Skip to main content

கோமதி மாரிமுத்து சர்ச்சை: இரண்டு தேசியவாதங்களின் மோதல் (1)

Image result for gomathi marimuthu gold medalImage result for தெற்கு தேய்கிறது + அண்ணாதுரை
ஆசிய தடகளப் போட்டியில் முதல் தங்கத்தை இந்தியாவுக்காக வென்று கொடுத்த கோமதி மாரிமுத்துவிடம் New 18 அலைவரிசையில் இருந்து பேட்டி கண்டார்கள். பேட்டியாளர் வாழ்த்தி விட்டு ஒரே கேள்வியை பல வடிவங்களில் மீள மீள கேட்டார். அதன் சாராம்சம்: “சாதனை படைத்துள்ள தங்களை இந்திய தேசம் புறக்கணிப்பதாய், மரியாதை செய்ய தவறியதாய் நினைக்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ளதே அதன் காரணமா?” கோமதி வக்கணையாக பேசுபவர் அல்ல; ஆக அவர் தனக்குத் தோன்றியதை எளிமையாக உண்மையாக சொல்கிறார். “இன்னும் கூடுதலாய் ஆதரவும் உள்கட்டமைப்பு வசதிகளும் என்னைப் போன்ற பின் தங்கிய ஊர்களில் இருந்து வருகிறவர்களுக்கு அளித்தால், அமைத்துத் தந்தால் நன்றாக இருக்கும்”. 

