“எனக்கு தாஸ்தாயேவ்ஸ்கியைப் படித்ததுமே ஜுரம் அடிக்கத் தொடங்குகிறது” என்றார் எனது நண்பர் ஒருவர். இதை அவர் சொல்லி சில மாதங்கள் இருக்கும். நேற்று தாஸ்தாயேவ்ஸ்கியின் Insulted and Humiliated நாவலையும் விபூதிபூஷன் பந்தோபத்யாயின் அபராஜிதோ நாவலையும் மாற்றி மாற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். Insulted and Humiliated எனக்கு தாஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை நினைவூட்டியது. அப்போதுதான் நண்பர் என்ன சொல்ல வந்தார் எனப் புரிந்தது.
ஜுரம் விட்ட மறுநாள் ஒரு புத்துணர்வு - சோர்வுடன் கலந்த புத்துணர்வு, ஒரு துடிப்பு - கவனம் கவனம் என மனம் எச்சரித்துக்கொண்டே இருக்க, ததும்பும் உடலின் முனைப்பு தோன்றும். சிறகுகள் முளைத்தது போன்ற உணர்வும் அதனோடே கைகால் முட்டிகளில் மெல்லிய வலியும் தோன்றும். ஜுரம் விட்டாலும் ஜுரம் விடாத இந்தப் புத்துணர்ச்சியே விபூதிபூஷனின் நாவலின் தொனி. அபாரமான தன்னம்பிக்கையும் மறுநொடியே இந்த வாழ்க்கை சிதைந்துவிடலாம் எனும் எச்சரிக்கை உணர்வும்.
மரணம், இழப்பு, ஏமாற்றம் என ஒன்றன் பின் மற்றொன்றாய் வருகையில் சோர்ந்து விழும் அப்பு தன் முன்னால் ஒரு சின்ன நம்பிக்கை கீற்று தோன்றினாலே அதன் ஒளியில் நிமிர்ந்து நிற்கக்கூடியவன். கணவனை இழந்து வாழ்விடத்திலிருந்து துரத்தப்பட்ட அவனது தாயார் சரபோஜெயா இதே ஜுரத்தனமான துணிச்சலை அமைதியாய் வெளிக்காட்டுகிறார். அபராஜிதோ முழுக்க இந்த முரண் மனநிலையே பளிச்சிடுகிறது.
தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் ஜுர நிலை எப்போதும் உச்சத்திலேயே இருக்கிறது. நாவலாசிரியனே மையப் பாத்திரம் பற்றிச் சொல்லும்போது அடிக்கடி குறிப்பிடுவது அவனது ஜுரத்தைப் பற்றியாகவே இருக்கும். குற்றமும் தண்டனை நாவலின் ரஸ்கோல்நிக்கோவ், The Doubleஇன் கொல்யாட்கின் போன்றோர் உதாரணம். உடல்நிலை மிக மோசமாகி கிட்டத்தட்ட சித்தம் கலங்கிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள். தாஸ்தாயேவ்ஸ்கியின் சிறப்பு என்னவெனில் அவரது கதைசொல்லல் பாணியிலேயே இந்த ஜுர வேகம் வந்துவிடும். கதைசொல்லி தன்னைப் பிரதான பாத்திரத்திலிருந்து வேறுபடுத்திக்கொண்டு நோயாளியைக் கவனிக்கும் மருத்துவர் போல ஆகி சித்தரிக்க மாட்டார். ஒருகட்டத்தில் நோயாளியே டாக்டர் எனும் உணர்வு நமக்கு ஏற்பட்டுவிடும். இதனால் வாசகனுக்கும் ஜுர உணர்வு ஏற்பட்டுவிடுகிறது (கரமஸோவ் சகோதரர்கள் நாவல் சற்றே விதிவிலக்கு).
தாஸ்தாயேவ்ஸ்கியின் மற்றொரு சிறப்பு என்னவெனில் அவரது மைய பாத்திரம் ரஸ்கோல்நிக்கோவ் கடும் துயரத்தில் கொந்தளிப்பில் மாட்டிக்கொண்டிருந்தாலும் அது கசப்பாக, வாழ்க்கை மீதான வெறுப்பாக உருப்பெறாது. அவன் கசப்பில் விழுந்துவிடாமல் அதனுடன் தொடர்ந்து போராடுகிறவனாக இருப்பான். அவனது கொந்தளிப்பு ஏன் ஏற்படுகிறது? அவன் ஏன் ஒட்டுமொத்தமாய் வாழ்க்கை மீது கசப்பு கொள்ளாமல் இருக்கிறான்? இதற்கான விடை அவன் எதிர்கொள்ளும் உள்முரணில் இருக்கிறது.
மேலும் படிக்க…
https://www.minnambalam.com/k/2019/04/26/15
