விண்டோஸ் கணினிகள் மீது கசப்பு ஏற்பட்ட பின்னர் நான் ஆப்பிளுக்கு நகரலாம் என முடிவெடுத்தேன். (அடிக்கடி எழுதிக் கொண்டிருக்கும் போது கணினி மயக்கம் போட்டு விழுவது, எழுதிக் கொண்டிருந்த கோப்பை அப்படியே புதைத்து விடுவது என ஏகப்பட்ட பிரச்சனைகள்; ஒரு கட்டத்தில் நான் கூகிள் docsஇல் எழுதுவது மட்டுமே பாதுகாப்பு என நம்பும் இடத்துக்கு நகர்ந்திருந்தேன்.) என் நண்பர்களும் இதை பரிந்துரைத்தனர் - நான் தினமும் 6-8 மணிநேரங்கள் அல்லது அதற்கு அதிகமாகக் கூட கணினியில் எழுத செலவிடுகிறேன். ஒரு தரமான, நம்பகத்தன்மை கொண்ட கணினி இருப்பது என்னைப் போன்றோருக்கு அவசியம். ஆனால் ஒரு சிக்கல் - ஆப்பிள் கணினிகளின் விலை எட்டா கிளை. நான் எகிறிக் குதித்து ஒரு ஆப்பிளைப் பறித்தால் என் சேமிப்பில் பாதி காலியாகிடும். நான் ஏதாவது குறுக்குவழி இருக்குமா என யோசித்த போது புளூடூத் கீபோர்டுகள் கண்ணில் பட்டன.
வெளிநாட்டில் பலரும் டேப்லெட்டை புளுடூத் கீபோர்டுடன் சேர்த்து ஒரு மடிக்கணினிக்கு பதிலியாக பயன்படுத்துகிறார்கள். (உள்ளூரில் நான் இந்த சங்கதியை - சென்னையிலோ இங்கு பெங்களூரிலோ கண்டதில்லை.)
இதில் இரு அனுகூலங்கள்:
1) சிக்கனம்:
ஐபேடை நீங்கள் 25,000 சுமாருக்கு வாங்கி விடலாம். 2000-10,000 வரை சுமாரில் இருந்து தரமான கீபோர்டுகள் கிடைக்கின்றன. ஆக, ஒரு மாற்று மேக்புக்கை நீங்கள் 66,000-72,000 செலவழித்து வாங்க வேண்டியிராமல் 27,000-35,000க்கே ரெடி பண்ணி விடலாம்.
2) வசதி:
சம்பிரதாயமான விண்டோஸ் கணினிகள் கனமானவை. லேப்டாப் வைத்ததும் உங்கள் தோள்பை முதுகை அழுத்த தொடங்கும். ஆனால் ஐபேட் ஒரு மெல்லிய நாவலின் எடை கொண்டது. அதை ஒரு சின்ன ஸ்லிங் பையிலோ (ஜோல்னா பையிலோ) வைத்து அல்லது மேலங்கி அணிவோர் அதற்குள்ளாகவோ வைத்து எங்கும் கொண்டு போகலாம்.
வேகம்:
விண்டோஸ் கணினியின் booting time அதிகம். அது கண்விழித்து சோம்பல் முறித்து, கொட்டாவி விட்டு, சேலையை உதறி ஒழுங்காக கட்டிக் கொண்டு முகம் கழுவி, பல்துலக்கி, உச்சா போய் தலையை சீவி ஒழுங்காகி உங்களுக்கு தேவையான கோப்புகளை திறந்து கடைபரப்பிட இரண்டு மூன்று நிமிடங்களாவது பிடிக்கும். 8 GB Ram கொண்ட நல்ல விண்டோஸ் கணினிகள் சுலபத்தில் திறந்து தயாராகும் என்றாலும் ஐபேடின் வேகத்துக்கு இணையாகாது.
நீங்கள் ஐபேடை திறந்த அரை விநாடியில் அது புன்னகையுடன் உங்களுக்காக தயாராக இருக்கும். நான் எப்போதுமே ஐபேட் திறப்பதை கண்ணின் இமை ஒன்று திறப்பதுடன் ஒப்பிடுவேன்; கண் எப்போதுமே விழித்துதான் இருக்கும், இமை தான் அதை மூடி ஓய்வு கொடுக்கும். இமையை யாராவது தொட்டால் உடனடியாய் அது விழித்துக் கொள்ளும். விண்டோஸ் கணினிகளோ நமது மற்ற உடலுறுப்புகளைப் போல. தூங்கும் போது உங்கள் விரலை யாராவது அசைந்தால் அநிச்சையாக அதை இழுத்து கொள்வீர்களே அன்றி விழிக்க மாட்டீர்கள். ஐபேட் இப்படித் தான் நமது “கண்ணுக்கு கண்ணாக” இருக்கிறது.