ஆனால் பேட்டியாளருக்கு தான் எதிர்பார்த்த பதில் வரவில்லையே என கவலை. கேட்டதையே மீசை தாடி விக்கெல்லாம் வைத்து புதுப்புது விதங்களில் கேட்கிறார். கோமதி கண்டுகொள்ளாமல் சுருக்கமாய் தனக்கு பெரிய பிரச்சனைகள் ஏதும் இல்லை என்கிறார். ஆனாலும் கேட்ட பாவத்துக்கு தான் பிய்ந்த பழைய செருப்புடன் ஓடியதாயும் அதை தனது சகவீராங்கனைகள் அனைவரும் அறிவர் என்றும் சொல்கிறார். ஆனால் பாருங்கள் ஊடகங்கள் இதை உடனே பற்றிக் கொள்கின்றன. கோமதியின் தொய்வுற்ற வறிய தோற்றமும் “தெற்கு தேய்கிறது, வடக்கு வளர்கிறது” எனும் கதையாடலுக்கு பொருந்திப் போகிறது. நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் என பல எரியும் பிரச்சனைகளில் மத்திய அரசு காட்டிய சர்வாதிகார மனப்பான்மை ஏற்கனவே மக்களை கொந்தளிக்க வைத்துள்ள நிலையில், கோமதி தங்கம் வென்றதுமே அவரை பதாகையாக ஏந்தி மீண்டும் “தெற்கு தேய்கிறது” என கோஷமிட தொடங்குகிறோம். ஆனால் இதன் பின்னால் மற்றொரு அரசியலும் உள்ளது. அதை இறுதியில் சொல்கிறேன்.
கோமதியிடம் படோபமோ இந்த உடனடி வெளிச்சத்தை பயன்படுத்தி பரபரப்புக்கு உள்ளாகும் (சமூகவலைதள மேதைகள் பலரிடம் காணப்படும்) அவசரமோ இல்லை. மேலும் நினைப்பதை எல்லாம் துல்லியமாய் சொல்லும் பேச்சுத்திறனும் அவருக்கு இல்லை எனத் தோன்றுகிறது - அதாவது மீடியாவில் வளைத்து வளைத்து கம்பு சுற்ற அவருக்குத் தெரியாது. அவர் கம்பை லைட்டாக திருப்பினாலே யார் கண்ணிலாவது பட்டு விடுகிறது. ”பிய்ந்த செருப்பு கதையும்” இப்படி பலரையும் காயப்படுத்தி கொந்தளிக்க செய்தது.
சில நாட்கள் சமூகவலைதள நண்பர்கள் பலர் இதைச் சொல்லியே குமுறினர். ஆனால் இப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள கோமதி தான் செருப்பு வாங்க பணமில்லாமல் பிய்ந்த பழைய செருப்புடன் ஓடவில்லை, அச்செருப்பு தனக்கு அதிர்ஷ்டம் தருவது என நம்பியதாலே அவ்வாறு செய்ததாய் கூறுகிறார்.
இங்கு ரு விசயத்தை கவனிக்க வேண்டும் நாம். பேஸ்புக்கில் சிலர் எழுதியது போல கோமதி ஊட்டச்சத்து மிக்க உணவின்றி வெறும் வயிற்றில் ஓடி ஜெயிக்கவெல்லாம் இல்லை. அந்தளவுக்கு கடும் வறுமையில் அவர் இப்போது இருப்பதாய் தெரியவில்லை. யாராவது கறுப்பாய் ஒல்லியாய் கன்னம் ஒட்டித் தென்பட்டால் அவர் வறுமையில் உணவின்றி அல்லாடுகிறார் என நாம் கற்பனை பண்ண வேண்டியதில்லை. ஒரு ஓட்ட வீராங்கனைக்கான சரியான உடலமைப்புடன் அவர் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. மேலும் அவர் அந்த பேட்டியில் ஆசிய போட்டிகளில் பங்கேற்க சொந்த செலவில் விமானத்தில் பயணித்து வந்ததாய் சொல்லுகிறார். விமானக் கட்டணம் செலுத்த முடிந்தவருக்கு சத்தான உணவு வாங்கி சாப்பிட வசதி இருக்காதா? மேலும் அவர் ஊர்க்காட்டில் தற்போது வாழவில்லை. பெங்களூரில் வாழ்கிறார். மத்திய அரசு வேலையில் (வருமான வரித்துறை) இருக்கிறார். விளையாட்டு ஒதுக்கீட்டில் அவ்வேலையை பெற்றார் என்பதால் அவர் 9-4 மற்றவர்களைப் போல வேலை செய்ய வேண்டி இருக்காது. வாரம் ஒருநாள் போனால் போதும். ஆனால் நம்மில் பலரோ அவர் ஏதோ இன்னமும் வயக்காட்டில் வேலை செய்யும் அபலை என கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறோம்.
ஆம், கிரிக்கெட் அளவுக்கு பிற விளையாட்டுகளுக்கு போதுமான ஆதரவு தரப்படுவதில்லை தான். ஆனால் மற்ற கலைஞர்கள், படைப்பாளிகளுடன் ஒப்பிடுகையில் விளையாட்டு வீரர்கள் நன்றாகவே கவனித்துக் கொள்ளவே படுகிறார்கள். விளையாட்டுத் துறையில் நீங்கள் இருந்தால் பள்ளியில் குறைவாய் மதிப்பெண் பெற்றிருந்தாலே கூட கல்லூரியில் இடம் கிடைத்து விடும், கல்லூரியில் தினமும் வகுப்புக்கு போக வேண்டியதில்லை, அது முடித்து ஓரளவு சாதனை படைத்தாலே அரசு வேலை கிடைத்து விடும், அதிலும் நீங்கள் தொடர்ந்து ஆடி வந்தால் தினமும் அலுவலகம் போகும் அவசியம் இராது. இந்த சலுகைகளுக்காவே விளையாட்டுத் துறையில் ஈடுபடும் நண்பர்களை நான் மாணாக்க பருவத்தில் இருந்து இன்று ஆசிரியனாய் என் பணிக்காலம் வரை கண்டு வருகிறேன். கோமதி அப்படியானவர் அல்ல என்றாலும் விளையாட்டு வீரர்கள் பிச்சைக்காரர்களாய் நடத்தப்படுகிறார்கள் என்பது ஒரு மிகையான கூற்றே.
மிகவும் பின் தங்கிய ஊர்களில் விளையாட்டு வசதிகள் இல்லை தான். ஒரு வீரராய் நீங்கள் சாதிக்கும் வரையில் அரசு உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாது தான். ஆனால் ஒரு பாடகனுக்கோ எழுத்தாளனுக்கோ ஒரு ஓவியனுக்கோ சிற்பிக்கோ இந்தளவுக்கேனும் கட்டமைப்பு வசதிகளோ ஊக்கத்தொகைகளோ அரசு தருவதுண்டா? விளையாட்டுக்கு தேவைப்படும் அதே அளவுக்கு தயாரிப்பும் உழைப்பும் தியாகமும் போராட்டமும் அனைத்து கலைத்துறைகளில் ஈடுபடுகிறவர்களுக்கும் தேவை தான். நான் எழுத மட்டுமே செய்வேன், வேலை செய்ய மாட்டேன் என்று ஒரு எழுத்தாளன் கோரினால் அவன் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான். ஆனால் ஒரு விளையாட்டு வீரருக்கு அந்நிலைமை ஏற்படாது. ஏன் என சொல்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...