Skip to main content

யானை டாக்டர்


Image result for யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி

ஜெயமோகனின் தொண்ணூறுகள் வரையிலான கதைகள் அளவுக்கு அவரது கடந்த பத்தாண்டுகளின் கதைகள் என்னை ஈர்ப்பதில்லை. (காரணத்தை பின்னொரு தருணத்தில் எழுதுகிறேன்.) ஆனாலும் அவரது நடைக்காக, வியப்பூட்டும் சொற் தேர்வுக்காக, மிகுந்த மனஎழுச்சி தரும் அனுபவத்துக்காக கிடைக்கும் வாய்ப்பில் அவரது சமீபத்தைய எழுத்துக்களை எல்லாம் படித்திருக்கிறேன். ஜெயமோகனின் குருதித் துளி ஒன்றை எடுத்து பரிசோதித்தால் ரத்த அணுக்களுக்கு பதில் சொற்களும் கருத்துக்களும் கற்பனை அலைகளில் மேலெழுந்து தெரியும் என நினைத்துக் கொள்வேன். அப்படியான ஒருவரால் தான் இவ்வளவு காலமாய் தீவிரம் நீங்காமல், அதே உன்மத்த ஆவேசத்துடன் எழுத முடியும். இதற்கே அவர் முன் மண்டியிட்டு வணங்கலாம்.

