Skip to main content

திமுக தலைவர் முதல்வரானால்?

Image result for ஸ்டாலின்



திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.
ஸ்டாலினின் ஆளுமை குறித்த எனது அவதானிப்பு இது:

ஸ்டாலின் வெளிமுகமாய் இனிமையாய் நிதானமாய் தெரிகிறவர். ஆனால் உள்முகமாய் சற்றும் கடுமையாய், சர்வாதிகாரத் தன்மை கொண்டவர். இந்த உள்முகம் அவர் முதல்வர் ஆன பின் நிச்சயம் வெளிப்படும்.
ஸ்டாலின் ஜெயலலிதா அளவு சர்வாதிகார முரட்டுத்தனத்துடன் செயல்பட மாட்டார் எனினும், ஜெயலலிதாவைப் போன்றே ஒருவித கார்ப்பரேட் அரசியலை அவர் முன்னெடுப்பார். அவ்விதத்தில் அவர் ஆட்சி ஜெயலலிதா ஆட்சியை ஒத்திருக்கும். கராறான நிர்வாகம், பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை, மக்களிடம் எளிமையுடன் கருத்துரையாடும் (ஆனால் சொத்து சேர்ப்பதில் சளைக்காத) அமைச்சரவை என அவரது ஆட்சி தனித்துவத்துடன் இருக்கும்.
கட்சியை பொறுத்த மட்டில் கலைஞரின் காலத்தில் இருந்த அனைவரையும் அணைத்துப் போகும், பல்முனை அதிகார முகாம்கள் கொண்ட அமைப்பாய் ஸ்டாலின் தலைமையிலான திமுக இருக்குமா என்பது ஐயமே. அடுத்த முதல்வராக அவர் பொறுப்பேற்ற பின், கட்சிக்குள் தனக்கு போட்டியாக எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளவர்களை கூட விட்டு வைக்க மாட்டார். கட்சிக்குள் ஒவ்வொரு குண்டூசி முனையையும் தனது எந்திரப் பிடியில் வைத்திருக்க வேண்டும் எனும் முனைப்பும் தயக்கமற்ற செயல்திறனும் அவரிடம் இருக்கும். ஆக, சகோதர சகோதரி அதிகார வட்டங்கள் அவர் முன் முழுக்க மண்டியிட்டு அடையாளமற்று போய் விடுவார்கள். எதிரிகளைப் பொறுத்தமட்டில் ஆர்ப்பாட்டம் அற்ற  ஆனால் ஆபத்தான ஒரு அரசியல்வாதியாக அவர் இருப்பார். ஜெயலலிதா கலைஞரை நள்ளிரவில் கைது செய்ததைப் போன்ற வெறியை, வன்மத்தை அவர் தன் விரோதிகள் மீது காட்ட மாட்டார். ஆனால் அப்படி காட்டாமலே புன்னகைத்தபடி விரோதிகளை காணாமல் அடித்து விடுவார்.
ஒரு முதல்வராக ஸ்டாலின் மிக நல்ல நிர்வாகியாக இருப்பார். சென்னை வெள்ளம் மீண்டும் வந்தால் ஜெயலலிதாவை போல செம்பரம்பாக்கம் ஏரியை நிச்சயம் திறந்து விட மாட்டார். ஜெயலலிதாவின் நிதானமின்மை ஸ்டாலினிடம் நிச்சயம் இராது. உணர்ச்சிரீதியிலும் உடல்நலம் சார்ந்தும் அவர் நிலையாக இருப்பார். ஆகையால் அதிர்ச்சிக்குரிய ஆபத்தான முடிவுகளை எடுக்க மாட்டார். இது சாதகமானது. ஆனால், அதேவேளை, ஜெயலலிதாவின் பல எதிர்பாராத நலத்திட்டங்களுக்கு (அம்மா உணவகம்) இணையான மாறுபட்ட நலத்திட்டங்களை ஸ்டாலின் கொண்டு வருவாரா என்பது ஐயமே. ஒன்றுக்கு நூறு தடவை யோசித்து சில நல்ல யோசனைகளையும் கூட அவர் தள்ளிப் போட வாய்ப்புண்டு.
ஏன் ஸ்டாலினை ஜெயலலிதாவுடன் தொடர்ந்து ஒப்பிடுகிறேன் என்றால், ஆட்சி நிர்வாகத்தைப் பொறுத்த மட்டில் அவருக்கு ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை உண்டு என அறிவேன். ஆகையால் தான் இந்த ஒப்பீடு.
ஸ்டாலினிடம் தமிழகத்தின் எதிர்காலம் பாதுகாப்பானது; அவரது ஆட்சிக்காலம் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...