Skip to main content

பிக்பாஸுக்கு வெளியே உள்ள தனிமை


Image result for bigg boss tamil

பிக்பாஸிடம் வாக்குமூல அறையில் பேசிய ரித்விகா, இறுதி நாளுக்குப் பின், பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேறின பின் தன் (கழுத்தில் மாட்டின) மைக்கை மிகவும் மிஸ் பண்ணப் போவதாய் சொன்னார். “இந்த மைக் என்னோட குழந்தை; இதை பெட்ஷீட் போர்த்தி தூங்கவெல்லாம் வச்சிருக்கேன்” என்றார். திரும்பத் திரும்ப மைக்கையும் பிக்பாஸ் வீட்டையும் பற்றி மிகுந்த ஏக்கத்துடன் பேசிக் கொண்டு போனார். அதன் பிறகு ஐஸ்வர்யா, ஜனனி என ஒவ்வொருவர் உரையாடும் போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேனால் தாம் எவ்வளவு தனிமையாய் உணர்வோம் என விசனப்பட்டார்கள். ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மஹத், ஷாரிக், நித்யா போன்றோரும் திரும்ப வந்து சில மணிநேரம் பிக்பாஸ் வீட்டில் கழிக்கையில் (ஒன்று), வெளியே எந்தளவு தனிமையாய் இருந்து பிக்பாஸை மிஸ் பண்ணினோம் என சொல்கிறார்; (இரண்டு) “நாங்க பிக்பாஸ் வீட்டிலேயே இருக்கிறோம்; பிக்பாஸ் எங்களை வெளியேற்றாதீங்க” என கெஞ்சுகிறார்கள். எனக்கு இந்த பார்வையே ரொம்ப விசித்திரமாய் பட்டது.

வெளியுலகில் உங்களோட பேச பழக உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உற்ற உறவினர்கள் உண்டு. இங்கோ ஒன்றிரண்டு பேரைத் தவிர நீங்கள் இதயம் கனிந்து பேச ஆளில்லை. உங்களுக்கு கட்டளையிடும் பிக்பாஸின் குரல் யாரென அறிய மாட்டீர்கள். உங்கள் மைக் என்பது உங்கள் குரல்களை வெளியுலகுக்கு 24*7 கொண்டு போகும் ஒரு கருவி. உலகமே உங்களைப் பார்த்து மதிப்பிட இந்த உலகிலேயே மிக மிக தனிமையானவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் ஏன் இந்த பிக்பாஸ் வீட்டில் இவ்வளவு சௌகர்யமாய் தன்னம்பிக்கையாய் திருப்தியாய் உணர்கிறீர்கள்? ஏன் வெளியுலகுக்கு மீள இந்தளவு தயங்குகிறீர்கள், கலங்குகிறீர்கள்? அது பற்றி ஏன் பதற்றமுறுகிறீர்கள்?
ஒன்று, பிக்பாஸ் வீட்டினுள் ஐந்து பேர் மத்தியில் வாழ்ந்தாலும் உங்களை ஐந்து கோடிக்கு மேல் மக்கள் பார்க்கக் கூடும் எனும் அங்கீகாரம், அது தரும் மக்கள் திரளின் மையமாய் உணரும் திருப்தியே தனி.
 ஒருவிதத்தில் அது ஒரு போலியான சமூகமாக்கல் மகிழ்ச்சி – இந்த பார்வையாளர்கள் யார், அவர்கள் உண்மையிலேயே உங்களை பொருட்படுத்துகிறார்களா, உங்களின் பால் அக்கறை கொண்டுள்ளார்களா, அது உண்மையான நிஜமான உறவா என்றெல்லாம் கேட்டால் “இல்லை” என்றே பதில் வரும். “பிக்பாஸ்” முடிந்த பின் ஒரு நெடுந்தொடர் அந்த இடத்தை எடுத்துக் கொள்ளும். பிக்பாஸ் பார்வையாளர்கள் நிச்சயம் மக்கள் மனதில் சற்று காலம் இருப்பார்கள்; ஆனால் ஒரு வாரத்திற்குப் பின் மக்கள் ஐஷ்வர்யா, ஜனனி, ரித்விகா பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
அடுத்து, வெளிவாழ்வில் நாம் முயற்சி எடுக்காவிடில் யார் கண்ணிலும் பட மாட்டோம்; யார் கவனத்தையும் கவர மாட்டோம். நாம் ஒதுங்கி விட்டால் மக்கள் நம்மை மறந்தே விடுவார்கள். ஆனால் பிக்பாஸ் வீட்டிலோ நாம் என்ன செய்தாலும் இல்லாவிடிலும் நாம் மக்கள் கவனத்தில் இருந்து கொண்டே இருப்போம். இது பங்கேற்பாளர்களுக்கு தம்மைப் பற்றி ஒரு மிகையுணர்வை அளிக்கும். அவர்களின் அற்ப சச்சரவுகள், சொந்த கவலைகள், குத்துப்பாட்டுக்கு அவர்கள் ஆடும் அரைகுறை நடனங்கள், அவர்களின் உளறல்கள் என எல்லாவற்றுக்கும் அவ்வளவு மதிப்பு, முக்கியத்துவம், சமூக இடம் கிடைக்கிறது. ஐஷ்வர்யா தலையை சொறிந்தாலே அதை கோடிக்கணக்கானோர் உற்று கவனிக்கிறார்கள்; இதையே அவர் தன் வீட்டில் தனியாய் உட்கார்ந்து கண்ணாடி முன்னிருந்து செய்தால் என்ன மதிப்பு?
ஆக இந்த மிகைப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் இருந்து சட்டென ஒருநாள் துண்டிக்கப்பட்டு எளிய இயல்பு வாழ்க்கைக்கு இவர்கள் திரும்ப அனுப்பப்படும் போது உண்மையிலேயே அவர்களுக்கு அது பெரிய அதிர்ச்சியாய் இருக்கும்; தாம் ஒரே நாளில் மதிப்பற்று போனதாய் மனம் உடைந்து போவார்கள். இதனால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் திரும்ப தற்காலிகமாய் வரும் போது அவர்களின் முகம் ஏக்கத்தில் வாடிப் போய் தெரிகிறது.
ரித்விகா தன் மைக்கை குழந்தையாய் கருதுவதாய் சொன்னதை நான் நம்மில் பலரும் நம் செல்போனை ஒரு உற்ற நண்பனாய், காதலியாய், உடலின் உறுப்பார் கருதுவது போன்ற மனநிலை என்றே பார்க்கிறேன். செல்போன் நாம் ஒரே சமயம் தனியாகவும் பல்லாயிரம் பேருடனும் இருப்பதாய் ஒரு பாவனையான பாதுகாப்புணர்வை அளிக்கிறது – நீ தனியாய் இல்லை என அது நம்மிடம் மீள் மீள சொல்கிறது. பிக்பாஸ் வீட்டில் அந்த மைக்கே அவர்களின் செல்போன் – அதுவே அவர்களின் குரல், அவர்களின் அடையாளம், அவர்களின் மையம். அதில்லாமல் அந்த வீட்டுக்குள் அவர்கள் ஒன்றுமே இல்லாமல் ஆகி விடுவார்கள்.
இப்படி இல்லாத ஒரு உலகத்துக்காய் வாழ்வது, கண்காணாத இதயங்களின் அன்புக்காய் விழியை திறந்து வைத்து தேடுவது ஒரு அவலம். அது நம் காலத்தின் அவலம். இது நம் அனைவரின் அவலம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...