“தளபதியின்” திரைக்கதை கச்சிதமானது. இதைப் பற்றி முதலில் பார்ப்போம்.
சிட்பீல்ட் தனது திரைக்கதை குறித்த நூலில் ஒரு முக்கியமான விஷயத்தை வலியுறுத்துகிறார்: ஓர் இயக்குநர் தனது படத்தின் முதல் பத்து நிமிடங்களுக்குள் அந்தப் படத்தின் ஆதாரமான பிரச்சினை, தொனி, மனப்பாங்கை பார்வையாளனுக்குக் கடத்திவிட வேண்டும். அப்போதே பார்வையாளர்கள் நிமிர்ந்து உட்கார்வார்கள்; கவனம் சிதறாமல் ரசிப்பார்கள். மணிரத்னம் ‘தளபதி’யின் முதல் பத்து நிமிடங்களுக்குள் அதன் மையக்கருவை உணர்த்திவிடுகிறார். அறியா வயதில் கர்ப்பிணியான ஒரு சிறுமி தன் பிள்ளையை வளர்க்கும் துணிவின்றி, சமூக விலக்கத்துக்குப் பயந்து ஒரு கூட்ஸ் தொடர்வண்டியில் விட்டுவிடுகிறாள்; ஆனால் அடுத்த நிமிடமே அதற்காக வருந்தி குழந்தையை மீட்க முயல்கிறாள்; குழந்தையைத் தொடர்வண்டி கொண்டு சென்றுவிடுகிறது. சேரியில் வசிக்கும் ஒரு பாட்டி அக்குழந்தையைத் தத்தெடுக்கிறாள். தன்னை ஏன் தன் அம்மா கைவிட்டாள் எனும் கேள்வி அப்பையனை அலைக்கழிக்கிறது. அவன் தன் தத்து அம்மாவிடம் “என்னை ஏன் கூட்ஸ் வண்டியில் போட்டுட்டாங்க?” என்ற கேள்வியை, எல்லா வேதனைகளையும் உள்ளே அழுத்தியபடி, கேட்கிறான். அந்தப் பாட்டி அவனை அரவணைத்துக்கொள்கிறாள். இந்தப் பத்து நிமிடக் காட்சிகளில் வரும் ஒரே வசனம் இது. ஆனால், இந்தப் படத்தின் அடிப்படையான வினா நமக்குப் புரிந்துவிட்டது: இந்தப் பையன் தன் தாயை அடையப் போகிறானா? தான் கைவிடப்பட்டவன் எனும் உணர்வு அவனது உளவியலை எப்படி அமைக்கப் போகிறது?
அவனது – அதாவது படத்தின் - பிரச்சினை என்ன? பற்றுறுதி, நாணயம், நம்பிக்கை. அவனது தாய் உறவில் பற்றுறுதியற்று, நாணயமற்று நடந்துகொண்டுவிட்டாள். அவள் தனது மகன் மீதான பாசத்தில் உறுதியாக இல்லை. அந்தப் பையன் வளர்ந்து சூர்யா ஆன பின் தன் வாழ்நாள் முழுக்க உறவில் உறுதியை, நாணயத்தை, நேர்கோட்டுப் பாதையை நாடப் போகிறான். தன் தாயைப் போல யாருக்கும் துரோகம் செய்யாமல் உருக்குப் போல இருக்கப் போகிறான். இந்தத் தடுமாற்றமின்மையே சூர்யா. அவன் தேவராஜ் எனும் டானிடம் வேலைக்குச் சேர்கிறான். அவர் அவனது ஆத்ம நண்பர் ஆகிறார். அவருக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறான். இதற்குக் காரணம் தேவராஜ் அவனது உயிரை ஒரு சந்தர்ப்பத்தில் காப்பாற்றினார் என்பது. தனக்கு யார் உறுதியான பற்றுதலைக் கொடுத்தாலும் சூர்யா அவர்களிடம் உயிரையே வைப்பான். இந்த உறுதிப்பாடு அவனைக் கொள்கைப் பிடிப்பான மனிதன் ஆக்குகிறது. உதவியென்று வருகிறவர்களுக்காக யோசிக்காமல் எதையும் தியாகம் செய்வதே அவனது நிலைப்பாடு. அவனது இந்தக் கொள்கைப் பிடிப்பையும் அறவுணர்வையும் கண்டு, அவன் ஒரு ரவுடியாக இருந்தாலும்கூட, சாதுவான ஒரு பிராமணப் பெண் - சுப்புலஷ்மி - அவனை நேசிக்கிறாள். சூர்யாவின் விதி என்னவென்றால் அவன் மிகவும் நேசிக்கிறவர்கள் - எந்தச் சமரசமும் அற்று அன்பு காட்டுகிறவர்கள் - அவனை விட்டுச் சென்றுவிடுவார்கள் (அவன் தாயைப் போன்றே). சுப்புலஷ்மி, தேவராஜ் இருவரும் படத்தின் இருவேறு கட்டங்களில் அவனைப் பிரிகிறார்கள். ஆனால், வானில் இருந்து தேவாமிர்தமே வந்து இறங்கியது போல அவன் அம்மா அவனுக்கு மீண்டும் கிடைக்கிறாள். இப்படி முதல் பத்து