் அவர் ஒன்றாக காண்கிறார் என்பது அது. அவரது இந்த கட்டுரை முழுக்க இலக்கிய வாசிப்பை ஒரு நுகர்வாக காணும் நோக்கு விரவிக் கிடக்கிறது. எழுத்தாளர்கள்இன்றைய உலகில் அரங்கை ஈர்ப்பது தங்கள் கடமை என்பதை ... உணர்ந்தாக வேண்டும்என்கிறார். அப்படி அவர்கள் அபாரமான மேடைப்பேச்சாளராக இருந்தால் மட்டுமே வாசகர்கள் பயன்படைவதாய் உணர்வார்கள். அப்போது தான் அவர்கள் பேச்சைக் கேட்க வருவார்கள்; இலக்கியமுயற்சிவெல்லும் என்கிறார். இது ஒருஇலக்கிய விரோதமானபார்வை.

மேடைப்பேச்சினால் இலக்கியத்துக்கு என்ன பயன் என முதலில் கேட்போம்: எஸ்.ராவின் மேடைப்பேச்சின் ரசிகன் என்ற அளவில் அது எந்த விதத்திலும் உங்கள் இலக்கிய வாசிப்பை மேம்படுத்தாது என சொல்வேன். இதையே நான் ஜெயமோகனின் மேடைப்பேச்சுக்கும் சொல்வேன். ஏனென்றால் இலக்கிய நுண்ணுணர்வு ஒரு நுகர்வுத்திறன் அல்ல; அதை மேடைப்பேச்சை கேட்டு வளர்க்க முடியாது

வேலூர் இலக்கிய வாசகர் வட்டத்தை சேர்ந்த . விக்னேஷ்வரன் என்பவர் எஸ்.ரா தன் ஊருக்கு வந்து ஜெ.எம் கூட்ஸி மற்றும் தஸ்தாவஸ்கி பற்றின பேருரையை சிலாகித்து ஒரு கடிதத்தை ஜெயமோகனுக்கு எழுதி இருக்கிறார். அதில் எஸ்.ராவின் பேச்சை கேட்டு முடித்த பின்னர்அத்தனை பேரும் மகிழ்ச்சியாக உணர்ந்தோம்என்கிறார். விக்னேஷ்வரனும் அவரது நண்பர்களும் உணர்ந்த மகிழ்ச்சி என்பது இலக்கிய அறிதலினால் விளைந்தது அல்ல, அது சுவாரஸ்யமான கதைகளையும், மேம்போக்கானஇலக்கியஉணர்ச்சிகளையும் சீண்டி சிலிர்த்ததனால் வந்தது; சினிமாவில் ஒரு ஹீரோ வில்லனை உதைக்கும் போது வரும் நீதி ஆவேச உணர்ச்சி அது. நாயகியும் நாயகனும் படுக்கையில் சில்மிஷம் பண்ணும் போது பார்வையாளனுக்கு வரும் பாலியல் கிளர்ச்சி அது. காலங்காலமாய் கதாகாலட்சேபம் கேட்ட பல லட்சம் மக்கள் உணர்ந்தது தான் அது; சாலமன் பாப்பையாயின் உரையை கேட்டு சிலிர்த்து கைதட்டிய மக்கள் உணர்ந்ததும் தான் இது (நான் எஸ்.ராவும் பாப்பையாவும் ஒன்று எனக் கூறவில்லை நிச்சயமாய்). விக்னேஷ்வர் நீங்கள் அடைந்த மகிழ்ச்சி ஒரு புலனின்பம் மட்டுமே; விஜய் டிவியில் நீயா நானாவில் சிலர் பேசக் கேட்கும் போது நீங்கள் அடைவதும் இத்தகைய மகிழ்ச்சியே.
 நிஜமான அறிவும் அறிவினால் கிடைக்கும் மகிழ்ச்சியும் ஒரு முரணியக்க அனுபவத்தால் மட்டுமே கிடைப்பது. நீங்களாகவே முயற்சி எடுத்து போராடி இலக்கியத்தை அறியும் போது கிடைப்பது அது. அது கரண்டியால் ஊட்டப்படும் இலக்கிய பேச்சினால் கிடைப்பதால். ஒரு இலக்கிய கருத்துடன் உங்கள் பார்வை மோதும் போதும் மோதி தெளிந்து ஒரு புது கருத்து பிறக்கும் போதும் கிடைப்பதே இலக்கிய / தத்துவ தெளிவு. அதற்கு நீங்கள் இலக்கிய உரையாடல்களில் கலந்து கொண்டு விவாதிக்க வேண்டும் (அப்படி விவாதிக்குமுன் சொந்தமாய் சிந்திக்க வேண்டும்; வாசித்து சிந்திக்க பழகி கற்க வேண்டும் - இலக்கிய பேச்சுகள் இதற்கான ஒரு குறுக்குவழி அல்ல.)

