மலையாள பிக்பாஸ் முதல் பருவத்தில் கூட இதே பிரச்சனை பெர்ளி—சுரேஷ் உறவு குறித்து எழுந்தது. வீட்டில் உள்ள பெண்களின் புகார் பெர்ளி மீது யாராவது குற்றம் சொன்னாலோ அவளோடு வாக்குவாதம் பண்ணினாலோ சுரேஷ் நடுவே அரண் போல வந்து நிற்கிறார் என்பது. அவர்கள் காதலிப்பது அல்ல, அவர்களின் காதல் ஒரு அரணாக தமக்கிடையே வருவதே பிற பங்கேற்பாளர்களின் முக்கிய புகார். ஏன் என்றால், பெர்ளி சுரேஷை முழுக்க ஏற்கவில்லை; தனக்கு சுரேஷ் மீது எந்த காதல் விருப்பமும் இல்லை என அவள் திரும்பத் திரும்ப எல்லாரிடமும் ஒப்புவிக்கிறாள். அதை அவர்கள் ஏற்கிறார்கள். ஆனால் அவர்களின் கோபம் குறைவதில்லை. வார இறுதியில் மோகன்லால் பிக்பாஸின் சார்பில் பெர்ளியை விசாரணை பண்ணிட அவள் அழுகிறாள். தன்னை மொத்த வீடுமே தூற்றுவது கண்டு கலங்கிப் போகிறாள். பெர்ளி சுரேஷை பயன்படுத்திக் கொள்கிறாள் என போட்டியாளர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
அந்தளவுக்கு அவர்களுக்கு சுரேஷ் மீது அக்கறை என்றால் அவரது பிற பிரச்சனைகளில் அவர்கள் ஏன் இந்தளவுக்கு அவர்கள் தலையிடுவது இல்லை? இன்னொரு பக்கம் பெர்ளி ஸ்ரீனிஷை விரும்புகிறாள். வெளிப்படையாக. அது பாரஸ்பர காதல் ஆகிறது. ஆனால் இதைப் பற்றி யாருக்கும் புகார் இல்லை. ஏனென்றால், ஶ்ரீனிஷ் தன் காதலை இருட்டில் வைத்திருக்கிறார். அவர் பொதுவெளியில் பெர்ளி ஆதரித்து ஒரு சொல் கூட கூற மாட்டார். யாராவது பெர்ளியைப் பற்றி புறம் பேசினால் அவரும் சேர்ந்து அவளைப் பற்றி புறம் பேசுவார். அவர் இரட்டை வேடமிடுகிறார். இதனால் அவரால் இரண்டு உலகங்களில் இருக்க முடிகிறது. அவர் தம்முலகில் சஞ்சலமின்றி உலவுவதால் பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அவரை ஏற்கிறார்கள்.
வயதில் மூத்தவரான சுரேஷால் ஏன் இந்த சாமர்த்தியத்தை காதலில் காட்ட முடிவதில்லை? ஏனென்றால், அவரது காதல் நிராகரிக்கப்படுகிறது. அவருக்கு பெர்ளியிடம் தன் பிரியத்தை நிலைநிறுத்த முடிவது பொதுவெளியில் மட்டுமே, அதுவும் பெர்ளியை பிறர் தாக்கும் போது அவளுக்கு அரணாய் நடுவே வந்து நின்று கொண்டு மட்டுமே. ஶ்ரீனிஷோ இரவின் தனிமையில் மட்டும் அவளிடம் பேசுகிறார். ஏனென்றால் அவருடையது ஏற்கப்பட்ட காதல்; பரிபூரணமான, நிராகரிப்பற்ற, மனக்குறைகளற்ற காதல்.
காதல் மட்டுமே ஒரு விசயமாக அங்குள்ளவர்களுக்கு ஒரு பிரச்சனை அல்ல என இது காட்டுகிறது. காதல் தமக்கிடையே ஒரு அரணாவதே அவர்களின் புகார்.
ஏன் இப்படி நினைக்கிறார்கள்?
இங்கு தான் ஒரு சுவாரஸ்யமான விசயம் வருகிறது. நமது உலகில் எல்லா பொதுவிட உறவுகளிலும் அதிகார விளையாட்டு உண்டு. யாரிடம் எந்தளவுக்கு உறவாடினால் நாம் எதை அடைவோம் என ஒரு புரிதல் அனைவரிடமும் உண்டு. இதில் ஒரு கணக்கு, பகுத்தறிவு, பிரக்ஞை செயல்படுகிறது. ஒவ்வொன்றையும் தர்க்க ரீதியாய், புறவயமாய் அளந்து அளந்து பேரம் செய்து தக்க வைப்பதே நமது லௌகீக உறவுகள். எப்படி இவன் / இவள் கிட்ட நட்பு வைத்திருக்கிறானோ / வைத்திருக்கிறாளோ என நாம் அதிகம் வினவுவதில்லை. ஆனால் காதலில் எப்போதுமே நமக்கு புரிபடாத ஒரு பித்துநிலை உண்டு. தமிழ் பிக்பாஸ் முதல் பருவத்தில் ஓவியாவுக்கு ஆரவ் மீது ஏற்பட்ட அந்த கண்மூடித்தனமான வசீகரமான காதல் உறவை இங்கு சொல்லலாம். ஆரவ் தன்னைப் பற்றி வெளியே வேறுவிதமாய் சொல்கிறான், தன்னை முத்தமிட்டதை, தன்னை நேசித்தை வெளியே சொல்ல தயங்குகிறான் என வீடியோ ஆதாரம் காண்பிக்கப்பட்டு, ஆரவ் ஓவியாவை ஏமாற்றுகிறான் என பிக்பாஸ் வெளிச்சமிட்டு காட்டிய பின்னரும் ஓவியா தான் ஆரவ்வை இன்னும் நேசிப்பதாய் சொல்கிறாள். ஓவியா வெளியே வந்த பின்னர் மேடையில் கணிசமான பார்வையாளர்கள் ஓவியா இதைச் சொன்ன போது “No No வேண்டாம் ஓவியா ஆரவ் வேண்டாம்” என கத்தினார்கள். ஓவியா அதை கண்ணியமாய் நிராகரித்து விட்டு மேடையை விட்டு இறங்கிப் போனார். இதைத் தொடர்ந்து அவர் ஆரவ்வுடன் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்ற புகைப்படங்கள் வெளியாகின. இந்த பார்வையாளர்கள் வேண்டாம் எனக் கூவியது ஆரவ்வை உத்தேசித்து அல்ல, ஓவியாவின் அதர்க்கமான நிலைப்பாட்டை எதிர்த்தே அவர்கள் அப்படி அறிவுரை பகிர்கிறார்கள்.
