Skip to main content

பிளாஸ்டிக் சிரிப்புகளின் காலம்

நான் முன்பு ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் தொழில்நுட்ப எழுத்து பிரிவில், ஒரு சின்ன வேலையில், இருந்தேன். எந்திர பாகங்கள், மின்னணு கருவிகள் குறித்த விவரணைகளே புரியாமலே புரிந்த மாதிரி எழுதுவது என் பணி. என் அயலில் மற்றொரு துறை இயங்கியது. முழுக்க மென்பொருள் கோடிங் சார்ந்த ஒரு புரோஜெக்ட். அதில் சிறு சிறு பிரிவாக ஏகப்பட்ட பேர் இயங்கினர். அவர்களில் ஒருவர் - ஒரு வங்காளி - எனக்கு கேண்டீனில் வைத்து நட்பானார். நான் அவரை இறுதியாக சந்தித்ததும் கேண்டீனில் தான். அன்று எதையோ தொலைத்தது போல தனியாக அமர்ந்திருந்தார்
என்ன ஆச்சு?” என வழக்கம் போல கேட்டேன். வழக்கம் போல அவர் தன் சின்ன சின்ன பிரச்சனைகளை, தனிமையைப் பற்றி புலம்புவார். நான் இத்தகைய புலம்பல்களை ரசிப்பேன். “I am fine” என் சிரித்தபடி தோள் உலுக்குகிறவர்களை விட இத்தகையோர் நேர்மையானவர்கள் என நினைப்பேன். அவர் அன்று விச்சிராந்தியாக பதில் சொன்னார், “எனக்கு வேலை போயிடுச்சு!” ஏன், எப்படி என்றெல்லாம் நான் விசாரிக்கவில்லை. ஆறுதல் சொல்லவில்லை. அருகில் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தேன். டீ வாங்கி வந்து இருவரும் அருந்தினேன். “இனிமே இந்த டீயை குடிக்க தேவையில்லைஎன புன்னகைத்தார். அந்த டீயில் எப்போதும் கருகிய பாலின் வாடை இருக்கும். அவர் சொன்னார், “வேலை போனது கூட பரவாயில்ல. இது போனா இன்னொன்னு. ஆனால்...”
என்ன?”

இந்த நட்பார்ந்த சிரிப்பு, கூலான கைகுலுக்கல்கள் தாம் என்னை பயமுறுத்துகின்றன.”
அவர் அன்று காலை வந்ததும் அவரது அடையாள அட்டையை காண்பித்ததும் கதவு இசைந்து திறக்கவில்லை. ஏதோ தவறு என கூறியது. அவர் காவலாளியை விசாரிக்க அவரோ ஒரு கார்போர்ட் பெட்டியை காண்பித்தார். அதில் இவரது பொருட்கள் - கோப்பு, பேனா, சின்ன பிளாஸ்டிக் பூச்செடி, காகிதங்கள், புத்தகங்கள், சின்ன மேஜைக்கடிகாரம் எல்லாம். அவ்வளவு தான், வேலையில் இருந்து அனுப்பி விட்டார்கள்
இவர் எல்லாவற்றையும் பொறுக்கிக் கொண்டு கிளம்ப தயாரான போது மனிதவளத் துறையின் அதிகாரி வந்து உள்ளே அழைத்தார். அவருடன் உள்ளே போனார். அங்கே இறுதி கட்ட ஆவணங்களில் கையெழுத்து வாங்கி விட்டுவாழ்த்துக்கள்சொல்லி அனுப்பி விட்டார். அவரது புரோஜெக்ட்டை தோல்வி அடைந்த நிலையில் அதற்கு இனி முதலீடு பண்ண நிர்வாகம் தயாரில்லை. அணியில் சிலரை வேறு இடங்களில் அனுப்பி விட்டு பலரை அனுப்பி விட்டார்கள். எல்லாம் ஒரே நாளில், ஒருசில மணிநேரங்களில், ஒரு சில நிமிடங்களில் முடிந்து போயிற்று. தன்னை அப்படி அனுப்பியது பரவாயில்லை, ஆனால் தன்னை வேலைநீக்கம் செய்தது அறிய வந்த பின்னரும் கூட சக நண்பர்கள், மனிதளத் துறையினர், மேலாளர், அணித்த்தலைவர்கள் ஆகியோர் மிகுந்த உற்சாகத்துடன்ஹலோ ஹவ் ஆர் யூஎனக் கேட்டு தன்னிடம் தொடர்ந்து கைகுலுக்கியதைத் தான் பொறுக்க முடியவில்லை என்றார். வேலை இனி இல்லை எனக் கூறியவரிடமும் அதே ஜில்லிட வைக்கும் பளிச்சென்ற இனிமையான புன்னகை. அதீதமான நட்பார்ந்த உடல் மொழி, கனிவு, உலகமே அற்புதமாய் இயங்குவதைப் போன்ற பாவனை, ரேடியோ ஜாக்கிகளைப் போல மிகையான தித்திப்பு பேச்சு. இவர்களுக்கு அணுக்கமான ஒருவர் இறந்து போனால் கூட பிணத்தின் கையைப் பற்றிஹலோ ஹவ் ஆர் யூகேட்பார்களோ என அவர் வினவினார். நான் சொன்னேன், “அப்படி பண்ண மாட்டாங்க. ஆனால் இரு நொடிகள் பெருமூச்சு விட்டு விட்டு பிளாஸ்டிக் சிரிப்புகள், பிளாஸ்டிக் உடல்மொழியுடன் பரஸ்பரம் அளவளாவ ஆரம்பிப்பார்கள். மதிய உணவுக்கு திட்டமிடுவார்கள். போனில் வீடியோ பார்ப்பார்கள். செல்பி எடுத்து பேஸ்புக்கில் போடலாமா என யோசிப்பார்கள். இறந்தவரின் மகனையோ மகளையோ கண்டால் I am so sorry for you என பாதி மறைத்த புன்னகையுடன் தீர்மானமாக சொல்வார்கள்.”
இது தான் எனக்கு பயமாக இருக்கிறது. என்னைப் பார்த்து கடிந்து எதையாவது சொல்லி வேலைநீக்கம் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்என்றார் நண்பர்.
அதன் பிறகு நாங்கள் சோகமாய் புன்னகைத்து கைகுலுக்கி பிரிந்தோம்.

