ஜார்ஜ்
ஆர்வல் சொன்னது போல விளையாட்டு என்பது ஒரு தேசியவாத பெருமித குறியீடு. பெருமாள்
முருகனின் நாவல்கள் இன்று உலகம் முழுக்க படிக்கப்படுகின்றன. ஆனால் யாரும்
அவரது எழுத்தை தேச பிரதிநுத்துவமாய் பார்க்க மாட்டார்கள். ஆனால்
விளையாட்டு வீரன் தனது விருப்பத்துக்காக, பெருமைக்காக ஆடி
சாதித்தால் அது தேசத்தின் சாதனையாய் பார்க்கப்படும். ஏன் என்பதை ஆர்வல்
விளக்குகிறார்.
முந்தைய காலத்தில் ஒரு தேசத்தை பிரநித்துவபடுத்தியது அதன் ராணுவம்.
ஆனால் ஜனநாயக யுகத்தில், இரண்டு உலகப்போர்களுக்குப் பிறகு,
நிலைமையே வேறு. ஓர் அளவுக்கு மேலாக நீங்கள் ராணுவத்தை முன்னிறுத்த
முடியாது. ஆக இரண்டு தேசங்கள் குறியீட்டு ரீதியாய் மோதி தமது முன்னிலையை
சித்தரிக்க விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பெரிய ஆட்ட அரங்குகள்
நிர்மாணிக்கப்பட்டு அங்கு மக்கள் குழுமி தங்கள் தேசத்துக்காக கூவி கூச்சலிட்டு
ஆதரவு தெரிவிக்க வசதிகள் பண்ணப்படுகின்றன. இப்படித் தான் ஜனநாயக நாடுகளில் தேசியம்
கட்ட்டமைக்கப்படுகிறது. ராணுவத்துக்கு அடுத்தபடியாய் விளையாட்டு வீரர்கள் அரசின்
ஏஜெண்டுகளாய் காணப்படுகிறார்கள். ஆகையால் சர்வதேச அரங்கில் ஆடப்படும் ஒரு
விளையாட்டில் பங்கேற்கும் ஒருவர் புறக்கணிக்கப்படுகிறார் எனும் வாதமே அபத்தமானது.
அவர்கள் சற்று குறைவாக பாதுகாக்கப்படலாம், ஆனால் அரசு
ஒருபோதும் தன் ஏஜெண்டுகளை முழுக்க கைவிடாது. புதுமைப்பித்தனை அரசாங்கம் சாக
விட்டது போல பி.டி உஷாவையோ கர்ணம் மல்லேஸ்வரியையோ சாக விடாது. அரசு மட்டுமல்ல
நாமும் கூட நமது தேசியவாத உணர்வின் வடிகாலாகத் தான் விளையாட்டு வீரர்களைக்
காண்கிறோம். இந்தியா கோமதியை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லும் போதே ஒருவித எதிர்
உணர்வின் வழி நாம் முன்னெடுப்பது நமக்கான ஒருவித தேசியவாதத்தையே.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், அசோகமித்திரன் அனுபவித்த பசிக்கொடுமைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
அது என்றாவது ஊடகத்தில் இந்தளவுக்கு சர்ச்சிக்கப்பட்டதுண்டா? அவரைப் போன்ற கலைஞர்கள் இதே தேசத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்காகத் தானே
தம்மை தாரை வார்த்திருக்கிறார்கள்? ஆனால் ராணுவத்தின் பதிலியாக விளையாட்டை பார்ப்பது போல நம்மால் கலையை பார்க்க முடியாது.
ஏனென்றால் கலை என்றுமே அதிகாரத்துக்கு, தேசியவாத
இறுமாப்புக்கு எதிரானது. கலை கலகம் செய்யும். விளையாட்டு வீரர் யாருக்கு
எதிராகவும் கலகம் பண்ண மாட்டார். விராத் கோலியோ சச்சினோ பி.வி சிந்துவோ ஒருநாளும்
மோடியையோ இந்துத்துவாவையோ விமர்சிக்க மாட்டார்கள். கோமதியும் பண்ண மாட்டார்.
கடைசியில்
கோமதிக்கு செருப்பு வாங்கித் தரவில்லையே என்ற அத்தனை ஒப்பாரிகளுக்கும் பொருள்
இதுவே – “சச்சின், கோலி, மல்லேஸ்வரி,
சிந்து, சானியா, பி.டி
உஷா, மேரி கோம் என ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தேசிய
பிரதிநிதி உள்ளது போல தமிழகத்துக்கு இதுவரை இல்லை, இப்போது ஒருவர் வந்து விட்டார், அவரை விட்டு விட
மாட்டோம்”. மத்தியின் வடக்கை ஒட்டிய
அரசியலுக்கு எதிரான ஒரு தமிழ் தேசியவாதமாய் இக்கதையாடல் ஆரம்பத்தில்
தோன்றினாலும் அடிப்படையில் “எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்” எனும்
இறைஞ்சலாகவே இது படுகிறது.