குட்டிரேவதியின் கவிதைகளில் பெண் இச்சையுடன் ஒருவித ஆண் நோக்கும் (male gaze) சட்டென தென்படும். அதாவது, அவர் பெண்ணியவாதி என்றாலும், தனக்கான வலுவான கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர்
என்றாலும், அவரையும் மீறி கவிதையில் பல சங்கதிகள் வரும் – அவர் நம்புவதற்கு நேர்மாறான சேதிகள் வரும். உ.தா., அவரது காதல் கவிதைகளில் வரும் ஆண் நோக்கு. ஒரே சமயம் ஒரு பெண்ணியவாதியும் பெண்ணியத்தை பொருட்படுத்தாத இச்சையில் தவிக்கும் ஒரு எளிய பெண்ணும் அவர் கவிதைக்குள் குரலெழுப்புவார்கள் (“முலைகள்” தொகுப்பு). இப்படியாக (ஒரே சமயம் ஆண் ஆதிக்கத்தை மறுக்கும் அதற்கு இணங்கிப் போகும் முரண் போக்குகளை வெளிப்படுத்தும்) உடைந்த சிதறுண்ட பெண் மனத்தை நாம் மாலதி மைத்ரியின் கவிதைகளிலும் காணலாம். இந்த கட்டற்ற பாய்ச்சல் இவ்விரு கவிகளின் மொழியின் ஒரு தனிச்சிறப்பு. மாலதி மைத்ரி பின்நவீனத்துவத்தில் இருந்து இந்த சிதறுண்ட போக்கை பெற்றிருக்கலாம். தேவதேவனில் இருந்து இதை குட்டிரேவதி பெற்றிருக்கலாம் (அல்லது தன்னியல்பாகவும் தோன்றியிருக்கலாம்).
முக்கியமாய் இங்கு குறிப்பிட வேண்டிய சேதி இந்த பெண் கவிகள் மொழியை தர்க்க ஒழுங்குடன், கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த எத்தனிக்கவில்லை என்பது. தாபத்திலும் சினத்திலும் ஆவேசத்திலும் நிலைகொள்ளாது தவிக்கும் உடலைப் போன்றே இவர்களின் மொழியும் நொதிக்கிறது.
ஆனால் ஆண் கவிகள் இதே நீர்மையை, தர்க்கத்தை கடந்த பாய்ச்சலை கவிதையில் அடைய இசைத்தன்மையை, மிகையான சொற்களை பயன்படுத்தினர். ஒரே நோக்கம், ஆனால் இருவேறு பாதைகள்.
இவர்களுடன் குறிப்பிட வேண்டிய மற்றொருவர் என்.டி ராஜ்குமார் – தமிழில் இசைப்பாடல் போக்கு கொண்ட நவீன கவிஞர்களில் அப்பட்டமானவர் இவர். நாட்டார் மக்கள் கலை வடிவங்களின் மொழியும் தாளலயமும் இவரது கவிதைகளில் நர்த்தனமிடும்.
இசைப்பாடல் மரபின் மற்றொரு நவீன கிளையாக இருப்பவர் மனுஷ்ய புத்திரன். அவரது சிறந்த கவிதைகள் அறிவார்த்தம் குறைவாகவும் உணர்ச்சித்தளும்பல் மிகுதியாகவும் இருக்கும். அதாவது, அவரிடம் தர்க்க கட்டமைப்பு கொண்ட இறுக்கமான கவிதைகளும், இப்படி முந்தானையை
அடிக்கடி பத்திரப்படுத்தி இடுப்பில் சொருகாத அபாரமான கவிதைகளும் உண்டு. குறிப்பாக அவரது காதல் கவிதைகள். இசையொழுங்கு, சொற்களின் அமைப்பு, மீளமீள ஒலிக்கும் சொற்றொடர்கள், முன்பின் முரணான கூற்றுகள் ஆகியவற்றின் உதவியுடன் வெற்றி பெறும் கொதிப்பான கவிதைகள் இவை. இவற்றில் சில கவிதைகளில் பித்தின் உச்சத்திற்கு லகுவாய் போய் திரும்புவார்
மனுஷ்யபுத்திரன்.
இதற்கு உதாரணமாய் மனுஷ்ய புத்திரனின் பல சிறப்பான கவிதைகளை சொல்லலாம். ஆனால் என்னை இந்த கட்டுரையை எழுதத் தூண்டிய கவிதையையே இங்கு குறிப்பிடலாம் என நினைக்கிறேன். அக்கவிதையின் தலைப்பு “பிரியும் இடங்கள்” (”நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம்” தொகுப்பிலிருந்து).