|
ஆஸ்திரேலியாவில் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த ஆணை
பலாத்காரம் செய்த சமந்தா மியர்ஸ்
|
![]() |
|
அமெரிக்காவில் கத்தி காட்டி மிரட்டி ஆணை பலாத்காரம் செய்த சமந்தா மியர்ஸ்
|
ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
லாரா ஸ்டெம்பிள், ஆண்டிரூ ப்ளோரஸ் மற்றும் இலன் மேயர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்று (“Sexual Victimization Perpetrated by
Women…”) பலாத்காரம் செய்யும் பெண் குற்றவாளிகளைப் பற்றி பேசுகிறது. அமெரிக்காவில் 2008 முதல் 2013 வரை நான்கு அரசு கணக்கெடுப்பு நிறுவனங்கள் நடத்திய ஆய்வு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பலாத்கார குற்றங்களைப் பொறுத்தமட்டில் ஆண் குற்றவாளிகளுக்கு கிட்டதட்ட இணையாகவே பெண் குற்றவாளிகளும் ஈடுபடுகிறார்கள் என கண்டறிகிறார். நீண்ட கால பெண்ணிய பிரச்சாரம் காரணமாக ஆய்வாளர்கள் பாதிப்படும் ஆண்களை பொருட்படுத்த மறுத்திருக்கிறார்கள் / அல்லது அத்தகையோர் மீது கவனம் செலுத்தாமல் இருந்திருக்கிறார்கள். பலாத்காரம் செய்யப்பட்டதாய் கோருவது ஒரு ஆணின் ஆண்மையையே ரத்து செய்வது என்பதால் பல ஆண்கள் தமது பலாத்கார வலிகளை வெளிப்படுத்த முன்வருவதே இல்லை. இதையும் மீறி நடந்த மேற்சொன்ன ஆய்வு அளித்த புள்ளி விபரங்கள் உண்மையிலேயே அதிர்ச்சி ஊட்டுபவை.
The National Intimate Partner and Sexual
Violence Survey 12 மாதக் காலத்தில் நடந்த குற்றங்களை அலசிய போது 1.9 ஆண்களும் 1.9 பெண்களும் பலாத்காரம் செய்யப்பட்டதாய் தெரிய வந்தது. இந்த சமமான எண்ணிக்கையே நமக்கு ஜீரணம் செய்ய சிரமமாக இருக்குமென்றாலும் புள்ளிவிபரங்களை நாம் கணக்கில் கொண்டே ஆக வேண்டும் – அவை (MeTooவில் போல) தனிப்பட்ட அந்தரங்க வெளிப்பாடுகள் அல்ல, புறவயமான கணக்கெடுப்பு தரும் நம்பத்தகுந்த விபரங்கள் அவை. அடுத்து வருவதைப் பாருங்கள். மற்றொரு ஆய்வில் 19.3% பெண்கள் பலாத்காரம் பண்ணப்பட்டதாய் கூறினர் என்றால் 8.4% ஆண்கள் தாம் பெண்களால் பலாத்காரம் பண்ணப்பட்டதாகவோ அல்லது துளைக்கும்படி பலவந்தம் செய்யப்பட்டதாகவோ குற்றம் சாட்டுகிறார்கள். மற்றொரு 2010 கணக்கெடுப்பு, பலாத்காரம் செய்யப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை எடுத்துக் கொண்டது. இதில் தகவல் அளித்த ஆண்களில் 79% தம்மை பெண்கள் பலாத்காரம் செய்த்தாய் கூறினார்கள்.