ஒரு வாசகர் இலக்கியத்தை அறிய சிறந்த வழி ஒரு முதிர்ந்த வாசகருடன் உரையாடுவது, விவாதிப்பது, பேசி பேசி புதிய புரிதல்களைப் பெறுவது. உட்கார்ந்து ஒரு இலக்கிய உரையை கேட்பவருக்கும் டிவி முன்பு அமர்ந்து விசுவின் அரட்டை அரங்கம் ஒரு காலத்தில் பார்த்தவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. செயலூக்கமே அறிவுக்கு இட்டுச் செல்லும், செயலற்று கேட்டிருத்தல் அல்ல. இலக்கிய பேச்சாளர்கள் இலக்கிய அறிவை மேம்படுத்தியதாகவோ நுண்ணுணர்வை மக்களிடம் வளர்த்ததாகவோ வரலாறு இல்லை

ஆனால் இலக்கிய உரையாளர்கள் மற்றொன்றை செய்வாரக்ள். அவர்கள் இலக்கியத்தை ஒரு சுவாரஸ்யமான எளிமையான நுகர்வுப் பண்டமாக்குகிறார்கள். மெனக்கெட்டு வாசிக்க விரும்பாதவர்கள் தஸ்தாவஸ்கியின் வாழ்க்கைக் கதையை கேட்டு சிலாகித்து விட்டு அந்த மேதையின் பெரும் படைப்புகளை தாம் ஒரே மணிநேரத்தில் நுகர்ந்து விட்ட போலி திருப்தியை அடைவார்கள். நான் இத்தகைய பார்வையாளர்களை கடந்த பத்தாண்டுகளில் பலமுறை கண்டிருக்கிறேன். இவர்கள் ஒரே ஆட்கள் திரும்பத் திரும்ப வந்து முன்னிருக்கையில் அமர்வார்கள். ஆஹா ஆஹா என சிலாகிப்பார்கள். அப்படியே போகிறவர் அடுத்து மற்றொரு கூட்டத்தில் தான் திரும்புவார். அவர் ஒரு மகத்தான வாசகராகவோ விமர்சகராகவோ மலர்வதில்லை. அப்படி யாரையும் நான் இதுவரை கண்டதில்லை. ஆனால் சிற்றிதழ் உரையாடல்களில் விவாதிக்கிறவர்கள், கேள்வி கேட்டு புதிதாய் வாசித்தும் சிந்தித்தும் வளர்கிறவர்கள் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் ஆகிறார்கள். நுகர்வோர் நுகர்வோராகவே இருக்கிறார்கள்

சுந்தர ராமசாமியும் கலை இலக்கிய பெருமன்ற இயக்கத்தினரும் பல நல்ல இளம் எழுத்தாளர்களை, விமர்சகர்களை வளர்த்தெடுத்தாளர்கள்; பேருரைகள் வழியாக அல்ல, உரையாடல் வழியாக. அந்த காலம் மலையேறி விட்டது; இது ஊடகங்களின் காலம். பெரும் இலக்கிய கூட்டங்களின் காலம் என்றெல்லாம நீங்கள் கூற முடியாது. இலக்கிய வாசிப்பு என்றுமே ஒரு தனிப்பயணம் தான்; அது என்றுமே ஒரு தவம் தான். கூட்டமாய் பல்லாயிரம் பேர்களை ஒரேசமயம் உய்விக்க இலக்கியம் ஒன்றும் ஸ்தோத்திரம் கூட்டம் அல்ல.

இலக்கிய பேருரைகளின் நுகர்வோன் இலக்கியத்தை நோக்கி நகராமல் வெறும் பேச்சுகளின் ரசிகனாக நீடிக்கவே வாய்ப்பதிகம். ஏனென்றால் பேச்சு அவனுக்கு வாசிப்புக்கான சுலபமான மாற்றை, ஒருவித முலைப்பாலை ஊட்டுகிறது; நீங்கள் முலைப்பால் குடித்தே பழகினால் அது தான் சுகம். தாய் முலையை விட்டு இறங்க தோன்றாது. அங்கேயே தொற்றிக் கொண்டு இருப்பீர்கள்
உதாரணமாக, இலக்கியம் என்பது ஒரு எளிய நேரடி செயல் அல்ல. நீங்கள் ஜெ. எம். கூட்ஸியின் The Master of Petersburg நாவலை வெறுமனே ஒரு கதையாக படித்து விட முடியாது. கூட்ஸியின் மொழி செயல்பாடு புரிய வேண்டுமெனில் நீங்கள் குறைந்த பட்சம் ரொலான்ட் பார்த்தின் A Lover’s Discourse படித்திருக்க வேண்டும்; கொஞ்சமேனும் பின்னமைப்பியல் பற்றி தெரிய வேண்டும்; இன்றைய கட்டற்ற மொழிப்பாய்ச்சல் என்றால் என்ன, அர்த்தங்களின் இன்மை எப்படி அர்த்தமாகிறது என எப்படி தெரிதா விளக்குகிறார் எனத் தெரிய வேண்டும். அல்லாவிடில் நீங்கள் கூட்ஸியிடம் பார்ப்பது வெறும் கதையின் எலும்புக்கூட்டை மட்டுமே. சரி இது கூட வேண்டாம்குறைந்தது, இலக்கிய பேருரைக்குப் பின்னர் நீங்கள் உடனடியாகப் போய் கூட்ஸியின் படைப்புகளை வாங்கி வாசிக்க வேண்டும். அதன் பிறகு அதைப் பற்றி இலக்கிய நுண்ணுணர்வாளர்களிடம் இடையறாது விவாதிக்க வேண்டும். ஆனால் எத்தனை பேர் அப்படி பண்ணுகிறார்கள். இலக்கிய ஆவியெழுப்பலின் நோக்கமே அப்படி சிரமமப்பட்டு வாசிக்காமல் ஒரு லகுவான பண்டமாக இலக்கியத்தை மாற்றி பார்வையாளனுக்கு அளிப்பது தானே. போர்னோகிரபியை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு செக்ஸில் ஈடுபாடு குறைவதைப் போல பேருரைகளின் ரசிகர்களுக்கு வாசிக்கும் ஆற்றல் குறையும்; ஊக்கம் இல்லாமல் ஆகும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...