“இந்த நகரத்தில்
நம் வழிகள்
ஒவ்வொரு நாளும்
வேறுவேறு இடங்களில் பிரிகின்றன
நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்
நம் நீங்குதலின் நடுவில் மின்சார ரயில்
நமக்கு நாம் இல்லாமலாகும் அந்தியின் இருள்
நாம் அமர்ந்திருந்து எழுந்து வந்துவிட்ட
நிலங்களின் மீது
நிலவொளி இந்நேரம்
பெரும்தனிமையில் படர்ந்திருக்கும்
திரும்பும் வழியில்
நான் என் பொறுப்புகளை நினைத்துக் கொள்கிறேன்
நீ நிச்சயமற்ற உன் நாளையை நினைத்துக் கொள்கிறாய்
நம் வாழ்விடங்களுக்கு
அவரவர் வழியில் மீளும் துயரங்களெங்கும்
ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது”
மனுஷ்ய புத்திரனின்
இக்கவிதையில் இசையொழுங்கு இயல்பாக உள்ளது; வானம்பாடிகளுக்கும் தேவதேவன், மனுஷ்யபுத்திரன்களுக்குமான வேறுபாடு இது – அதாவது வலிந்து திணிக்கப்படாத இசைத்தன்மை.
உதாரணத்திற்கு, இக்கவிதையில் இரண்டாவது பத்தியில் சொற்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வருகின்றன (மோனை – நமக்கிடையே, நம், நீங்குதலின், நமக்கு, நாம்); அதற்கு அடுத்த பத்தியில் மோனை சில முறை தான் வருகிறது (நாம், நிலங்களின், நிலவொளி). இந்த ஒழுங்கின்மையை நான் கவனிக்க வேண்டியது அவசியம்.
மனுஷ்யபுத்திரனுக்கு ஓசை லயம் வேண்டும்; ஆனால் அது கவிதை முழுக்க ஒரே சீரான தாள லயமாக இருக்க
வேண்டிய அவசியம் இல்லை. அதாவது ஓசை நயத்துக்காக சொற்கோர்வை இல்லை; வெற்று ஓசையின் அழகுக்காக சொல்லின் இசைத்தன்மையை அவர் கிலுக்கிப் பார்ப்பதில்லை. அர்த்தத்தை கட்டியெழுப்ப மாட்டுமே சொற்களின் இசை நயத்தை அவர் பயன்படுத்துகிறார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அவர் “ந” ஓசையை சில இடங்களில் இங்கு சீராக கொண்டு வருகிறார். அது என்ன?
இக்கவிதையின் முக்கிய சொல் “நாம்” – இருவர் இணைந்து நாம் ஆனாலும் அவர்கள் தனித்தே இருக்கிறார்கள். அவர்கள் இருவழிகளிலாய் பிரிந்து செல்லப் போகிறார்கள். அவர்கள் பரஸ்பரம் அன்பு பாராட்டும் போதும் உள்ளுக்குள் தத்தமது உலகத்துக்குள் மீள்வதற்கான தயாரிப்புகளை மேற்கொள்கிறார்கள். இது தான் இக்கவிதையில் மென்கசப்பை, கழிவிரக்க தொனியை, நகைமுரணை – ஒட்டுமொத்தமாய் ஒரு அவல தொனியை - தோற்றுவிக்கிறது. மனுஷ்யபுத்திரன் இந்த நகைமுரணை கவிதையின் ஒலி ஒழுக்கு மூலம் உணர்த்த முயல்கிறார். அதற்காக அவர் என்ன செய்கிறார்?
“நான், நாம், நீ, நம், நமக்கு” ஆகிய சொற்கள் 11 தடவைகள் இச்சிறு கவிதையில் வருகின்றன. இந்த சுட்டுப்பெயர்கள் (pronouns) இல்லாது கூட இக்கவிதையை அவர் எழுதியிருக்க முடியும்.
உதாரணமாய்,
“நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்
நம் நீங்குதலின் நடுவில் மின்சார ரயில்
நமக்கு நாம் இல்லாமலாகும் அந்தியின் இருள்”
என்பதை
“இடையே மூடும் கதவுகள்
வளரும் சுவர்கள்
நம் நீங்குதலின்
நடுவில் மின்சார ரயில்
இல்லாமலாகும் அந்தியின் இருள்”
இப்படியும் எழுதலாம். (எண்பதுகளில் இந்த பாணியே பிரசித்தமாய் இருந்தது – உதாரணமாய் எஸ். வைத்தீஸ்வரனின் கவிதைகள்.) இரண்டு பத்திகளுக்கும் என்ன வித்தியாசம்? முதல் வடிவில் உறவு கொள்ளும் தரப்புகளின் இடம் முக்கியமாய் அழுத்தம் கொள்கிறது. இரண்டாவதில், அவர்கள் இடையிலான இன்மை வலியுறுத்தப்படுகிறது. முதல் வடிவம் உணர்ச்சிகரமாய், ஓசை நயம் கொண்டு, உரையாடல்தன்மையுடன் – அதனாலே மனிதக்குரலாய், சதைப்பற்றுடன் - உள்ளது. இரண்டாவதோ அரூபமாய் (ஒரு சர்ரியலிய ஓவியம் போல்) உள்ளது.
ஆக, அழுத்தம் கொடுப்பதற்காக மட்டுமே மனுஷ்யபுத்திரன் இங்கு சுட்டுப்பெயர்களை மீள மீள பயன்படுத்துகிறார். ஏன்?
“நாம்”, “நமது”, “நமக்கானது” என திரும்ப திரும்ப அவர் உச்சாடனம் செய்யும் போது கவிதையில்
வரும் காதலர் இருவரும் இணைந்தே ஈருடல் ஓருயிராய் இருப்பதான ஒரு பிரமை நமக்கு ஏற்படுகிறது. ஆனால் கவிதைக்குள் அவர் அவர்கள் பிரியப்போகிறார்கள்; பிரிவதற்கு முன்பான அந்த நிமிடங்களிலும் மனதளவில் வெகுவாய் விலகிக் கொண்டிருக்கிறார்கள் எனப் பேசுகிறார். ஒன்றை உணர்த்தி விட்டு, முற்றிலும் முரணான ஒன்றை சொல்கிறார். இதுவே கவிதையின் அதிர்ச்சி மற்றும் நகைமுரண். இதில் இருந்து தான் அந்த அவல உணர்வு தோன்றுகிறது.
இது போதாதென்று கூடுதலாய் (ஏற்கனவே குறிப்பிட்டது போல) “நாம்” என்பதன் ஒலிமயக்கத்தை ஏற்படுத்த “ந” ஒலியில் துவங்கும் சொற்களை 11 முறை பயன்படுத்துகிறார்.
“ஒவ்வொரு தினமும்” என எழுதலாம்; ஆனால் அவர் “ஒவ்வொரு நாளும்” என்கிறார்.
”பிரிதலுக்கு இடையே” இன்னும் இயல்பாய் இருந்திருக்கும்; ஆனால் அவர் ”நீங்குதலின் நடுவில்” என எழுதுகிறார்.