சரி, இப்போது விசயத்துக்கு வருகிறேன். மேற்சொன்ன காரணத்துக்காக “யானை டாக்டர்” நெடுங்கதையை இப்போது தான் படித்தேன். அவ்வப்போது படிக்கும் ஆர்வம் தோன்றினாலும் நடக்கவில்லை. இதோ இப்போது கையிலெடுத்து ஒன்றரை மணிநேரத்தில் ஒரே மூச்சில் படித்து வைத்தேன். எப்போது ஜெயமோகனால் மட்டுமே தர முடிகிற பிரம்மாண்டத்தின் முன்பான கிளர்ச்சியை, கொந்தளிப்பை, வியப்பை தருகிற படைப்பு.  
கதைக்கருவை பொறுத்தமட்டில், இதில் புதிதாய் ஒன்றுமில்லை. “விஷ்ணுபுரம்” யானைக்காட்சிகள் பழகினவர்களுக்கு இக்கதை பெரிய ஆச்சரியம் தராது. யானையின் தோற்றம், நடை, பிளிறல், தும்பிக்கை துழாவல், ஊசலாட்டம், உணவு, சாணி என ஒவ்வொன்றையும் எழுதுவதில் ஜெயமோகனுக்கு அப்படி ஒரு களிப்பு. “விஷ்ணுபுரத்தில்” நூற்றுக்கணக்கான யானைகள் பெரிய பெரிய அப்பங்களை தூக்கி வந்து மலை மலையாய் குவிக்கும் காட்சி வரும். அதைக் கண்டுஒரு பாத்திரம் வாந்தி எடுக்கும். என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாத காட்சி அது. பிரம்மாண்டம் தூண்டும் அருவருப்பு அது. அந்நாவலில் பக்கத்துக்கு பக்கம் விஷ்ணுபுரத்தின் அளவற்ற மகத்துவமும் செல்வ செழிப்பும் பண்பாட்டு மகிமையும் சித்தரிக்கபடும் என்றால் இன்னொரு பக்கம் அதே மகத்தான பிரம்மாண்டத்தின் சில்லறைத்தனமான அசட்டுத்தனமான பக்கமும் வரும். அதன் மீதான அங்கமும் சிறப்பாய் இருக்கும். “விஷ்ணுபுரத்தை” ஒரு மகத்தான படைப்பாகுவது அது தான்.
இதே “விஷ்ணுபுரத்தில்” தான் இயற்கையின், மானுட பண்பாட்டின், கலையின் பிரம்மாண்டத்தின் முன் சிறுத்துப் போகும், தனது அகங்காரத்தை உணர்ந்து மனம் சிதறிப் போகும் மனிதர்களும் உண்டு (சங்கர்ஷணன், அஜிதன்). ஒரு இளம் பிக்கு தன் உடலின் மனத்தை தன் எண்ணங்களின் மனத்தால் சுலபத்தில் வெல்ல முடியாது என உணர்ந்து வெம்பிப் போகிறான். அவன் பின்னர் ஒரு தாசியிடம் சென்று அடைக்கலமாகி பின் அதிலும் திருப்தி காணாமல் உருக்குலைகிறான். இவ்வளவு பிரக்ஞைபூர்வமாய் உண்மையை தன்னுள் தேடுவதே தன் சிக்கல் என அவன் சுலபத்தில் அறிவதில்லை; ஒரு கவிஞனும், ஒரு கோயிலில் இசை முழுக்குபவனும் என வெவ்வேறு தளங்களில் உள்ளோரும் இந்த அகங்காரத்தின் வெம்மையில் ஒரு கட்டத்தில் வாடி சாய்கிறார்கள்; தம் அற்பத்தனத்தனத்தை உணர்ந்து கண்ணீர் உகுக்குகிறார்கள். மனிதன் அற்பமானவன், அவனது உச்ச சாதனையான ஒரு நகரம் எனும் கட்டமைப்பு கூட பிரம்மாண்டமாய் தோன்றினாலும் அதுவும் அற்பமே, அவனை விட மேலான ஒரு சக்தியின் உள்ளங்கையில் நகரும் எறும்புகளே இந்த அற்பப் பதர்கள், அந்த சக்தி தன் கையை மூடினால் எல்லாரும் அழிந்து போவார்கள், விஷ்ணுபுரம் எனும் பேரனுபவம் கூட சிதறிப் போகும் என இந்நாவல் சித்தரிக்கிறது.
காலம் எனும், ஆன்ம விடுதலை எனும், சூனியம் எனும் பேருண்மை ஒரு புறம், மனிதனின் சல்லித்தனங்கள் இன்னொரு புறம் – இந்த இரண்டின் மோதலே “விஷ்ணுபுரம்”. மானுட அகங்காரம் ஒரு மாயை, சூனியமே எஞ்சுவது, அதுவே ஆகப்பெரிய பிரம்மாண்டம், அந்த சூனியத்தின் மீதமைந்த கனவே இவ்வாழ்க்கை என இந்நாவல் பேசுகிறது. இதையே “யானை டாக்டர்” கதையும் இன்னொரு வடிவில் பேசுகிறது. சூனியத்தின் பிரம்மாண்டத்தை சுட்டும் உருவகமாய் இக்கதையில் வனமும் யானை உள்ளிட்ட வனமிருகங்களும் வருகின்றன. அதோடு, கற்பனாவாத (வெர்ட்ஸ்வொர்த், கீட்ஸ், ஷெல்லி) படைப்புகளில்  காணும் இயற்கையே தூய நிலை எனும் ஒருவித (பேகனிஸ) மிகையும் இதில் உள்ளது.
இக்கதையின் கதைசொல்லியான அந்த வன அதிகாரி “விஷ்ணுபுரம்” பாத்திரங்கள் சிலரைப் போன்றே அதிகாரத்தின் மமதையில் திளைப்பவன்; தன்னிலையின் இருப்பே அவனது முக்கிய குறை. வனத்தை அவன் அறிய அறிய அதன் ஒரு பகுதியாய் தன்னை அவன் உணர்ந்து மாறிட அவன் அத்தன்னிலையை மெல்ல மெல்ல இழக்கிறான். கதையின் துவக்கத்தில் அவன் எழுந்து புறப்பட தயாராகும் சந்தர்பத்தில் தன் வீட்டுக்கூரை வழி ஓரு மரநாய் தன்னை கவனித்துக் கொண்டிருந்து விட்டு பின்னால் சரசரவென இறங்கி ஒரு மரத்தில் ஏறி மறைவதை கவனிப்பான். இது இயற்கையின் கண். இயற்கையின் இந்த கண் அவனை எல்லா இடங்களிலும் அவனைத் துரத்துகிறது.  இந்த தன்னுணர்வை அவன் கதையினூடாக மெல்ல மெல்ல இழந்து கதையின் இறுதியில் விடுதலை ஆகிறான்.  யானை டாக்டரின் ஆளுமையின் வெளிச்சம் அவனுக்கு உதவுகிறது. காட்டின் இந்த கண்காணிப்பு பிரக்ஞை என்பது ஒருவிதத்தில் அவனது அகமனம் தான். நம் மனம் பல துண்டுகளாய் உடைந்து நம்மை கண்காணிக்கும் ஒன்று. இந்த சுயகண்காணிக்கும் அக உணர்வு தான் நம்மில் பலரையும் துன்பத்தில் ஆழ்த்துகிறது. யானை என்பது பிரம்மாண்ட இயற்கை இருப்பின் உருவகம் என சொன்னேனே, அந்த பிரம்மாண்டத்தின் பகுதியாகும் போது மட்டுமே நம் மனம் ஒருமை கொண்டு தன்னையே கண்காணிப்பதை நிறுத்துகிறது என்கிறது “யானை டாக்டர்”. இதைப் பற்றின குறிப்புகளை ஜெ.மோ கதையினூடே அழகாய் கோர்த்து போகிறார். ஆரம்பத்தில் வரும் மரநாய் மட்டுமல்ல வேறுபல மிருகங்களின் கவனிப்பின் மத்தியில் தான் கதைசொல்லி இறுதியில் இருக்கிறான் என்றாலும் அவன் அதை உணர்வதில்லை; அவனது மனம் முதிர்வது அப்போது தான்.
இக்கதையின் குறை என்பது யானை டாக்டரின் அப்பழுக்கற்ற குணச்சித்திரம். அப்படி ஒருவர் இருக்கவே முடியாது என்பது போல் செயற்கையான பாத்திர வார்ப்பு இது (டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நிஜமாகவே வாழ்ந்த மனிதர் என்றாலும் கூட). இத்தகைய மேலான பாத்திரங்களை அமைக்கையில் பொதுவாய் எழுத்தாளர்கள் சின்ன சின்ன குறைகளையும் கூடவே சேர்ப்பார்கள்; அப்போதே பாத்திர அமைப்பு பூரணமாகும். ஜெ.மோ இதை அறியாதவர் அல்ல. ஆனால் லட்சிய மனிதர்களைக் கண்டு வாசகர் உத்வேகும் கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தின் காரணமகவே, ஒரு பிரச்சார நோக்கிற்காகவே ஜெ.மோ அவ்வாறு அமைத்திருக்கிறார். இந்த பிரச்சார நெடியை அவரது “அறம்” தொகுப்பினூடாய் பல இடங்களில் காண  இயலும். பிரச்சாரத்தை தவிர்த்து ரசிக்க முடிந்தால் ஒரு நல்ல வாசிப்பனுபவம் இக்கதை. ஆனால் இதே  விசயத்தை மற்றொரு தளத்தில் வைத்து, பிரச்சார நெடியின்றி பேசும் “விஷ்ணுபுரத்துடன்” ஒப்பிட்டால் இது ஒரு படி கீழ் தான்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...