அத்திவரதர் வைபவம், அது சம்மந்தமான பரபரப்பு பற்றி சரவணன் சந்திரன் எழுதிய பதிவைப் படித்தேன். அவர் அப்பதிவை அழகாக எழுதியிருந்தாலும் ஒரு கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. அப்பதிவு பல பாஜகவினர் மற்றும் நடுநிலை சங்கிகளின் மார்பில் பாலை வார்த்திருக்கும் என்பதாலே இங்கு மாற்றுக்கருத்தை கூற விழைகிறேன்.
- “மதம் சார்ந்த, கலாச்சார பெருமைகள் சார்ந்த உரையாடல்கள் இனி மையத்தை நோக்கி நகர்வதைத் தவிர்க்கவே முடியாது. அதற்குத் தோதான காலமும் திரண்டு வந்திருக்கிறது. எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதில்தான் தமிழக அரசியலின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும். மதச் சொல்லாடல்களைத் தவிர்த்து விட்டு, இனி தமிழக அரசியல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்கிற நம்பிக்கையும் தகர்ந்திருக்கிறது. ஒருவகையில் மண்டல்-மந்திர் அரசியல் மறுபடியும் துளிர்விடுவதற்கான காலமிது. அதற்கான ஆரம்பப் புள்ளிகள் தெரியவும் துவங்கி விட்டன. மதம் சார்ந்த விஷயங்களில் குழப்பமில்லாத அரசியல் கருத்துக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தமும் தமிழக கட்சிகளிடையே உருவாகியிருக்கிறது. பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கைகளில் கைவைக்கையில் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டிய இக்கட்டும் எதிர்த்தரப்பிற்கு ஏற்பட்டிருக்கிறது. எல்லா தரப்பும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய புள்ளியாக இதையே பார்க்கிறேன்.” என சரவணன் சந்திரன் அவர் சொல்வதன் பொருள் இந்துத்துவ பூமியாக தமிழகம் விரைவில் உருமாறுவதை நாம் தடுப்பது எளிதல்ல, இந்து மத நம்பிக்கைகளை ஒட்டி அரசியல் கட்சிகள் இனி தமது கருத்தாடல்களை மறுதகவமைப்பு பண்ண வேண்டும், பெரியாரிய மத கிண்டல்களை மக்கள் இனி பொறுக்க மாட்டார்கள் என்பதே. ஆனால் கடந்த தேர்தலில் பாஜக தமிழகத்தில் பெற்ற “மிகப்பெரிய வெற்றியை” பார்க்கையில் எனக்கு நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது.
தமிழகம் என்றுமே ஆன்மீக பூமி தான். கோயில்களின் நிலம் தான். ஆனால் அது நம்மை மத வேறியர்களாக, இந்து தேசியவாதிகளாக மாற்றுவதில்லை. அதற்கு சில அடிப்படையான காரணங்கள் உண்டு.
1) இந்து தேசியம் பக்தியில் வேரூன்றுவதில்லை - அது இந்து-இஸ்லாமிய வெறுப்பில், மத இருமையில், அந்த இருமையை பின்புலமாக கொண்டு உருக்கொள்ளும் “இந்திய” தேசியவாதத்தில் (மாநில, மொழி தேசியவாதத்தில் அல்ல) வேரூன்றி உள்ளது. தமிழகத்தில் இஸ்லாமிய வெறுப்பு உருக்கொள்ளாதவரை இந்துத்துவ அரசியல் இங்கே முலையுண்டு வளர்ந்து தவழாது. கரு தோன்றியதுமே கலைந்து விடும்.
2) அடுத்து பாஜக இந்த இந்து-இஸ்லாமிய பிரிவினை கதையாடலை வைத்து ஒற்றை இந்தியா எனும் லட்சியத்தை முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் அதுவும் சுலபமாக இராது. தமிழகம் அடிப்படையில் தன்னை தனி நிலமாக, தனி தேசமாக கருதுவது. மொழி மற்றும் பண்பாட்டு அடிப்படையில், இந்தியா எனும் கருத்தமைவை இங்கே திணிக்க முடியாதபடி ஒரு பிளவு நீண்ட காலமாக உருப்பெற்றுள்ளது. இந்தியா என்றால் வடக்கே என மக்கள் ஆழமாக நம்புவார்கள். ஆக நீங்கள் இந்து மதத்தை இங்குள்ள ஆலய வழிபாட்டு முனைப்பைக் கண்டு கடைபரப்பலாம். ஆனால் அந்த கடையில் நீங்கள் இந்திய தேசியவாதத்தை விற்றால் போண்டியாகி விடும். இந்து மத பக்தியும் இந்திய தேச பக்தியும் இருவேறு சரக்குகள் - தமிழ் நிலத்தில் இரண்டையும் கலந்தால் “தாமரை” இலை நீர் போல தனித்து நிற்கும்.
அத்திவரதரைப் பார்க்க மக்கள் ஆயிரக்கணாக்கில் திரண்டு வருவார்கள்; பிரதமரும் வருவார். ஆனால் அதே அத்திரவரதரைக் கொண்டு தேர்தலில் ஒருவேளை நிறுத்தினால் ஓட்டளிக்க யாரும் வர மாட்டார்கள். அது வேற வாய்!