இதுவே இன்றைய பின்நவீன நுகர்வுக் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் நமது உலகை பிரமாண்டமான ஹைப்பர் மார்க்கெட் ஆக்குகிறது. ஹைப்பர் மார்க்கெட்டில் நீங்கள் எல்லாப் பொருட்களையும் வாங்கப்போவதில்லை; ஆனால், அவ்வளவு பொருட்கள் அங்கு உள்ளன எனும் உணர்வே நம்மைப் பூரிக்கவைக்கிறது; கைக்கொள்ளாத உலகம் நம் கையில் வந்தது போன்றும், அது நம் கையில் வந்தாலும் அது நம்மை மீறி பிரம்மாண்டமானது என்றும் சுயமுரணாக உணர்கிறோம்.
ஹைப்பர் மார்க்கெட்டில் இருக்கையில் நம் உலகம் ஏன் இவ்வளவு வாய்ப்புத் தேர்வுகள் அற்றதாய் உள்ளது என ஏங்குகிறோம்; அதே நேரம் ஏன் இதுவும்கூட (ஹைப்பர் மார்க்கெட்) நம் உலகம்தானே என சமாதானம் ஆகிறோம்; அடுத்து மெல்ல மெல்ல நம் நடப்புலகில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பொருளையும் மனிதர்களையும் ஹைப்பர் மார்க்கெட்டில் அடுக்கி வைக்கப்பட்ட பொருட்களைப் போன்று பாவிக்கத் தொடங்குகிறோம். வாங்க வாங்கத் தீராதது போன்றே துய்க்கத் துய்க்கத் தீராததே வாழ்க்கை என நம்பத் தொடங்குகிறோம்.
இப்படித்தான் நாம் ஃபேஸ்புக்கை வந்தடைகிறோம். அது ஒரு மெய்நிகர் ஹைப்பர் மார்க்கெட். அங்கு லட்சோபலட்சம் மனிதர்களின் கோடானுகோடி சிந்தனைகள், உணர்வுகள், மனப்பதிவுகள், தகவல்கள் மத்தியில் இருக்கிறோம்; அவை அனைத்தும் நமதே, ஆனால் நாம் அவற்றை வாங்கி உரிமை கொண்டாடத் தேவையில்லை; எடுத்துப் பார்த்து வைத்துவிடலாம். அப்படிப் பார்த்து முகர்ந்து கீழே வைக்கும்போது நாம் உணரும் சுதந்திரம் நம்மை உலகின் மிகப்பெரிய செல்வந்தனாய் உணர வைக்கிறது. ஃபேஸ்புக் நம்மைக் கோடானுகோடி மனித மனங்களின், மனித இருப்புகளின், உறவுகளின் சொந்தக்காரனாக்குகிறது. ஆனால், அதற்கு ஒரு விலை உண்டு. எல்லாரும் நமக்கானவர்களே, அதற்கு நாம் யாரையும் நிரந்தரமாய் உள்வாங்கக் கூடாது; யார் அனுபவத்துக்குள்ளும் ஆழமாய் இறங்கக் கூடாது. எடுத்துப் பார்த்த்து வைத்துவிட வேண்டும்.
எதுவும் தற்காலிகமானது, உடனடியாய் துய்க்கவும் மறுநொடி மறந்து விடவும் தக்கது என நாம் நம்ப வேண்டும். இதன் பிறகு வாழ்க்கையே ஒரு கேளிக்கைக் கொண்டாட்டமாகிவிடும்.
இத்தகைய மக்கள் பெரிய துயரங்களுக்கு தம்மை ஆட்படுத்திக்கொள்ள மாட்டார்கள். இரண்டு நிமிடக் கண்ணீர், அதை அடுத்து ஒரு புன்னகை, அதை அடுத்து உடனே “ஹையா ஜாலி” என்னும் குதூகலம். இப்படி உணர்ச்சிகளை நொடிக்கு நொடி மாற்றும்படி ஊடகங்களும் இன்றைய நுகர்வு கலாச்சாரமும் நமக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை நல்கியபடி இருக்கும். காந்தியின் மரணத்தை ஒட்டிப் பல மாதங்கள் மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருந்ததாய் படித்திருக்கிறேன். இன்றைய சமூக நினைவுகளில் எதுவும் அவ்வளவு காலம் தங்காது.