நம்பகத்தன்மை:
ஐபேடை நான் பயன்படுத்த தொடங்கி ஆறு மாதங்கள் ஆகின்றன - ஒருமுறை கூட அது crash ஆனதில்லை. ஒரு கோப்பு கூட தானாக அழிந்து காணாமல் போனதில்லை. ஆப்பிள் கணிகளை பல வருடங்களாக பயன்படுத்தி வருபவர்களும் இதையே தான் சொல்கிறார்கள். ஆனால் விண்டோஸ் கணிகள் நம்மை நடுத்தெருவில் கைவிட்டு காணாமல் போவதையே வழக்கமாக வைத்துள்ளன.
நீங்கள் அவசரமாக கணினியை திறக்க முயலும் போது “இருங்க, அப்டேட் ஆகிக் கொண்டிருக்கிறது. 20% ...” என அது இன்னொரு பாதையில் ஓடிக் கொண்டிருக்கும். அது தயாராக பத்து நிமிடமோ இருபது நிமிடமோ ஆகலாம். ஆனால் ஐபேடிலோ இந்த அப்டேட்டிங் பின்னணியில், உங்களுக்கு தொந்தரவோ இன்றி, நடந்து முடிந்து விடும்.
இணக்கம்:
விண்டோஸ் ஒரு பூனை; ஒட்டாது. ஆனால் ஐபேட் உங்களுடைய உடம்பின் ஒரு பாகம் போல் ஆகி விடும். உங்கள் தேவைகள் என்னென்ன என ஏற்கனவே அவர்கள் உணர்ந்து வடிவமைத்தது போன்றிருக்கும் IOS. இந்த “இணக்கத்தை” பொறுத்தமட்டில் நீங்கள் விண்டோஸை இதனோடு ஒப்பிடவே முடியாது.
மின்கலம்:
இன்று இரண்டு நாட்கள் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு ஆற்றல் மிக்க மின்கலம் கொண்ட மொபைல், மடிக்கணினிகள் வந்து விட்டன. ஆனாலும் அவை விலை அதிகமானவை. சில விண்டோஸ் கணினிகள் நிலையற்றதாக இருக்கும், ஆனால் மின்கலம் நீண்ட நேரம் வரும். தரமும் நீடித்த மின்கலமும் ஐபேடில் சிக்கன விலையில் சாத்தியமாகிறது.
தமிழில் தட்டச்சுவது:
விண்டோஸில் நீங்கள் தமிழில் எழுத NHM போன்ற செயலிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும். அவை சிலநேரம் வேலை செய்யாமல் போய் விடும். அப்போது நீங்கள் செயலியை நீக்கி மீண்டும் துவக்க வேண்டும். இது போன்ற அலும்புகள் ஐபேடில் இல்லை - IOS இல் தமிழ் தட்டச்சும் இணைந்தே வருகிறது. ஆங்கிலத்தில் எழுதும் சுலபத்துடன் நீங்கள் தமிழிலும் புழங்கலாம்.
Word ~ Pages:
நீண்ட காலமாகவே மைக்ரோசாப்ட் வேர்டில் எழுதிப் பழகிய எனக்கு அது இல்லாமல் எப்படி இயங்குவது என தயக்கம் ஆரம்பத்தில் இருந்தது. வேர்ட் அடிக்கடி கிராஷ் ஆவதால் நான் கூகிள் டாக்ஸுக்கு நகர்ந்த நிலையிலும் கூட வேர்ட் மீதான என் மையல் மாறவில்லை. ஆனால் ஐபேட் வாங்கிய பிறகு நான் Pages எனும் செயலியை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தேன். வேர்டை விட மேலான, சுலபமான செயலி அது என புரிந்து கொண்டேன். ஒரு கோப்பை அதில் தயாரித்து வேர்ட் / PDF / EPUB ஆக மாற்றி அனுப்புவதோ, டிரைவில் சேமிப்பதோ ஒரே படியில் செய்து விடலாம். மேலும், அது பின்னணியில் தன்னை சேமிப்பதை நீங்கள் உணரவே முடியாது; திறப்பதும் மூடுவதும் ஏதோ வெண்ணெய் தொண்டையில் வழுக்கி செல்வது போல நடக்கும். நமது பெரும்பாலான எழுத்து வேலைகளுக்கான வசதிகள் அதிலேயே உண்டு. வெர்ட் அடிப்படையில் ஒரு வடிவமைப்பு செயலி. ஏகப்பட்ட ஆயுதங்கள் தரித்து, பெரிய கவசரம் ஏந்தி வரும் ராட்சஸ மனிதனைப் போன்றது வெர்ட். நமக்குத் தேவை ஒரு மெல்லிய எளிய வேலையாள். கேட்டால் உடனே வந்து நிற்கும் செயலர் என்றால் Pagesஏ போதுமானது, கச்சிதமானது.
இனி ஐபேடை புளூடூட் கீபோர்டுடன் பயன்படுத்தி என் அனுபவத்தை சொல்கிறேன். இவ்வாறு வாங்கி பயன்படுத்த விரும்புவோர் இதை அறிந்து கொள்வது முக்கியம்.
(தொடரும்)