மற்றொரு ஆய்வு அமெரிக்க சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த பள்ளிகளில் நடந்தது. Bureau of Justice Statistics செய்த ஆய்வில் தெரிய வந்ததென்னவெனில், சிறையிலுள்ள பெண் கைதிகளில் கணிசமானோர் ஆண் அதிகாரிகளால் (4.4%) அல்ல சக பெண் கைதிகளாலே (13.7%) அதிகமாய் பலாத்காரத்துக்கு ஆளாகிறார்கள். சிறை அதிகாரிகளில் மூன்றில் ஒரு பங்கே பெண்கள். ஆனாலும் சிறை-அதிகாரிகளில் பெண் அதிகாரிகளே மிக அதிகமான அளவில் (89.3%) பாலியல அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இக்குற்றங்கள் அதிகார துஷ்பிரயோகம் மூலமே நிகழ்கின்றன. பெண் கைதிகளுக்கு தம் குடும்பத்தினரை சந்திப்பதற்கு, வசதியான சிறை அறைகள் வாய்ப்பதற்கு, படிப்பு, வேலை, விடுப்பு என ஒவ்வொரு வசதி வாய்ப்புக்கும் பெண் அதிகாரிகளின் தயவு தேவைப்படுகிறது. தமக்கு பாலியல் ரீதியாய் உடன்படாத பெண் கைதிகளை தண்டித்து ஒடுக்கி கொடுமைப்படுத்தும் அதிகாரம் இந்த அதிகாரிகளுக்கு உண்டு. இதைக் கொண்டே அவர்களை தொடர்ந்து அத்துமீற இவர்களால் முடிகிறது என்கிறார் புக்கன்னன் தான் 2012இல் செய்த ஒரு ஆய்வில். பெக் மற்றும் ஜான்ஸன் 2012இல் வெளியிட்ட ஆய்வில் சிறைகளில் இத்தகைய குற்றங்களுக்கு எதிராய் புகார் செய்யும் கைதிகளை பெண் அதிகாரிகள் தனிமைச்சிறையில் அடைத்து தண்டிப்பதாய் 41% பங்கேற்பாளர்கள் சொல்லுகிறார்கள். இதே வருடத்தில் ஸ்மித் செய்த ஆய்வில் பெண் கைதிகள் ஆடையின்றி குளிக்கையில், ஆடை மாற்றுகையில் அங்கு நுழையும் பெண் சிறை அதிகாரிகள் அவர்களை பார்வையால் பலாத்கரம் செய்வதாய் கூறுகிறார்கள். அதே போல தேவையின்றி கைதிகளை நிர்வாணமாக்குவது, தடவி சோதிப்பது போன்ற குற்றங்களையும் செய்கிறார்கள்.
2015இல் ஸ்மித் தனது ஆய்வில் சீர்திருத்தப் பள்ளிகளில் ஆண் கைதிகளை வற்புறுத்தி உறவு கொள்ளும் பெண் அதிகாரிகளைப் பற்றி பேசும் போது, இந்த பையன்கள் உயரதிகாரிகளிடம் புகார் செய்தால் பெண் அதிகாரிகளை இவர்கள் தாம் பயன்படுத்திக் கொண்டதாய் வழக்கு தலைகீழாக்கப்படும் என்கிறார்கள்.
MeToo இயக்கத்தில் பல சினிமா புள்ளிகள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளே வைக்கப்படுகின்றன (சின்மயி-வைரமுத்து ஒரு உதாரணம்). ஆனால் இதே குற்றத்தை பெண் அதிகாரிகள் தமக்குக் கீழுள்ள பெண்கள் மீது நிகழ்த்துப் போது பெண்ணியவாதிகள் கண்டும் காணாதது போல நடந்து கொள்கிறார்கள்.
ஸ்டிரக்மேன் மற்றும் ஜான்ஸன் 2003இல் வற்புறுத்தலால் நிகழ்ந்த உடலுறவுகள் பற்றி ஒரு ஆய்வு செய்தார். 268 கல்லூரி மாணவர்களும் 355 மாணவிகளும் பங்கெடுத்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதில் தாம் பெண்கள் கடிக்கப்பட்டதாய், அறையப்பட்டதாய், தம் மீது ஏறி அமர்ந்து ஆணுறுப்பை தூண்டி தம்மை துளைக்கும்படி அவர்கள் வற்புறுத்தப்பட்டதாய் கூறுகிறார்கள். குற்றம் புரிந்த ஒரு பெண்ணின் வாக்குமூலம் இது: “நாங்கள் உள்ளே சென்றதும் நான் கதவை சாத்தினேன். நான் அவனை முத்தமிட்டு தழுவினேன். அவனது சட்டையை கழற்றினேன். கால்சராயின் ஜிப்பை திறந்தேன். அவன் நிறுத்தும்படி கேட்டான். நான் நிறுத்தவில்லை. அதன் பிறகு அவன் மீது ஏறி அமர்ந்து கொண்டேன்.”
