Skip to main content

தேவி சர்ச்சைக்குள் ஜெ.மோவின் சர்ச்சை (ர்ச்சை ர்ச்சை ச்சை)


Image result for jeyamohan


தேவி கவிதையை ஒட்டி மனுஷ்யபுத்திரன் மீது இந்துத்துவ கும்பல் நடத்திய தாக்குதலைப் பற்றி ஜெயமோகன் எழுதிய கட்டுரை ஒரு பாதி அம்பி எழுதியதாகவும் மறுபாதி அந்நியன் எழுதியதாகவும் உள்ளது. முதல் பாதி படித்ததும் “அட” என்றும் பிற்பாதி படித்ததும் “ச்சீ” என்றும் தோன்றியது. ஆனால் நான் இதைச் சொல்ல இக்கட்டுரையை எழுதவில்லை. அக்கட்டுரையில் பல தர்க்கப் பிழைகள் உள்ளன. அவற்றை சுட்டிக் காட்டுவது அவசியம்.

முதலில் அக்கட்டுரையின் சாரம்:
இந்துமதம் சகிப்புத்தன்மை மிக்கது; எதிர்தரப்பையும் தன் தரப்பாய் கருதுவது. ஆனால் இந்துத்துவர் மனுஷ்யபுத்திரன் விசயத்தில் மிகவும் சகிப்பின்மையுடன் கீழ்த்தரமாய் நடந்து கொள்கிறார்கள். இத்தகையோரை இந்து மதத்தின் காவலர் என கருத முடியாது; இவர்கள் கீழான இழிமனம் கொண்ட அரசில்வாதிகள். இவர்களை நம்பி இந்துமதத் தலைமையை ஒப்படைக்க இயலாது. குருமூர்த்தி மற்றும் எச்.ராஜாவின் இழிசொற்களை ஒரு இந்து என்றுமே ஏற்க மாட்டான். இவர்கள் அதிகாரத்தில் இருப்பதால் இன்னும் கடுமையாய் இவர்களை நாம் கண்டிக்க வேண்டும்.
இதை அடுத்து ஜெ.மோ தான் சொன்னதற்கு நேரெதிரான நிலை எடுக்கிறார். “என்னதான் கண்டிக்க வேண்டும் என்றாலும் இவர்களின் இழிசெயலுக்கும் ஒரு காரணம் உள்ளது. இவர்களை இப்படி வசைமாரி பொழிய செய்தது, இவர்களது வனமத்தை இந்தளவு தூண்டியதும் நீங்கள் தானே. உங்கள் பாவச் செயலுக்கான பரிகாரமாகவே நீங்கள் இப்போது இந்துத்துவர்களால் திரும்பத் தாக்கப்படுகிறீர்கள்” (இது நேரடி மேற்கோள் அல்ல) எனக் கூறுகிறார் ஜெ.மோ.
சரி அந்த பாவச் செயல் தான் என்ன?
சுமார் அரைநூற்றாண்டுக்கு முன்பு தி.கவினர் இந்து மதத்தை கடுமையாய் தாக்கியதைத் தான் ஜெயமோகன் “எத்தனை காலமாக இந்துமதம்மீதும், இந்து மெய்யியல்மீதும்  கீழ்த்தர வசைபாடல் இங்கே நிகழ்கிறது. அதைச்செய்பவர்கள் மாற்றுமதங்களின் வெறியர்களுடன் கைகோப்பதற்குத் தயங்குவதுமில்லை.” என சொல்கிறார். ஆனால் இங்கே தான் இக்கட்டுரையில் உள்ள பல தர்க்கப்பிழைகளில் ஒன்று வருகிறது.