நாம் வாழும் உலகம் 90% தர்க்கரீதியானது. அந்த உலகில் காதலர்கள் ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் தனியாக நமக்கு புரியாத தீர்மானங்களுடன் வாழ்கிறார்கள். புரியாமையை விட அவர்களின் பித்து மனம், அதர்க்க போக்கு தான் நம்மை அதிகம் தொந்தரவு பண்ணுகிறது. ஏனென்றால் நாம் அந்த உலகில் பட்டவர்த்தமாய் ஒருநாளும் தர்க்கத்துக்கு மாறாக செயல்பட மாட்டோம். புறவயமான நமது உலகம் மிகத்திடமாய் ஒழுங்காய் தர்க்கநெறியுடன் பிசிறற்று இருப்பதாய் நம்பும் போது காதலர்கள் தமது கோணல் உலகை கொண்டு நம் முன் வருகிறார்கள். ஒரு பகுத்தறிவாளரிடம் கர்த்தர் வந்து தன் அற்புதம் ஒன்றை நிகழ்த்துவதைப் போன்றது இது. வேறு எல்லா நேரங்களிலும் கர்த்தரைப் போற்றத் தயாராக இருக்கும் நம் பகுத்தறிவுவாதி இப்போது கர்த்தரை கடுமையாய் சாடுவார். கர்த்தர் என்பவர் ஒரு போலி செப்படிக்காரர் என பரிகாசம் பண்ணுவார். ஏனென்றால் கர்த்தர் ஒரு துண்டு அப்பத்தை நூறாயிரம் அப்பங்கள் ஆக்கும் போது, ஒரு காதல் ஜோடி அற்ப விசயங்களின் பொருட்டு உலகையே மறந்து புளகாங்கிதம் கொள்ளும் போது, எதையும் தியாகம் பண்ணத் துணியும் போது, அவர்களின் நமது பகுத்தறிவின் ஒழுங்கின் உலகை அச்சுறுத்துகிறார்கள்.
பிக்பாஸ் போன்ற உலகில் நிறைய ஒழுங்கின்மை விளையாட்டுகள் உண்டென்றாலும் அவை அனைத்தையும் விழுங்கி ஏப்பம் விடும் உச்சபட்ச கதையாடலே காதல். காதலர்கள் பிக்பாஸ் உலகம் ஒரு விளையாட்டுத் திடல் என்பதை மறக்கிறார்கள். பிற பங்கேற்பாளர்கள் இது ஒரு விளையாட்டு, விளையாட்டு மட்டுமே என தமக்கு நினைவுபடுத்தும் போது, இவர்கள் தாம் போட்டியாளர்கள் அல்ல, போட்டியைக் கடந்தவர்கள் என பிரகடனம் பண்ணுகிறார்கள். காதலின் இந்த மாற்றுத் தரப்பு, அதர்க்கமான தர்க்கம், பிக்பாஸ் வீட்டுக்குள் நீங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் ஆகிறது. அது நீங்கள் பிற பங்கேற்பாளர்களுடன் கொள்ளும் சமயோஜிதமான, விட்டேந்தியான நடைமுறை விதிகளுக்கு உட்பட்ட உறவுகளை கேள்விக்குள்ளாக்குகிறது, அபத்தமாக்குகிறது, என்னுடன் இருந்து அரட்டை அடிப்பவரை பின்னர் வாய்ப்புக் கிடைத்தால் தயங்காமல் போட்டுத் தள்ள வேண்டும் எனும் பிக்பாஸ் போட்டியாள மனநிலையை இது முகத்தில் கரிவாரிப் பூசுகிறது.
இதனால் தான் நாம் பொதுவெளிகளில் காதலை வெறுக்கிறோம். காதல் நமக்கு வரும் போது மட்டுமே நாம் அதன் அருமையை உணர்கிறோம். ஓவியாக்களும் பெர்ளிகளும் அதுவரை நமது ஒழுக்க நீதிமன்றக் கூண்டுகளில் நிறுத்தப்பட்டு கேள்விகளால் துளைக்கப்படுவார்கள். ஏனென்றால் நம் பிரச்சனை ஒழுக்க மீறல் அல்ல, நவீன கார்ப்பரேட் உலகின் ஆலை ஒழுங்கை, பகுத்தறிவை காதலர்கள் மீறுவதே! இதனாலே நாம் காதலை கொண்டாடியபடி அதை வெறுக்கிறவர்களாகவும் மாறுகிறோம். நவீன நாகரிக உலகின் முக்கியமான முரண் இது.