Skip to main content

இந்துத்துவாவை வளர விட்ட காங்கிரஸ் – இதன் தீர்வு என்ன?

Image result for rss godse temple
கோட்சேவுக்கு இந்து மகாசபையினர் எழுப்பி உள்ள கோயில்

என் முந்தைய பதிவில் மதவாத தடுப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும், அதன் மூலம் இந்துத்துவா தமிழகத்தில் எதிர்காலத்தில் பரவுவதை தடுக்க வேண்டும் என கோரி இருந்தேன். அதற்கு கருத்து தெரிவித்த நண்பர்களில் சிலர்அத்தகைய சட்டம் பாசிசம் ஆகாதா?” என கேட்டிருந்தார்கள். ஆம் உண்மை தான். ஆனால் இந்துத்துவாவை வேரோடு அறுக்க வேறுவழியில்லை. பாசிசத்துக்கு பாசிசம் தான் மருந்து.
 ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற கட்சிகள் மிக மிக ஆபத்தானவை. பாஜக இன்று ஆட்சியை கைப்பற்றி தேசத்தை சீரழித்துக் கொண்டிருப்பதற்கு ஒரு காலத்தில் காங்கிரஸ் காட்டிய அக்கறையின்மையே காரணம் என நான் கூறுவேன். எப்படி?