இங்கு அந்த ஆண் ஜாலியாக இருந்திருப்பான் என பொதுவாக மக்கள் நினைப்பார்கள். ஆனால் உண்மையில், விருப்பமின்றி உறவில் ஈடுபட ஒரு ஆண் தூண்டப்படும் போது அவன் உளவியல் ரீதியாய் கடுமையாய் காயப்படவே செய்வான்; அது ஒரு வதை அனுபவமாகவே இருக்கும். ஏனெனில் செக்ஸில் இரு சாராரும் விருப்பமுடன் ஈடுபவது முக்கியம். அப்போதே அது இன்பமளிக்கும். நெருக்கடியால், வற்புறுத்தலால் அது நடக்கும் போது பாதிக்கப்படுபவர் அச்சத்தால் வேதனையால் ஆட்கொள்ளப்படுவதே நடக்கும். அது மட்டுமல்ல, இத்தகைய ஆண்கள் பிற்காலத்தில் செக்ஸில் வன்மத்தோடு நடந்து கொள்வர் அல்லது செக்ஸ் அச்சத்துடன் இருப்பர் என டர்ச்சிக் எனும் ஆய்வாளர் கோருகிறார். 2014இல் பிரஞ்ச் மற்றும் பிறர் செய்த ஆய்வில் பெண்கள் ஆண்களுக்கு அதிகமான அளவில் மதுவை குடிக்க செய்தது பிரக்ஞையற்ற நிலையில் உறவில் ஈடுபடச் செய்தது தெரிய வந்தது.
2008 இல் வில்லியம்ஸ் மற்றும் பிறர் செய்த ஆய்வில் 46.2 சதவீதம் வரை பெண்கள் தாம் ஆண்களை பலவந்தமாய் உறவில் ஈடுபடுத்தியதை ஒத்துக் கொண்டனர்.
2013இல் பாரா மற்றும் மிச்செல் 1058 பேர்களிடம் செய்த ஆய்வில் கணிசமான பெண்கள் பாலியல் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். ஆனால் ஆண்கள் தம் மீது பலாத்கார குற்றம் சுமத்தப்படும் போது, அது பெண்ணின் உடன்பாடுடனே நடந்தது / பெண்ணாலேயே நடந்தது என பழியை பாதிக்கப்பட்ட பெண் மீது சுமத்துவார்கள். அதே போல இந்த ஆய்வில் தாம் பலாத்காரம் செய்ததற்கு பொறுப்பு அந்த ஆண்களே என பல்டி அடித்தார்கள்.
சரி, ஏன் இத்தகைய ஆய்வு முடிவுகள் இதற்கு முன்பான பலாத்கார சர்வேக்களில் வெளிவரவில்லை? ஒரு காரணம், கற்பழிப்பை வன்முறை பிரயோகித்து ஒரு ஆள் மீது நிகழ்த்தப்படுவதாய் வகுத்திருக்கிறார்கள். ஆகையால், அதிக வலுவான ஒரு ஆணை பெண்ணை வன்முறை மூலம் மண்டியிட வைக்க முடியாது என்பதால் அவர்களுக்கு நிகழும் அவலங்களை இத்தகைய ஆய்வுகள் புறக்கணித்து வந்தன. ஆனால் மேற்சொன்ன ஆய்வுகளோ அனுமதி பெறாமல் வற்புறுத்தி நடத்தப்படும் உடலுறவு அல்லது முத்தமிடல் போன்ற பாலுறவு செயல்களை பலாத்காரம் என வகைப்படுத்துகிறது (MeTooவும் இன்று இவ்வாறே பலாத்காரத்தைக் காண்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.) ஆக, ஒற்றைபட்டையான விளக்கத்தை கடந்ததும் பல உண்மைகள் வெளிவருகின்றன. மற்றொரு காரணம், காவல் துறையினர் ஐரோப்பாவிலும் சரி இந்தியாவிலும் சரி, பெண்கள் இழைக்கும் பாலியல் குற்றங்களை பொருட்படுத்தி வழக்கு பதிவு செய்ய தயாராக இல்லை என்பது. பலாத்காரத்தை ஒரு பெண் மற்றொரு பெண் மீதோ குழந்தை மீதோ (ஆண்கள் மீது என்பதைக் கூட விடுங்கள்) நிகழ்த்தினால் அதை காவல்துறையிடம் எடுத்துச் செல்லப்படும் போது எள்ளி நகையாடி நிராகரிக்கப்படுகிறது; உதாரணமாய், குராய் மற்றும் சார்ஜெண்டின் ஆய்வில் ஒன்று தெரிய வந்தது: சிறுவயதில் பெண்களால் பலாத்காரம் செய்யப்பட்ட ஆண்கள் பின்னர் – சமூக அச்சம் காரணமாய் - தம்மை தாக்கியது பெண்கள் அல்ல ஆண்களே என திரித்து சொல்கிறார்கள்.
