திமுக தலைவர் எதிர்காலத்தில் தமிழக முதல்வர் ஆகும் போது அவர்
செய்ய வேண்டியவை:
1) நீங்கள் முதல்வரானதும் முதல் பணியாய், மதவாத தடை
சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். இதன் படி யாராவது மதக்கலவரத்தை தூண்டும்படியாகவோ மக்களிடையே
பிரிவினையை தூண்டும்படியாகவோ பேசினால் அவருக்கு எந்த விசாரணையும் இன்றி 10 வருடம் சிறைத்தண்டனை
அளிக்க வேண்டும். பேசுவதோடு அன்றி செயல்படவும் செய்தால் அன்னாரின் வீடு, வங்கி இருப்புத்
தொகை உள்ளிட்டவற்றை அரசு உடைமை ஆக்கிக் கொள்ளலாம். அவர் எதிர்காலத்தில் எப்போதுமே தமிழகத்தில்
நுழைய முடியாதபடி தடை விதிக்க வேண்டும். அவர் கட்சி நடத்தினால் அக்கட்சி தடை செய்யப்பட
வேண்டும்.
2) ஊடகங்கள் தாம் எந்த அரசியல் கட்சிக்கும் பினாமி
இல்லை என அரசுக்கு உறுதியளித்து ஒரு ஒப்பந்தத்தில் ஒப்பமிட வேண்டும். இதை மீறி, ஒரு
சானலோ பத்திரிகையோ மாநில நலனுக்கு விரோதமான ஒரு தேசியக் கட்சிக்கு ஆதரவாய் செய்படுவதாய்
நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் எந்த விசாரணையும் இன்றி பத்தாண்டுகள்
சிறைவைக்கப்படலாம். அவர்களின் சொத்தையும் அரசு பறிமுதல் செய்யலாம். (ஆனால் ஊடகங்கள்
வேறு மாநில கட்சிகளை ஆதரிப்பதில் தவறில்லை. மாநிலத்துக்கு வெளியே உள்ள கட்சிகளின் பினாமியை
செயல்படுவதே முக்கிய குற்றம்.)
3) ஒடுக்கப்பட்டோர் பொறுப்புரிமை சட்டம் இயற்றப்பட
வேண்டும். இச்சட்டத்தின் படி, ஒரு ஊரில் உள்ள ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் பாதுகாப்புக்கு
அத்தொகுதியின் ஆளும் கட்சி எம்.எல்.ஏயும் ஆட்சியாளர், உயர் காவலதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுமே
பொறுப்பு. தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாய்
மேற்சொன்ன நபர்கள் (எம்.எல்.ஏ, ஆட்சியாளர் உள்ளிட்டோர்) தம் பதவிகளை இழப்பர். அதாவது
இதற்கு விசாரணை எல்லாம் இதற்கு தேவையில்லை. உடனடியாய் இந்நடவடிக்கை நிலுவையில் வந்து
விடும். ஒருவேளை எம்.எல்.ஏ ஆளும் கட்சியை சேர்ந்தவர் அல்லாவிடில், சம்பவத்துக்குப்
பின் ஆளும்கட்சி அத்தொகுதியில் அடுத்த பத்து வருடங்களுக்கு போட்டியிட ஆளுங்கட்சிக்கு
தடை விதிக்கப்படும்.
4) இந்த மூன்று சட்டங்களையும் நிறைவேற்றும் பொறுப்பை
அரசு எடுத்துக் கொள்ளாமல் நீதிபதிகளின் அமர்வு ஒன்றை நியமித்து அந்த அமர்விடம் ஒப்படைக்க
வேண்டும்.
5) மது உற்பத்தி, ரியல் எஸ்டேட் போன்று பணம் கொழிக்கும்
தொழில்களை அரசே எடுத்து நடத்த வேண்டும். இப்படிக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு புது
நலத்திட்டங்களையும் கொண்டு வர வேண்டும்; இப்போது தனியார் வசம் குவியும் கோடானுகோடிக்கணக்கான
பணம் அரசு கஜானாவுக்கு போக வேண்டும்.
6) மக்கள் நல நோக்கில் அரசுக்கு எதிராக பேசவும் போராடவுமான
உரிமையை அனைவருக்கும் வழங்கும் சட்டமொன்றை இயற்ற வேண்டும். சாதி மற்றும் மதவாத கட்சிகளுக்கு
மட்டும் இந்த உரிமை இல்லை (அத்தகைய போராட்டங்கள் பிரிவினையை தூண்டும் என்பதால்). பொதுச்சொத்துக்கோ
அமைதிக்கோ ஒரு சமூக நல போராட்டமோ கருத்தோ குந்தகம் விளைவுக்குமானால் அவரை கைது செய்வதற்கு
காவல்துறை நீதிபதிகள், அறிவுஜீவிகள், சமூக செயல்பாட்டார்களால் ஆன ஒரு அமர்விடம் முறையிட்டு
அனுமதி பெற வேண்டும். இச்சட்டத்தின் படி தீவிரவாத தடைச்சட்டம் போன்ற கடும் சட்டங்களை,
மதவாதிகள், சாதியவாதிகள் அல்லாத யார் மீது போடப்படக் கூடாது.
7) தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தின்
கீழ் செயல்பட ஊக்குவிக்கும் வண்ணம் அரசு பாடத்திட்ட சட்டம் இயற்றப்பட வேண்டும். இதன்படி,
பன்னிரெண்டாம் வகுப்பில் வேறு பாடத்திட்டங்களின் கீழ் படித்து சான்றிதழ் பெறுவோர் ஒரு
அரசு பொதுத் தேர்வெழுதி வெல்ல வேண்டும். அல்லாவிடில் அவர்களால் தமிழகத்தில் எங்கும்
மேற்படிப்பு படிக்கவோ வேலை செய்யவோ இயலாது. இது மைய அரசின் கீழ் வரும் கல்வி அமைப்புகளுக்கும்
பொருந்தும்.
8) பட்டப்படிப்பு முடித்தோருக்கு பொருளாதார உத்தரவாத
திட்டத்தை கொண்டு வர வேண்டும். இதன்படி, பட்டப்படிப்பு முடித்தோருக்கு அரசு மாதாமாதம்
ஒரு கணிசமான தொகையை (சுமார் 10,000) உதவித் தொகையாய் நல்க வேண்டும்.
9) இதே போல மாற்றுப்பாலினத்தோருக்கும் அரசு உதவித்
தொகையை வழங்க வேண்டும்.
10) தமிழகத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் இட
ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். இப்படி செய்ய மறுக்கும் நிறுவனங்கள் மீது இரட்டிப்பு
வரியை அரசு விதிக்க வேண்டும்.