நிமிடங்களில் அறிமுகமான பிரச்சினைக்கு க்ளைமாக்ஸில் தீர்வு கிடைக்கிறது: அவன் ஒரு மதலையாய் தாயை விட்டுப் பிரிவது, தனியாக ஆற்றங்கரையில் சூரியோதயத்தைப் பார்த்து ஒரு சிறுவனாக அவன் நிற்பது முதல் பத்து நிமிடங்கள் என்றால் கடைசிக் காட்சியில் அவன் தன் தாயை அரவணைத்துக்கொள்கிறான். தான் தேடி அலைந்த ஒன்று - உறவில் உறுதிப்பாடு, பற்றுறுதி - தாயின் தடுமாற்றமற்ற பாசமாய் அவனுக்குக் கிடைக்கிறது. தனது இரண்டாவது மகனுடனும் கணவருடனும் வேறு ஊருக்குச் செல்லும் வாய்ப்பிருந்தும் அவள் தன் முதல் மகனுடன் இருக்க முடிவெடுக்கிறாள். சூர்யா இதைக் கண்டு மிகவும் நெகிழ்கிறான். வாழ்வில் எப்போதுமே அவனை அனைவரும் விட்டுச் செல்லவே செய்திருக்கிறார்கள், முதல் முறையாய் அவன் தாய் அவனுக்காகப் பிறரை கைவிட்டு வருகிறாள். உறவுகள் மீது அவனுக்குப் பிடிப்பு ஏற்படும் தருணம் இது; அவனது போதாமை இல்லாமல் ஆகும் இடம் இது.
ஆனால், இது சூர்யா தன் தாயைத் தேடி அடையும் ஓர் எளிய அம்மா - மகன் கதை அல்ல. முதலில் வெளிப்படும் பிரச்சினை படம் போகப் போகச் சிக்கலாகிறது. மனித உறவுகளில் உள்ள தடுமாற்றம், நாணயமின்மை, அழுத்தமான பந்தங்களில் (உள்முரணாக) மையமாக உள்ள நம்பகத்தன்மையற்ற இயல்பு சூர்யாவை உலகையே இருகூறாய், இருமையாய் பார்க்க செய்கிறது. நல்லவர் - கெட்டவர், நம்பத்தகுந்தவர் - நம்பத்தகாதவர், தன்னை நேசிப்பவர் - தன்னை வெறுப்பவர் என அவன் மனிதர்களைப் பிரித்துக் கொள்கிறான். ஆனால், தான் கடுமையாக வெறுக்கும் ஆட்சியாளர் அர்ஜுன் தன் தம்பி என அறிய வரும்போது, தான் கொன்ற ஒரு கெட்டவனுக்கு ஒரு அருமையான குடும்பம் உண்டு, ஒரு அழகான பாப்பா உண்டு என அறிந்து வேதனைப்பட்டு அக்குடும்பத்துக்கு அவன் பாதுகாப்பு அளிக்க முடிவெடுக்கும்போது, தனக்குத் துரோகம் செய்து இன்னொருவனைத் திருமணம் செய்த சுப்புலஷ்மி தன் தம்பியின் மனைவி எனத் தெரிய வரும் போது அவனுக்கு முக்கியமான ஒரு புரிதல் கிடைக்கிறது - நன்மையும் தீமையும் இரண்டிரண்டாய் பிரிக்க முடியாதபடி வாழ்வில் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. ஆக, படத்தின் முதல் பாதி சூர்யாவின் அடிப்படையான பிரச்சினை எப்படி அவனைச் சிக்கலான மனிதனாக்குகிறது எனச் சித்தரிக்கிறதென்றால் இரண்டாம் பாதி அச்சிக்கலிலிருந்து அவனுக்கு ஒரு தெளிவை அளிக்கிறது.
க்ளைமாக்ஸுக்கு முன்பான சில காட்சிகளில் பார்வையாளன் முன்னுள்ள கேள்விகள் இரண்டே: சூர்யா தன் நண்பன் தேவராஜை விட்டுக் கொடுத்து தன் அம்மா மற்றும் தம்பியுடன் சேர்வானா? இல்லை, அவர்கள் மூவரும் தனக்கு ஒரே சமயம் வேண்டும் என அவன் கோரினால் அது சாத்தியமாகுமா? அவன் இறுதியில் தனித்து விடப்படுவானா அல்லது அவனுக்குத் தன் தாயின் பாசம் கிடைக்குமா?

ஒரு பிரச்சினை, அது ஏற்படுத்தும் சிக்கல்கள், அச்சிக்கல்கள் தீவிரமாகி இறுதியில் அவிழ்க்கப்படுதல், அப்பிரச்சினையின் முடிவு எனத் திரைக்கதையை நான்கு பகுதிகளாய்ப் பிரித்துத் தெளிவாய் அமைத்திருக்கிறார் மணிரத்னம். ஆகையால் படம் முழுக்க விறுவிறுப்பு, வேகம் இருக்கிறது, குழப்பம் இல்லை, கவனச்சிதறல் இல்லை, “என்னய்யா நடக்குது?” எனப் பார்வையாளர் நெளிவதில்லை.
(மேலும் படிக்க...https://minnambalam.com/k/2019/02/11/6)