தாஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் இரட்டைக் கொலைகளைச் செய்த ரஸ்கோல்நிக்கோவின் நெருக்கடிக்கான தீர்வு – திறக்காத பூட்டின் சாவி – சோனியா என்னும் இளம் பாலியல் தொழிலாளியிடம்தான் உள்ளது. அவள் உடல் குற்றத்தில் ஈடுபட்டாலும் அவள் மனம் அதில் சற்றும் படாமல் தூய்மையாய் இருக்கிறது. வளர்ந்த உடலில் மாசற்ற குழந்தை அவள். எந்த தீங்கையும் மிதமிஞ்சிய கருணையால் அன்பால், நம்பிக்கையால் எதிர்கொள்கிறாள். முழுக்க முழுக்க முரண்களின் வலி நிரம்பிய உலகில் அவள் இம்முரண்களைப் பரீசீலனை இன்றி ஏற்று அவற்றின் சிக்கலைக் கடக்கிறாள்.
அவளது அப்பா தன் குடும்பத்தின் மீது மிகுதியான அன்பு கொண்டவர். ஆனால், இந்த அன்புக்கு இணையாய் அவர் அன்பற்றவராகவும் இருக்கிறார். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தான் உழைக்க வேண்டும்; பொறுப்பாய் இருக்க வேண்டும் என அறிந்தாலும் அவரால் அப்படி இருக்க முடிவதில்லை. சம்பாதித்த பணத்தைக் குடியில் இழக்கிறார். இப்படிப் பொறுப்பற்று இருக்கிறோமே எனும் கவலையில் அவர் மேலும் குடிக்கிறார்; மீதமுள்ள பணத்தை மேலும் தொலைக்கிறார்.
அவரது மகள் சோனியா குடும்ப வறுமையை சமாளிப்பதற்காய் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். ஆனால், தன் குடும்ப அவலத்துக்குக் காரணம் என்ன எனச் சிந்தித்து அவள் கண்ணீர் விடுவதில்லை; குடியைத் தனிப்பட்ட ஒழுக்கக் கேடாய்க் காண்பதோ, பாலியல் தொழிலை இந்த ஒழுக்கக் கேட்டினால் தன் மீது திணிக்கப்பட்ட ஒரு சமூகக் கேடாய்க் காண்பதோ இல்லை. தன் மீது பாசம் மிக்க அப்பா எப்படித் தனது வாழ்க்கை சீரழிவுக்குக் காரணமாகலாம் என அவள் வினவுவதில்லை; தன்னைப் பாதுகாக்க வேண்டிய சமூகம் எந்த அக்கறையுமின்றித் தன்னை ஒரு குழந்தைத் தொழிலாளியாக மாற்றிச் சுரண்டுவது குறித்து அவள் கொதிப்பதில்லை. “வாழ்க்கையே இப்படித்தான்” எனத் தத்துவம் உதிர்த்து தனக்குள்ளே முடங்குவதும் இல்லை. எதிர்த்துக் கலங்குவதோ அதைக் கண்டு பயந்து பின்னோடுவதோ அவள் இயல்பு இல்லை.
மாறாக இந்த முரண் இயல்பே மனிதனின் ஆதார பிரச்சனை என உணர்ந்து இந்த அவலத்துக்காய் அவள் வருந்துகிறாள்; முரண்பட்டுத் தவிக்கும் மனிதனுக்காய் அவள் கண்ணீர் விடுகிறாள். இதன் வழி அவள் முரணுக்கு வெளியே தன்னை வைக்கிறாள். முரணுக்குள் இருந்தாலும் அவள் அதனால் பாதிக்கப்படாதவள் ஆகிறாள். அவளது மிகையான அன்பு, மிகையான பாசம், மிகையான அபத்தமான கருணை, இந்த அவலமான வாழ்வின் மீது அவள் வைக்கும் அபாயகரமான, அதர்க்கமான நம்பிக்கை அவளைக் காப்பாற்றுகிறது. முரண் எனும் பாரத்தை உணர்ச்சிகளின் தோள்களில் ஏந்தி அவள் கல்வாரி மலையில் சுலபமாய் ஏறுகிறாள். தீமையின் கறைகளைத் தன் கண்ணீரால் கழுவுகிறாள். அவளை உச்சபட்சமான ஒரு பாத்திரமாய், எந்தத் தீமையும் தீண்டாத பரிசுத்த உருவாக தாஸ்தாயேவ்ஸ்கி (ரஸ்கோல்நிக்கோவ் வழி) காண்கிறார்.
முரணுக்குள் மாட்டிக்கொண்டாலும் பிரச்சினை இல்லை. அதற்குப் பொறுப்பாய் தன்னை உணர்ந்து தவிக்காமல் இருந்தால் போதும்; இந்தப் பொறுப்புணர்வே, அது தரும் அகங்காரமே மனிதனின் அடிப்படைப் பிரச்சினை என்கிறார் தாஸ்தாயேவ்ஸ்கி.
ரஸ்கோல்நிக்கோவ் சோனியாவை எதிர்கொள்ளும் தருணத்தில் தனது பிரச்சினையின் ஆதாரப் புள்ளியையும் அறிகிறான். அவன் அவளிடம் தஞ்சம் அடைகிறான்; மன்னிப்பு கோருகிறான். அவள் அவனைக் காவல் துறையிடம் சரணடையச் சொல்கிறாள். சட்டத்தின் பொருட்டல்ல, அவன் மனநிம்மதி பெறுவதற்கு. தண்டனையை ஏற்பதே மீட்சிக்கான முதல் படி என அவள் உள்ளூர உணர்ந்திருக்கிறாள்.
ரஸ்கோல்நிக்கோவ் தன்னை அறியும் இடம் இந்நாவலில் முக்கியமானது. அவன் தன்னைப் பலவித முரண்களின் (சரி செய்ய முடியாத) முடிச்சு என உணர்கிறான். ஒரு முடிச்சை நாம் அவிழ்க்க முதலில் அதை மேலும் முடிச்சாக்காமல் இருக்க வேண்டும். இளக விட்டு ஒவ்வொரு முடிச்சாகத் தானே அவிழ அனுமதிக்க வேண்டும். நாவலின் முடிவில் ரஸ்கோல்நிக்கோவ் இதையே செய்கிறான். தன்னை அறியும் நொடியில் அவன் தானற்றுப் (முரண்களற்று) போகிறான். அவனது ஜுரம் சரியாகிறது. ஜன்னி தீர்ந்து அவன் இயல்பாகிறான்.