அன்று என் மேஜைக்கு திரும்பியதும் அலுவலகத்தில் என்னைச் சுற்றி மிகுந்த நட்புணர்வுடன் புழங்குகிறவர்களை கவனித்தேன். “இவர்கள் யார்? ஏனிப்ப்படி இருக்கிறார்கள்? இவர்கள் இப்படி போலியாக இருக்கிறார்கள் என்பது இவர்களுக்கே புரியவில்லையா?”

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தோழியுடன் புன்னகையைப் பற்றி பொதுவாக பேசிக் கொண்டிருந்த போது அவர் முன்பு ராஜ்டிவியில் அடிக்கடி வெளிவரும் பாலு ஜுவல்லர்ஸ் விளம்பரம் பற்றி குறிப்பிட்டார். அழகான பால் சிரிப்பு. பாசாங்கற்ற சிரிப்பு. அந்த விளம்பரம் பார்க்கும் போதெல்லாம் அவர் நம்மை தனது வீட்டுக்கு விருந்துக்கு அன்பாய் அழைப்பது போல இருக்கும் என்றார். அதன் பிறகு பாலு ஜுவல்லர்ஸ் அரசியல்வாதிகள் சிலரது சூழ்ச்சியால் வியாபாரம் குலைந்து நலிவுற்றதை குறிப்பிட்டு வருந்தினார் தோழி. இன்று அவரைப் போல குழந்தைத்தனமான சிரிப்பு கொண்டோரை விளம்பரங்களில் பார்க்க முடிவதில்லை என்றார். இன்று அத்தகைய திறந்த, ஆத்மார்த்த சிரிப்புகளுக்கு இடமில்லை, அதற்கு மதிப்பும் நமது கார்ப்பரேட் உலகில் இடமில்லை என்று பேசினோம். இந்த உரையாடல் என்னை இது குறித்து மேலும் சிந்திக்க வைத்தது. நாம் இன்றைய தலைமுறையினரை குற்றம் சொல்ல முடியாது, பிளாஸ்டிக்தன்மை அவர்கள் மீது திணிக்கப்படுகிறது, அதுவே இன்று செல்லுபடியாகிறது, அதுவே இன்று சௌகர்யமாய் உள்ளது. புன்னகையை நாம் இன்று ஒரு கவசமாய் பயன்படுத்திக் கொள்கிறோம் எனத் தோன்றியது. இன்று நாம் திரு. பாலுவிடம் இருந்து laughing therapy பயிலும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்து பிரகாஷ்ராஜ்களிடம் வந்து சேர்ந்திருக்கிறோம். கோபத்தில் இருந்து தப்பிக்க சிரியுங்கள் எனும் அவரது உச்சபட்ச அணுகுமுறை நாம் எடுப்பதில்லை என்றாலும் கோபம், வருத்தம் ஆகிய உணர்ச்சிகளில் இருந்து தப்பிக்க மென்மையாக அனைவரையும் கண்டு புன்னகைத்து விலகிச் செல்பவர்களாக மாறி இருக்கிறோம்


