என் வாழ்வின் கணிசமான பகுதியை நான் பிரியமானவர்களுக்காக செலவழித்திருக்கிறேன்.
ஆனால் அவர்களில் எத்தனை பேர் இப்போது என்னுடன் இருக்கிறார்கள்? உறவுகளின் அழகு அதன்
நிரந்தரமின்மை எனத் தோன்றுகிறது.
எத்தனை எத்தனையோ வேலைகள் செய்திருக்கிறேன். அந்த வேலைகளில்
இருந்தும் ஒன்றும் பெற்று விடவில்லை. சம்பாதித்த பணமும் தங்கவில்லை. இனிய, கசப்பான
நினைவுகள் மட்டுமே எஞ்சுகின்றன. கடந்த 11 ஆண்டுகளாய் நான் எழுதியவை மட்டுமே அவ்வளவு
விசுவாசமாய் என்னுடன் ஒரு நிழலைப் போல வருகின்றன.
இதுவே எல்லா படைப்பாளிகளுக்கும்
நேர்வது. எழுத்து நிரந்தரமானது. நிரந்தரமான ஒன்றுடன் பிணைக்கப்பட்டிருக்கிறோம் எனும்
உணர்வே தனிமையை ஏற்படுத்துகிறது. இந்த தனிமையின் அழுத்தம் நம்மை நிரந்தரமற்ற துர்பலமான
உறவுகள், அனுபவங்களை நோக்கி தள்ளுகின்றன. நிரந்தரத்தின் அழுத்தத்தில் இருந்து, தனிமையில்
இருந்து விடுபட மீண்டும் உறவுகள், வேலைகள் என ஒரு சுழற்சிக்குள் போய் விழுகிறோம். அவை
எதுவுமே இறுதியில் எஞ்சாது என அறிந்து கொண்டே தான் செய்கிறோம்.
கலை வாழ்வுடன் அணுக்கம் வரும் போதெல்லாம் ஒருவன் மிக மிக
சாதாரணமான கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், சூது, காமம், மது, பணம், அதிகாரம், புகழுக்காக
அதிகமாய் அலைகழிகிறான். இவை அவன் அழியக் கூடியவன் என அவனுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.
அதுவே அவனுக்கு வேண்டும். அது அவனுக்கு நிம்மதி கொடுக்கிறது.
கணிசமான கலைஞர்கள் தேவையற்ற சர்ச்சைகளில், சிக்கல்களில் மாட்டி
அழிகிறார்கள். மதுவில், நோய்மையில், அன்பில் அழிகிறார்கள். கலை உலகில் ஒரு இடம் பெறுவதை
விடவும் இந்த அன்றாட உலகில் தம் இடத்தை அழிப்பதே அவர்களுக்கு உவப்பாக உள்ளது.
ஒரு எழுத்தாளன் எதிர்பாராமல் மரிக்கும் போது அவன் தன் எழுத்து
உருவாக்கிய நித்தியத்துடன் இணைகிறான். அவன் அதற்கு மேல் எதையும் அஞ்சத் தேவையில்லை.
ஆனால் அப்போது அவனது வாசகர்கள் பரிதவிக்கிறார்கள். அவன் எழுத்துலகம் அழியாத இடத்தில்
இருப்பது அவர்களை பதற்றப்படுத்துகிறது. அவர்கள் அஞ்சலிக் கூட்டங்களுக்கு குவிகிறார்கள்.
அவனைப் பற்றின நினைவுகளை தொகுக்கிறார்கள். சக எழுத்தாளர்கள் அஞ்சலிக் குறிப்புகளாக
எழுதித் தள்ளுகிறார்கள். மீண்டும் அவனை நிரந்தரத்தில் இருந்து நிரந்தரமின்மை நோக்கி
இழுத்துப் போடுகிறார்கள். அவனை கையைப் பற்றி தம் அருகே ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில்
அமர்த்தி, மாலை சார்த்தி, மூக்கில் பஞ்சு வைத்து, அவன் தம்முடன் இருப்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.
நமது இந்த சின்ன வாழ்க்கை நிரந்தரத்தில் இருந்து நிரந்தரமின்மை
நோக்கிய தப்பியோட்டமே!