இந்திய சட்டமும் பெண்களின் பலாத்காரத்தை வகைப்படுத்துவதில்லை. நம் சட்டத்தைப் பொறுத்தமட்டில், பலாத்காரம் என்றாலே அது ஆண்கள் பண்ணுவது தான். இதனாலே பாதிக்கப்பட்டோர் முறையிட இடமோ வாய்ப்போ இல்லாமல் தமக்குள் முடங்கியபடி, தொடர்ந்து தாக்குதல்களை பொறுத்துக் கொள்கிறார்கள். அமெரிக்காவிலும் இதுவே நிலை. உதாரணமாய், அங்கு (ஆய்வாளர் டெனோவ் குறிப்பிடுவதுபடி) 2003இல் ஒரு கணக்கெடுப்பின் போது ரகசியமான முறையில் ஆண்கள் மீதான குற்றங்களை பதிவு செய்தார்கள்; அரசு அளிக்கும் புள்ளிவிபரத்தை விட இதில் அதிகமான அளவில் பெண்கள் மீது பாலியல் குற்றம் பதிவானது. பெண்களின் பாலியல் குற்றங்கள் அரசு மற்றும் சட்டத்தின் துணையுடன் (ரேடிக்கல் பெண்ணியவாதிகளின் மறைமுக ஆதரவுடன்) இருட்டடிக்கப்படுகின்றன. ஏன் ரேடிக்கல் பெண்ணியவாதிகளையும் இங்கு சேர்க்கிறேன் என்றால் சமீபத்தில் மத்திய அரசு பாலியல் குற்றங்களில் பெண்களையும் குற்றவாளியாய் பார்க்கும் விதத்தில் gender neutralஆக சட்டத்தை திருத்தியமைக்க முடிவெடுத்த போது, பெண்ணியவாதிகள் ஆவேசமாய் லாபி செய்து அதை தடுத்தார்கள். பெண்கள் மீதான குற்றங்களின் தாக்கத்தை குறைத்து மதிப்பிடும் நிலையை இது ஏற்படுத்தும் என அவர்கள் வாதிட்டார்கள். பாதிக்கப்படுபவர்களில் பெண்கள் மட்டுமே முக்கியம், பாதிப்பை ஏற்படுத்துபவர்களில் பெண்கள் இருந்தால் அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது எனும் இந்த நிலைப்பாடு பாரபட்சமானது
அல்லவா? அது அநீதி அல்லவா? ஆனால் நமது பெண்ணிய போராளிகளில் கணிசமானோர் மேக்கியாவில்லியின் சீடர்கள். அவர்களுக்கு நீதியை விட வெற்றியே முக்கியம்.
அடுத்து நாம் பார்க்கப் போவது National
Crime Victimization Survey. இதுவும் பலாத்காரத்தை ஒரு வன்முறை மிக்க பாலியல் குற்றமாக மட்டுமே காண்கிறது. (வலியுறுத்தி நடக்கும் உடலுறவை கணக்கில் கொள்ள மாட்டார்கள்.) இதில் 28% பெண்கள் ஆண்களை பலாத்காரம் செய்ததாய் தெரிய வருகிறது. பெண்களால் பலாத்காரம் செயப்பட்ட பெண்களின் எண்ணிக்கையோ 4.1% தான் (பொதுவாக இத்தகைய கணக்கெடுப்புகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தமது பாதிப்புகளை மறைத்து விடுவதால் முழுக்கணக்கும் தெரிவதில்லை).
பொதுவாக லெஸ்பியன்கள் பிற பெண்கள் மீது செய்யும் பலாத்காரங்கள் குறித்து குறைவான ஆய்வுகளே நடந்துள்ளன. லை, ஸ்கிலிட், புஷ் மற்றும் பலர் 1990இல் செய்த ஆய்வில் லெஸ்பியன்கள் மத்தியில் பாதி பேருக்கு மேல் பெண்களால் பலாத்காரம் செய்யப்படுவதாய் தெரிய வந்தது. காவல்துறையின் National Incident-based Reporting System கணக்கெடுப்பிலும் இது உறுதியானது. ஆனால் ஏற்கனவே சிறுபான்மையாய், விளிம்புநிலையினராய் இருப்பதால் பாதிக்கப்பட்ட லெஸ்பியன்கள் தமது கூட்டத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராய் வழக்குத் தொடுக்க விரும்புவதில்லை. ஆகையால், இத்தகைய குற்றங்கள் கவனத்துக்கு வருவதில்லை.