இதன் விளைவாகத்தான் அரசியலில் பல குற்றங்களை உடனுக்குடன் மறந்துவிடுகிறோம். தலைவர்களை நீண்ட காலம் விமர்சனத்துக்கும் கேள்விகளுக்கும் உட்படுத்துகிற பண்பாட்டை இன்று கைவிட்டுவிட்டோம். இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடனம் குறித்து எவ்வளவோ எழுதப்பட்டது, திரைப்படங்களில் பலமுறை நினைவுகூரப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவின் மரணமும் அதை ஒட்டிய அரசியல் நாடகங்களையும் பற்றி ஒரு படமோ நாடகமோ குறிப்பிடவில்லை. இன்றைய உடனடி உணர்ச்சி யுகத்தில் அரசியல் சுரணையின்மை ஏற்படுகிறது. சமூக மனசாட்சியைத் தட்டி எழுப்புகிற எழுச்சி இன்று சாத்தியப்படாமல் போகிறது. ஒரு நாளுக்கு மேல் நம்மால் இன்று போராட்டங்களில் கலந்துகொள்ளவோ ஒரு பிரச்சினையைப் பற்றி விவாதிக்கவோ முடியாது. கொள்கைகள், அரசியல் நம்பிக்கைகள் இன்று சுரத்திழந்து அர்த்தமற்றுப் போய்விடுவதும் இதனால்தான்.
உடனடி எதிர்வினைகள் தரும் பரவசம்
மைக்ரோ - மினி நிலைத்தகவல்களின் மேல் மட்டும் பார்வையைச் செலுத்தும் மனநிலையின் பாதகங்கள் இவை என்றால் அவற்றின் சாதகங்கள் சுதந்திர மனநிலை, எல்லையற்ற அனுபவப் பரப்பு, ஜாலி மனநிலை ஆகியவை.
ஃபேஸ்புக்கில் செய்தி ஓடையில் சரம் சரமாய் நிலைத்தகவல்கள், படங்கள், மீம்கள், லைவ் வீடியோக்கள், விளம்பரங்கள் வருகின்றன. தெருவில் நின்று கடைகளை, வாடிக்கையாளர்களை, வழிப்போக்கர்களை, பெண்களை, ஆண்களை, குழந்தைகளை வேடிக்கை பார்த்து, அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கும் மனநிலை இது. இதே கடைவீதியில் ஒரு ஸ்டிரைக் நாளன்று அது வெறிச்சோடிக் கிடக்கும்போது நாம் கவனிக்கையில் நமக்கு ஒரு சின்ன இடத்தில், கால - இட எல்லைகளுக்கு உட்பட்ட இடமொன்றில், மாட்டிக்கொண்ட உணர்வு கிடைக்கும். ஃபேஸ்புக்கில் நாம் இதே கடைவீதியில் இன்னும் நெருக்கமாய் ஜனங்களுடன் பயணிக்கிறோம்; ஒவ்வொருவரின் உணர்வுகளையும் பயணங்களையும் இன்னும் அணுக்கமாய் அறிகிறோம், அல்லது அவ்வாறு கற்பனை பண்ணிக்கொள்கிறோம். இதுவே நம்மை விடாமல் ஸ்க்ரோல் பண்ணத் தூண்டுகிறது; படிக்காமல் சும்மா பார்த்துவிட்டு நகர்வதில் சுகமும் பறக்கும் உணர்வும் ஏற்படுகின்றன.
இப்போது ஒருவர் நீண்ட பதிவொன்றைப் போட்டிருப்பதைப் பார்க்கிறோம். “தொடர்ந்து படியுங்கள்” எனும் இடம் வந்ததும் நாம் ஒரு நொடி திகைக்கிறோம். படிக்காமலே அடுத்த பதிவுக்கு நகர்கிறோம். ஒருவேளை இப்பதிவை ஒருவர் சிரத்தை எடுத்துப் படித்தால் என்னவாகும்? அவரது காலம் உறையும். அவர் ஒன்றுக்குள் மாட்டிக்கொள்வார். அந்த ஒன்றுடன் மட்டுமே அவர் காலத்தில் பயணித்தாக வேண்டும். இந்த ஒன்று அவரது கழுத்தில் ஒரு கல்லைப் போலத் தொங்குகிறது. விருப்பமில்லாத உறவுக்குள் மாட்டிக்கொண்டவரைப் போல அவர் உணர்கிறார்.
மேலும் படிக்க: https://www.minnambalam.com/k/2019/05/21/19