நேருவின் காலத்தில் இருந்தே காங்கிரசுக்குள் இந்துத்துவ ஆதரவாளர்கள் இருந்துள்ளனர் என்கிறார் ராமசந்திர குஹா தனதுகாந்திக்குப் பின் இந்தியாநூலில். அதுவே காந்தி கொலைக்கு காரணமான இந்துத்துவ கட்சிகள் நிரந்தரமாய் தடை செய்யப்படாமல் போனதற்கு, இந்துத்துவ செயல்பாட்டாளர்கள் கூண்டோடு ஆயுள் தண்டனை பெறாமல் போனதற்கு காரணம். கோட்சேவை தனிமைப்படுத்தி, அவர் தம் கட்சி ஆளே அல்ல என பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டு, இந்துத்துவர் மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் அனுமதித்தது.
 அதாவது, காந்தியின் படுகொலை கட்சி அளவில் திட்டமிட்டு நடந்தது என்பதற்கும், காந்தியின் படுகொலையை இந்துத்துவ கட்சியினர் கொண்டாடினர் என்பதற்கு நிரூபணம் இருந்தும் காங்கிரஸ் இவர்களை மயிலிறகால் சாத்தியே தண்டித்தது. தொண்ணூறுகளில் நரசிம்ம ராவ் மற்றொரு பாஜக ஆதரவு காங்கிரஸ் தலைவராய் பிரதமராய் விளங்கினர். மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியிலும் காங்கிரஸ் பாஜகவை அழிக்க எந்த முனைப்பும் காட்டியதாய் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி தனது மேம்பாடு, ஊழல், நிர்வாகம் என மூழ்கிப் போயிருந்ததே ஒழிய, தன் முன்னே ஒரு எதிரி வளர்ந்து வருவதை அது கவனிக்கவில்லை. ஏதோ அடுத்த நூறாண்டுகளும் தாமே ஆளப் போகிறோம் எனும் கனவில் அது இருந்தது.
அன்று காங்கிரஸ் சில உறுதியான கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இன்று மோடி ஆட்சியில் இருந்திருக்க மாட்டார். என்னென்ன?
1)   மதவாத தடைச்சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து, மதவாதத்தை தீவிரவாதத்துக்கு இணையாக சித்தரித்து, மதவாதிகளின் எல்லா அமைப்புகளையும் நிர்மூலமாக்குவது.
2)   எல்லா மாநிலங்களிலும் பாஜகவின் உள்கட்டமைப்பை சிதைக்கும் பணியில் அனைத்து அரசு அதற்கு எதிராய் நிறுவனங்களையும் முடுக்கி விடுவது.
3)   பாஜகவின் அரசியல் தாரக மந்திரமே மதவாத சர்ச்சையை தூண்டி, அதைக் கொண்டு கலவரத்தை உண்டு பண்ணுவது. ஆக ஒருவர் மதவாதக் கருத்து சொன்னாலே அவர் மீது விசாரணை இன்றி நடவடிக்கை எனும் நிலையை கொண்டு வந்தால், அதன் மூலம் பாஜகவின் அடிவேரையே அன்று காங்கிரஸ் அறுத்திருக்க முடியும்
4)   ஒரு பக்கம் பாஜகவை மௌனமாக்கி விட்டு அவர்களுடைய கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை தொடர்ந்து ஊடகங்களிலும் திரையரங்கிலும் ஒளிபரப்பி எதிர்-இந்துத்துவ பிரச்சாரம் செய்வது.
இதெல்லாம் நான் சொல்வதல்ல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சாணக்கியன் சொன்னது. ஆனால், காங்கிரஸ் தாலாட்டுப் பாடி, இவ்வளவு வளர்ந்து விட்ட நிலையில் பாஜக இந்தியாவை இனி சுடுகாடு ஆக்காமல் ஒழியாது.
இந்துத்துவ அரசியலை ஒரு தடை சட்டம் மூலம் வேரறுப்பது பாசிசமா என்றால் இருக்கட்டுமே என்பேன். பாசிசத்தை ஒழிக்க அதற்கு இணையான சக்தி கொண்ட ஆயுதம் தான் தேவை. பாசிசத்தின் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சிக் கொண்டிருந்தால் அது ஒழியாது. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மோடியே வெல்வார், ஆனால் அதற்குப் பின் அவரது சரிவு துவங்கும். அதற்கு அடுத்த தேர்தலில் அவர் வீழ்வார். அடுத்து பெரும்பாலும் கூட்டாட்சியே மத்தியில் அமையும் என்பது என் ஊகம். ஆனால் எந்த ஜனநாயக கூட்டாட்சி முறைக்கும் பிரதான எதிரியாய் பாஜக அப்போதும் தொடரும். பாஜக அடுத்து வீழ்ந்த பின் அதை நிர்மூலமாக்கும் பணியில் அப்போது ஆட்சியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட வேண்டும். ஆனால் அவர்களும் காங்கிரஸைப் போல அதை மீண்டும் தொட்டில் இட்டு ஆட்டி உறங்க வைத்தால், அது அடுத்த முறை உறங்கி எழும் போது பல மடங்கு சக்தியுடன் வந்து மற்றொரு மோடியை உருவாக்கும்; பல மடங்கு ஆபத்தான சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும். மோடிக்குப் பிந்தைய கட்சியினர் இதை கவனத்தில் கொண்டால் நல்லது!
கால் நூற்றாண்டு காலத்தில் பாஜக சட்டென எழுச்சி பெற்று இன்று இந்தியா முழுக்க ஆக்கிரமித்து விட்டது. கால் நூற்றாண்டில் ஒரு நாட்டையே வளைத்து முழுங்கும் கட்சி ஒரு மாநிலத்தை கவ்வ எவ்வளவு காலம் பிடிக்கும்? 5 வருடங்கள்? தமிழகத்தில் திமுகவும் பலவீனமானால் அது மிக விரைவில் நடந்து விடும். தமிழகத்தில் ஸ்டாலின் காங்கிரஸின் தவறில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கர்நாடகா, கேரளாவில் பாஜகவினர் நிலைபெற்று வருவது போல தமிழகத்திலும் காலூன்ற வெகுநாளாகாது. ஆக, சாணக்யன் சொன்னது போல வேரோடு பிடுங்கி, சாம்பலாக்கி நீரில் கரைத்து குடித்து விட வேண்டும். ஒருவேளை தமிழகத்தைப் பின்பற்றி பிற மாநிலங்களும் இத்தகைய தடைச் சட்டமொன்றை அமுல்படுத்தினால், இந்தியா முழுக்க பாஜகவை வேரறுக்க அது வழிவகுக்கலாம். ஜனநாயக முறையில் பாஜகவை இனி அழிக்க முடியுமென நான் நம்பவில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...