“தவமாய் தவமிருந்து” பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்றரை
மணி நேரப் படம். சோகத்தையும் செண்டிமெண்டையும் பிழிகிறார்கள். சண்டைக்காட்சி, நகைச்சுவை
போன்ற திணிப்புகளோ வில்லனோ நாயகனுக்கான நேரடி சவால்களோ இல்லை. ஆனால் நேரம் போவதே தெரியாமல்
பார்க்க வைக்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் சாமர்த்தியமான திரைக்கதை - பத்து நிமிடத்துக்கு
ஒரு முறை ஒரு சிக்கல் வருகிறது – அதற்கான தீர்வு, அத்தீர்வு பயனளிக்கிறதா, இல்லையென்றால்
வேறு என்ன தீர்வுகள் உண்டு என கதை நகர்கிறது.
துவக்க காட்சிகள்
ஒன்றில் ராஜ்கிரண் தன் பிள்ளைகளுக்கு தீபாவளி புதுத்துணி, பட்டாசு வாங்க வேண்டும்.
பணமில்லை. அப்போது ஒரு அரசியல் தலைவரின் வருகையை ஒட்டி போஸ்டர் ஆர்டர் வருகிறது. ராஜ்கிரண்
அதை எடுத்து மும்முரமாய் செய்து முடிக்கிறார். இரவில் அதை ஒப்படைத்து பணம் வாங்க நினைக்கும்
போது தலைவர் வரவில்லை, அதனால் போஸ்டர்கள் வேண்டாம் என மறுக்கிறார்கள். “இல்லை இந்த
பணத்தை நம்பித் தான் இருக்கிறேன். தயவு செஞ்சு வாங்கிக்கிங்க” என கெஞ்சுகிறார். மறுதரப்பு
மறுத்து போனை துண்டிக்கிறது. ராஜ்கிரண் தளர்ந்து போய் நாற்காலியில் சாய்கிறார். அப்போது
நமக்கும் சேர்ந்து மனம் பதறுகிறது. எப்படியாவது அவருக்கு பணம் கிடைத்திடாதா என ஏங்குகிறோம்.
அடுத்து, ராஜ்கிரண் தன் பிரஸ் வேலையாளிடம் தன்னிடம் உள்ள சொற்ப பணத்தைக் கொடுத்து பண்டிகை
கொண்டாட சொல்கிறார். ஆனால் அவரோ முதலாளியின் நெருக்கடியை உணர்ந்து பணத்தை திரும்பத்
தருகிறார். ஆனால் இப்போது பிரச்சனை தீரவில்லை. இன்னும் பணம் வேண்டுமே! தெரிந்தவரிடம்
போய் கடன் கேட்கிறார். “தீபாவளின்னா எல்லாருக்கும் செலவிருக்கும்ணே! இப்போ போய் கேட்கிறீங்களே”
என்று மறுக்கிறார்கள். அப்போது ஒரு போன் அழைப்பு வருகிறது. போஸ்டர் ஒட்ட ஆள் வேண்டும்.
கூலி ஆயிரம் ரூபாய். அவர் சென்று வேலையாளை அழைத்து வந்து அந்த ஆர்டரை எடுத்துக் கொண்டு
இரவெல்லாம் உழைத்து பணத்தைப் பெற்று புதுத் துணி எடுத்து, பட்டாசு வாங்கி வீட்டுக்குப்
போய் பகலெல்லாம் அலுப்பு தீர படுத்துறங்குகிறார்.
இந்த காட்சித் தொடர் (sequence) நெகிழ்வாகவும் வேகமாகவும்
போகிறது. ஒரு பிரச்சனை எழுந்து அதற்கு தீர்வு கிடைத்து விடும் போது பார்வையாளர்களும்
சுலபத்தில் பாத்திரத்துடன் ஒன்றி விடுகிறார்கள்.
மற்றொரு அருமையான காட்சி பத்மபிரியா பிரசவமாகி ஆஸ்பத்திரியில்
இருக்க, கட்டணம் செலுத்த பணமின்றி சேரன் அலைய, அவரது ராஜ்கிரண் வந்து பணம் செலுத்திப்
போவது. ராஜ்கிரணுக்கு தன் மகனுக்கு திருமணமானது, குழந்தை பிறந்துள்ளது அதுவரை தெரியாது.
ஆகையால் அவர் வந்து உதவும் சாத்தியம் உள்ளதாகவே நாம் எண்ண மாட்டோம். ஆனால் ராஜ்கிரண்
உதவுவதற்கு ஒரு வாய்ப்பை அமைத்து அழகான எதிர்பாரா திருப்பத்தை சேரன் தந்திருப்பார்.
இப்படி, காட்சிக்குக் காட்சி நம்மை வருந்திக் கலங்க வைத்து
உடனே நிம்மதியாக பெருமூச்சு விடவும் வைக்கிறார்கள். “குக்கூ” போன்ற படங்களில் வருவது
போல இதில் யாரும் தொடர்ந்து துன்பம் மட்டும் படுவதில்லை. அப்படி வந்தால் படம் இழுவையாகும்.
துன்பத்துக்கு அடுத்தபடியாய் அதில் இருந்து தற்காலிக விடுதலை. அதை அடுத்து இன்னொரு
பிரச்சனை. இதில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் எனும் கேள்வி…. இந்த பாணி காட்சி
அமைப்பில் பாக்யராஜ் தான் உஸ்தாத். பாக்யராஜின் ஒரு படத்தில் அவர் வாழ்க்கை வெறுத்துப்
போய் தற்கொலை பண்ணுவதற்காய் மலை மீது ஏறுவார். உண்மையிலேயே குதித்து விடுவாரோ என பார்வையாளர்கள்
கையை பிசைவார்கள். மலை உச்சியை அடைந்து விடுவார். அடுத்த அடியை எடுத்து வைத்தால் பள்ளத்துக்கு
போகாமல் நேராக ஒரு மேட்டுக்கு சென்று விடுவார். அந்த மலையின் அமைப்பு அப்படி. ஒரு துன்பியல்
காட்சி சட்டென நகைச்சுவையாகி விடும். அதுவும் பாக்யராஜின் உடல்மொழிக்கு இது அசத்தலாக
பொருந்தி விடும்.
காட்சி அமைப்பில் சேரனும் பாக்ய்ராஜுக்கு அடுத்தபடியாய் ஒரு
சின்ன உஸ்தாத் தான்.