Skip to main content

பிக்பாஸ்: ஆண்-பெண் உறவு (1)



பிக்பாஸ் வீடு எப்படி இன்றைய கார்ப்பரேட் சமூகத்தை, அது கண்காணிக்கப்பட்டு ஒரு போட்டிக்களமாய் நடத்தப்படும் விதத்தை, வேலையிடத்தில் நிர்வாகம் தன் அதிகாரத்தை செலுத்தும் நுணுக்கங்களை பிரதிபலிக்கிறது என ஏற்கனவே விவாதித்திருக்கிறேன். இன்றைய வாழ்நிலையை ஒரு நிலைக் கண்ணாடியில் கண்டு புரிந்திட பிக்பாஸ் நிகழ்ச்சி உதவுகிறது என்றும் சொல்லி இருந்தேன். விவிலிய நீதிக்கதைகளைப் போல இதுவும் ஒரு நவீன நீதிக்கதை (அப்படி நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உத்தேசிக்கவில்லை என்றாலும்). இப்போது இன்றைய ஆண்-பெண் உறவுநிலைகளை, அதில் வந்துள்ள மாற்றங்களை, மாறாத அம்சங்களை, இதில் கேரளாவுக்கும் தமிழகத்துக்குமான மாறுபாட்டை கவனிப்போம்.


மலையாளம் மற்றும் தமிழில் எல்லா பதிப்புகளிலும் எப்படியாவது ஒரு காதல் வந்து விடுகிறது. இது திட்டமிடப்பட்டதா? தெரியவில்லை. ஆனால் பிக்பாஸ் நிர்வாகம் இந்த ரொமான்ஸ் அம்சத்தை முக்கியமாய் நினைக்கிறது. இந்த ரொமான்ஸ் ஆச்சரியமாய் எப்போதும் ஒருவித ஏமாற்றத்தில் தான் முடிகிறது. மலையாளத்தில் சுரேஷுக்கு பெர்ளி மீது தோன்றிய விடலைக் காதல், பெர்ளிக்கு ஸ்ரீனிஷ் மீது இருந்த பரஸ்பர காதல், ரஞ்சனிக்கும் ஹீமாவுக்கும் ஷாபு மீது ஏற்பட்ட ஈர்ப்பு, தமிழில் முதல் பருவத்தில் ஓவியாவுக்கு ஆரவ் மீது ஏற்பட்ட குழந்தைத்தனமான இச்சை, இரண்டாம் பருவத்தில் யஷிகா-மஹத்தின் வித்தேத்தியான காதல், பாலாஜி-நித்யாவின் வற்புத்தி திணிக்கப்பட இணக்கமும் அன்பும் என இப்படி ஒவ்வொரு முறையும் ஒரு ரொமான்ஸ் அத்தியாயம் சரியாய் வந்து விடுகிறது. இந்த ரொமான்ஸில் ஒரு தனித்துவம் உள்ளது.

இவர்களில் பெர்ளியும் ஶ்ரீனிஷும் நிகழ்ச்சி முடிந்த பின் திருமணம் செய்து கொண்டார்கள். மிச்ச பேரின் காதல்கள் உயிரே படத்தில் இடுப்பில் வெடிகுண்டைக் கட்டி அலையும் மனிஷா கொய்ராலாவின் காதலைப் போலத் தான். அவர் காதலை ஏற்கும் போது அவரோடு காதலனும் வெடித்து பரலோகம் போக வேண்டியது தான். பிக்பாஸின் ஒவ்வொரு காதலும் இப்படி பரலோகம் போய் விடும் என பார்வையாளர்களும் நிச்சயமாய் தெரியும். ஏன் இப்படி? நம் அலுவலகத்தில், தெருவில் யாராவது காதலித்தால் இந்த காதல் நிலைக்காது என நாம் நினைப்பதில்லையே? பிக்பாஸில் மட்டும் ஏன் இப்படி?

பிக்பாஸில் காதலிப்பது விக் அணிவது போல. என்னதான் அழகாய் பொருத்தமாய் அமைந்தாலும் கழற்றித் தான் ஆக வேண்டும். அது நம்முடையது அல்ல, நம் உடலின் பகுதியானது அல்ல. எப்படி பிக்பாஸ் வீட்டின் நாற்காலி, கட்டில், சமையலறை, கண்ணாடி, பட்டக்கருவிகள், மைக், படக்கருவி ஆகியவை பங்கேற்பாளர்களுக்கானது அல்லவோ அதே போலத் தான் அவர்களின் காதலும். உறவுகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் வீட்டுக்கு வெளியிலும் தொடர முடியும் தான். அப்படி வீட்டுக்குள் நண்பர்கள் ஆனவர்கள் வெளியிலும் தொடர்கிறார்கள் தான், ஆனால் காதலில் அது நடப்பதில்ல.