கடந்த கால் நூற்றாண்டில் திமுக தலைவர்கள் இந்துமதத்தை நேரடியாய் பழித்ததாகவோ பிள்ளையார் சிலையை உடைத்ததாகவோ செய்தி / வரலாறு உண்டா? தான் முதல்வராய் இருந்த காலத்தில் கலைஞர் “இந்துமதம்மீதும், இந்து மெய்யியல்மீதும்  கீழ்த்தர வசைபாடல்” செய்துள்ளாரா? ஸ்டாலினோ கனிமொழியோ முரசொலி மாறனோ அன்பழகனோ செய்துள்ளனரா? என் எளிய புத்திக்குத் தெரிவதெல்லாம், கடந்த சில பத்தாண்டுகளில், தன் ஆட்சிக் காலத்தில், கலைஞர் இந்து மத நம்பிக்கைகளை ஏற்காவிடிலும் அதை பழித்து தூற்றாதவர் என்பது. லேசாய் கிண்டலடித்திருக்கலாம். ஆனால் நிச்சயமாய் தூற்றியதோ இந்து மதவழிபாட்டை தடுக்க விழைந்ததோ இல்லை. சொல்லப் போனால் அவரது மஞ்சள் துண்டு மூடநம்பிக்கையைக் கொண்டு அவர் நாத்திகர் அல்ல என்று அவரை வசை பாடியோர் தாம் அதிகம். அவர் இந்து நம்பிக்கைகளை விமர்சித்ததில்லை என நான் கூறவில்லை; ஆனால் வசைபாடியதோ கேவலமாய் மட்டம் தட்டியதோ கோயில்களை இழுத்து மூடியதோ இந்துக்கள் மீது ஒடுக்குமுறையை அவிழ்த்து விட்டதாயோ இல்லை. குஜராத்தில் மோடி இஸ்லாமியர்களுக்கு செய்ததில் ஒரு சதவீதத்தைக் கூட திராவிட கட்சிகள் இந்து மதத்துக்கு தமிழகத்தில் செய்ததில்லை. அயோத்தியாவில் பாபர் மசூதி சர்ச்சையும் இன்னும் ஓயவில்லை; பாபர் மசூதியில் வழிபாடு நடத்த இந்துத்துவர் மறுத்ததைப் போல கலைஞர் எந்த இந்துக் கோவிலுக்காவது செய்திருக்கிறாரா? இங்கே எத்தனையோ இந்துக் கோயில்கள் பௌத்த, ஜைன கோயில்களை ஆக்கிரமிப்பு செய்து அவற்றின் மீதாய் கட்டி, பௌத்த, ஜைன தெய்வங்களை உருமாற்றம் செய்து அமைந்தவை. அயோத்தியா லாஜிக்கின் படி இந்த கோயில்களையும் நாம் ஆதிநிலைக்கு மீட்கும் பொருட்டு அங்கு இந்து வழிபாட்டை தடுக்க வேண்டுமே? திமுகவினரோ கலைஞரோ அவ்வாறு செய்தனரா? இல்லை கோரினார்களா?
 கடைசியாய் இந்துக் கடவுள்கள் மீது நேரடித் தாக்குதல் நடந்தது பெரியார் காலத்தில். அதற்காய் இந்துத்துவர் அரைநூற்றாண்டு கழித்து “நொண்டி நாயே” என மனுஷ்யபுத்திரனை ஏசுவதை ஜெயமோகன் நியாயப்படுத்துவது, உங்கள் அவல நிலைக்கு நீங்களே காரணம் என புன்னகைப்பது அபத்தம் மட்டுமல்ல பேத்தல்.
அடுத்து:
மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக எழும் குரல்களிலேயே இந்துமதம் மேல் எத்தனை வசைகள், எத்தனை சிறுமைப்படுத்தல்கள். எத்தனை சாதியக்காழ்ப்பு. இதேபோல இவர்கள் பேசும் தரப்பை, இவர்களின் தலைமையை இழிவுசெய்து வசைபாடினால் இவர்கள் அதை ஒரு கருத்துத்தரப்பு என்று ஏற்பார்களா? ”
முதலில் தி.கவினரின் நாத்திக அரசியலுக்கு மனுஷ்யபுத்திரன் பொறுப்பாக வேண்டும் என்ற ஜெயமோகன், இப்போது முகநூலில் சில பொது நபர்கள் எழுதும் காழ்ப்பு பதிவுகளுக்கு திமுக பொறுப்பாக வேண்டும் என்கிறார்.