கடந்த சில பத்தாண்டுகளில் positive psychology எனும் உளவியல் வகைமை தோன்றியுள்ளது. இதன் கொள்கை பரப்புச் செயலாளர்களேவெற்றி உங்கள் வாசலில் காலிங் பெல்லை அடித்தபடி நிற்கிறது...” என்பது போன்ற புத்தகங்களை எழுதுவார்கள். இவர்கள் இடையே சிக்ஸென்மிகாய், ஆண்டெனி ராபின்ஸ், பிரையன் டிரேஸி போன்ற முக்கிய சிந்தனையாளர்களும் உண்டு. ஒட்டுமொத்தமாக இவர்களை வாழ்க்கை பயிற்சியாளர்கள் (life coaches) என அழைக்கிறார்கள். வாழ்க்கையை வாழ எதற்கு பயிற்சி? ஆம், இன்றைய கார்ப்பரேட் உலகம் நமது வாழ்க்கை அணுகுமுறையை முழுக்க மாற்றி அமைக்க விரும்புகிறது. மனித உணர்வுகளில் நுகர்வுத் தகுதி கொண்டவை எவை என கார்ப்பரேட்டுகள் சிந்திக்க தொடங்கிய போது இயல்பாகவே மகிழ்ச்சியையே மனிதர்கள் தொடர்ந்து அன்றாடம் நாடுகிறார்கள் என புரிந்து கொண்டது. குடும்பம், சாதி சனம் போன்ற சமூக கட்டமைப்புகள் தகர்ந்த உலகப்போர்களுக்கு பின்பான ஐரோப்பாவில் தனித்த மனிதர்கள் அதிகமாய் உளநோய்களுக்கு ஆட்பட்டார்கள் என எரிக் புரோம் தனது Fear of Freedom நூலில் குறிப்பிடுகிறார். கார்ப்பரேட்டுகள் இப்போது மகிழ்ச்சியை ஒரு பண்டமாக உருமாற்றி விற்க முடியும் என புரிந்து கொள்கிறார்கள். ஆனால் மகிழ்ச்சி கைக்கொள்ளத்தக்க ஒரு பொருள் அல்லவே! அதனால் அவர்கள் பொழுதுபோக்கு சாதனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஒரு மகிழ்ச்சி சந்தையையே உருவாக்குகிறார்கள். சினிமா, டி.வி, உணவகம், பயணம், உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றில் இருந்து சமூக உறவாடல்கள் வரை இந்த மகிழ்ச்சி சந்தை இன்று விரிவடைந்துள்ளது. நீங்கள் சிரித்தபடி ஒரு உற்சாகமான சூழலில் ஒரு செல்பியை பேஸ்புக்கில் வெளியிடுகிறீர்கள். அதற்கு பலர் உடனடி விருப்பக்குறிகளை அளிக்கிறார்கள். நீங்கள் சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு கசப்பான ஒரு வாக்கியத்துடன் மற்றொரு செல்பியை பதிவேற்றுகிறீர்கள். அதற்கு மிகச்சிலர் விருப்பக்குறிகளை அளிக்கிறார்கள். சிலர்என்னாச்சு?” என விசாரிக்கிறார்கள். பலரும் துயரத்தை சீண்ட விரும்பாமல் கடந்து போகிறார்கள். முன்புஇது நான் எனது கடைசி நாள். நான் செத்து விடப் போகிறேன்.” என சிலர் பேஸ்புக்கில் அறிவித்து விட்டு offlineக்கு போய் விடுவாரக்ள். அவரது நண்பர்கள் என்னாச்சோ ஏதாச்சோ என பதறுவார்கள். அடுத்த நாள் அவர் திரும்ப வந்துசும்மா விளையாடினேன்என சிரிப்பார்கள். வேறு சிலர் தன்னை யாரும் சாவின் விளிம்பில் கூட பொருட்படுத்தவில்லையே என கூடுதலாய் துயரத்தில் ஆழ்வார்கள். சமீபத்தில் ஒரு நண்பர் தன் தோழி ஒருத்தியின் பிறந்த நாளுக்கு வாழ்த்திய போதுநான் தற்கொலை முடிவெடுத்த போது இவர் மட்டுமே என்னை அக்கறையாய் போன் செய்து விசாரித்தார்என குறிப்பிட்டிருந்தார். இன்று இத்தகைய பொதுவெளி தற்கொலை மிரட்டல்களுக்கு மதிப்பு குறைந்து விட்டது. “சாவு, தற்கொலைபோன்ற சொற்களைக் கண்டாலே இரண்டு அடி தள்ளிப் போய் விடுகிறோம். இந்த விலகலுக்கும் மகிழ்ச்சி சந்தைக்கும் ஒரு நுட்பமான தொடர்பு உள்ளது.


மேலும் படிக்க “பிளாஸ்டிக் சிரிப்புகளின் காலம்

https://www.minnambalam.com/k/2019/07/29/8

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...