பேருந்திலும் ரயிலிலும் ஒருமுறை பார்த்தவர்கள் மீது நாம் ஆர்வம் கொள்வதுண்டு; நல்ல பொருத்தம் ஏற்படும் முன் காதல் கருக்கொள்வதுண்டு. இறங்கிய பின் அவர்களுடன் தொடர்பை தக்க வைக்க எவ்வளவோ வசதிகள் இன்று உண்டு; எனினும் அது அவ்வளவாய் நடப்பதில்லை. காரணம் காதல் உருக்கொள்ளும் இடம் நிரந்தரமற்ற ஒரு நதியொழுக்கு போன்ற வெளி பயணவெளி. அங்கு காதல் தோன்றுவதற்கே அந்த நதியொழுக்கின் இறுக்கமற்ற சூழலும் சுதந்திரமும் காரணங்கள். வெளியே இறுக்கமான படிநிலைகளும் நடைமுறை எதிர்பார்ப்புகளும் மிகுந்த உலகில் நீங்கள் யார், எங்கிருக்கிறீர்கள், உங்கள் பின்னணி என்ன, சாதி, மதம், சம்பளம், சொத்து என்ன மற்றும் எவ்வளவு ஆகிய கேள்விகள் முக்கியமாகும். ஆக பயணவெளியும் நிஜவெளியும் இருவேறு உலகங்கள். இருவேறு மன உலகங்கள். பண்பாட்டு உலகங்கள். பிக்பாஸ் வீடும் அப்படியான ரயில் காதல் தான். இறங்குமிடம் வந்ததும் உறவை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது அது துவங்கும் போதே தெரிந்து போகிறது. அடுத்து, அப்படி முடித்துக் கொள்ள வேண்டும் எனும் சுதந்திரமே இந்த உறவு மலர பிரதான ஊக்கி ஆகிறது.
மேலும் பிக்பாஸ் வீட்டில் காதலிப்பவர்கள் தமது உலகம் நிஜமானது என்றும் போலியானது என்றும் ஒரே சமயம் நினைக்கிறார்கள். இது அவர்களின் காதலை அனுதினமும் தவிப்புக்குள்ளாக்குகிறது. அவர்களில் பலருக்கு வெளியே காதலர்களும் கணவன் மனைவியும் காத்திருக்கிறார்கள். அவர்கள் நிகழ்ச்சியை, தம் ஜோடியின் காதலை தினமும் பார்க்கிறார்கள். ஆக, அவர்களின் பிக்பாஸ் வீட்டுக் காதல் ஏற்கப்பட முடியாத (தகாத) உறவும் தான். இது பார்க்கிறவர்களுக்கு ருசியைக் கூட்டுகிறது.
இப்படி தோல்வியை நோக்கி மலையுச்சியில் இருந்து தள்ளி விடப்படும் காதல் கதைகள் ஒரு தொன்மமாக தொண்ணூறுகள் மற்றும் ஓரளவுக்கு ரெண்டாயிரம் வரை தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்பட்டது. இவை பெரும் வெற்றி பெற்றன. இதயம், அலைகள் ஓய்வதில்லை முதல் விண்ணைத்தாண்டி வருவாயா, 96 வரை ஏகப்பட்ட உதாரணங்கள். இப்படங்களில் சமூகப் பொருளாதார பொருத்தமற்ற ஆணும் பெண்ணும் நெருங்கும் போது இந்த உறவு ஏற்கப்படாது, காதலர்கள் துயருறப் போகிறார்கள் என பார்வையாளர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும். காதலர்கள் பிரியும் துன்பத்தை காண்பதில் ரசிக்க என்ன இருக்கிறது? பார்வையாளர்கள் என்ன சாடிஸ்டுகளா? இல்லை.

இருவர் காதலாகும் போதே பிரிவை நோக்கியும் நிச்சயம் தம்மையறியாமல் தள்ளப்படுகிறார்கள் எனும் கதைக் கட்டமைப்பில் இருவரும் ஒருவித அபாரமான சுதந்திரத்தை, அலுப்படையாத மலர்ச்சியை அடைய முடியும். வாடாத மலரைப் போன்றது தோல்வியை நோக்கிச் செல்லும் காதல். கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் (விண்ணைத் தாண்டி...) காதலிக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்ட ஜெஸ்ஸியின் அப்பா உடனே காதலை ஏற்றுக் கொண்டு மணமுடித்து வைத்து விடுகிறார் என வைப்போம். இப்போது இந்த கதையில் எதாவது சுவாரஸ்யம் உண்டா? இல்லை. சவால்கள் இக்காதலில் இருக்காது என்று மட்டுமல்ல, முழுமையடையும் காதலில், இணையும் காதலர்களில் கட்டற்ற பரிமாணம் இல்லை; அவர்களின் உறவில் காலாகாலத்துக்குமான நீட்சி இல்லை; நடைமுறையில் திருப்தி வந்து விடும் போது காதல் பரிசுத்தம் இழக்கிறது. இதை நான் சொல்லவில்லை - சமூக மனத்தின் ஆழத்தில் உள்ள தொன்மம் இது.
இந்த கதையாடலுக்கான ஒரு நவீன வடிவம் தான் பிக்பாஸ் காதல். அங்கு தோன்றும் ஒவ்வொரு கார்த்திக் ஜெஸ்ஸியும் நம்மை ஈர்க்கிறார்கள், அதேநேரம் கலங்க, பதற வைக்கிறார்கள், அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரியக் கூடாதென்றும் இணையக் கூடாதென்றும் ஒரே சமயம் எண்ணுகிறோம்.
இது தான் பிக்பாஸ் காதல். இது தான் பின்நவீன காதலின் தொன்மம்.

அடுத்த பகுதியில், இருவேறு மாநிலங்களின் பிக்பாஸ் வீடுகளில் ஆண்-பெண் படிநிலை எப்படி வித்தியாசப்படுகிறது, இந்த சமூகங்களின் இன்றைய நிலை பற்றி இது சொல்வதென்ன எனப் பார்ப்போம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...