மேலும் சட்டப்பாதுகாப்பு இவ்விசயத்தில் லெஸ்பியன்களுக்கு இருப்பதில்லை (ரேடிக்கல் பெண்ணியவாதிகளுக்கும் அக்கறையில்லை). கெர்ஷிக் 2002இல் செய்த ஆய்வில் பங்கேற்ற ஒரு பாதிக்கப்பட்ட லெஸ்பியன் தன்னை பலாத்காரம் செய்த பெண் அதை குற்றமாகவே ஏற்க தயாரில்லை; “இதெல்லாம் ரேப்பா?” எனக் கேட்டு அவர் சிரித்ததாய் கூறுகிறார். இது குற்றமா இல்லையா எனும் சட்டரீதியான குழப்பம் நீடிப்பதால் பெண்கள் இதை தமக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களும் தொடர்ந்து தமக்குள் கசந்தபடி பொறுத்துக் கொள்கிறார்கள்.
பாலியல் அத்துமீறலுக்கு
அனுமதி மறுக்கப்படும் லெஸ்பியன்கள் மிக வன்மத்தோடு நடந்து கொள்கிறார்கள், துரத்துகிறார்கள், மிரட்டுகிறார்கள், மன உளைச்சல் கொடுக்கிறார்கள் என்பது இந்த வழக்கில்
மட்டுமல்ல வேறு பல லெஸ்பியன் வழக்குகளிலும் நாம் காணும் ஒன்று. வன்முறையை, அச்சுறுத்தலை நாம் ஆண் உடம்புடன் மட்டும் அடைப்புக்குறி
இடுவது போன்ற அபத்தம் வேறில்லை. வன்முறை, தான் இச்சிக்கும்
உடலை ஆதிக்கம் செய்யும் விழைவு, அது நிகழாத போது அழிக்கவோ அசிங்கப்படுத்தவோ உளவியல் தாக்குதல் தொடுக்கவோ செய்யும்
முனைப்பு எல்லா உடல்களிலும் வெளிப்படுகிறது – அதற்கு ஆணுடல் பெண்ணுடல் என வித்தியாசமில்லை.
பெண்மை-அமைதி-நீதி-ஒழுக்கம் × ஆண்மை-வன்முறை-பலாத்காரம்-சமூக நியதிகளை மீறல்
என ஒரு இருமை சட்டகத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு நாம் பாலியல் குற்றங்களை சரிவர புரிந்து கொள்ள முடியாது. இந்த சட்டகம் 1) ஒரு பாலியல் குற்றத்தை ஆண் மட்டுமே செய்ய முடியும், ஏனெனில் உடல்ரீதியாகவோ சமூக கட்டமைப்புகள் வழியாகவோ அவனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என யோசிக்க நம்மைத் தூண்டுகிறது. ஆனால் ஆணதிகார கட்டமைப்புகள் ஒரு பெண்ணுடலிலும் செயல்பட முடியும் என MeTooவினர் உள்ளிட்டு பல பெண்ணியவாதிகளும் பார்க்கத் தவறுகிறார்கள்.
2) பெண்கள் நிகழ்த்தும் கணிசமான பலாத்கார குற்றங்களை நாங்கள் பரிசீலிக்க மாட்டோம், அதற்கு கண்மூடிக் கொள்வோம், அது ஆண்களுக்கு எதிரான எங்கள் பிரச்சாரத்துக்கு அவசியம் என ரேடிக்கல் பெண்ணியவாதிகள் கோருகிறார்கள். இது அடிப்படையில் ஒரு முரணான நிலைப்பாடு – ஆணால் தாக்கப்படும் ஒரு பெண்ணுக்காக போராடுவோம், ஆனால் அதுவே பெண்ணால் பாதிப்புக்குள்ளான ஒரு பெண் என்றால் நாங்கள் புறக்கணிப்போம் என்பது இரண்டு கண்களில் ஒன்றை மட்டுமே பாதுகாப்போம் என்பதைப் போன்றது. ஒரு கண்ணை பொத்தியிருக்கிறீர்கள், மற்றொன்று திறந்திருக்கிறது – மற்ற கண்ணில் விரல் விட்டுக் குத்தினால் பொத்தின கண்ணிலும் தானே கண்ணீர் வரும்? நீதி என்பது எல்லாருக்கும் ஒன்று தானே! பிரச்சாரத்துக்காக தேர்வு செய்த சில குற்றங்களுக்கு மட்டுமே போராடுவோம், கொந்தளிப்போ, முழங்குவோம் என்பது ஒரு பாசாங்கு இல்லையா? ஒரு பெண் மீது பலாத்காரம் நடக்கையில் கண்டும் காணாதது போல கடந்து செல்லும் ஒரு ஆணுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்கள்?
மேலும் வாசிக்க:
https://www.damemagazine.com/2014/02/05/can-women-be-rapists/
எனது “MeToo: சில விமர்சனங்கள்” நூலில் இருந்து.
நூலை இணையம் வழி வாங்க:
https://www.udumalai.com/meetoo-vimarsanangal.htm