என்ன கொடுமைங்க!
எம்..எஃப்.ஹூசேய்ன் போலவோ எம்.எம்.பஷீர் போலவோ இந்து மெய்யியல் மீதோ, இந்து மரபு மீதோ மதிப்புகொண்டவர் என மனுஷ்யபுத்திரன் தன்னைச் சொல்லிக்கொள்ளமுடியுமா? ”
இல்லை என்பதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா ஜெமோகன்? இதுவரை மனுஷ்யபுத்திரன் எழுதிய கட்டுரை / பதிவுகளில் இருந்து அவர் இந்து மெய்யியலை மட்டமாய் கருதுகிறார் எனச் சுட்ட உங்களிடம் ஆதாரம் உள்ளதா? எனக்குத் தெரிந்து இல்லை.
மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் நேரடியாய் மதக்குறியீடுகள் வருவதில்லை. “அல்லா” எனும் விளிப்பெயர் கூட நேரடியாய் அதிகம் வருவதில்லை. ரசூலைப் போல அல்லாவை மீளுருவாக்கம் செய்யும் கவிதை முயற்சிகளைக் கூட மனுஷ்யபுத்திரன் செய்ததில்லை.
எந்த மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் பொருட்படுத்தாதவர் என்றாலும் அவரை நாத்திகர் என்றும் கூற முடியாது. ஆன்மீக ஈடுபாடு கொண்ட ஒருவித இடைநிலை மத எதிர்ப்பாளர் என மட்டுமே அவரது கவிதைகளைக் கொண்டு என்னால் வரையறுக்க முடியாது. மற்றபடி, ஜெயமோகனின் கூற்றில் எந்த தர்க்கமோ ஆதார வலுவோ இல்லை.
மனுஷ்யபுத்திரன் வெறும் கவிஞர் அல்ல. ஓர் அரசியல்கட்சியின் பேச்சாளர். அவர் முன்வைக்கும் விமர்சனங்கள் அக்கட்சியின் அரசியல் சார்ந்தவை. அவற்றை முன்வைக்கும் அவருடைய சுதந்திரத்தை அக்கட்சிதான் காக்கவேண்டுமே ஒழிய எழுத்தாளர்கள் அல்ல. ”
 சென்றகாலத்திலும் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்றவர்கள் அவர்கள் சொன்ன கருத்துக்காக தாக்கப்பட்டிருக்கிறார்கள். அது வெறும் தெருமுனை அரசியல். அதில் இலக்கியவாதி செய்வதற்கேதுமில்லை. தி.மு.கவுக்காக கருத்தைச் சொல்லிவிட்டு இலக்கியவாதிகளிடம் மனுஷ்யபுத்திரன் ஆதரவு கோருவது எவ்வகையிலும் முறையல்ல.”
இக்கட்டுரையின் ஆக அபத்தக் கருத்து இது தான். மனுஷ்யபுத்திரன் திமுக மேடையில் பேசிய ஒன்றின் விளைவாய் வரும் சர்ச்சைக்கு திமுக பொறுப்பாகலாம். ஆனால் அவர் கவிதைகளை ஒரு தனிமனிதனாய் மட்டுமே எழுதுகிறார். அதை படிப்பவர் அனைவரும் திமுகவினர் அல்ல. அவர் திமுக மேடைக்காக இதை எழுதவோ அங்கு வாசித்துக் காட்டவோ இல்லை. இதை எப்படி ஒரு திமுக கவிதை என கூறுகிறீர்கள் ஜெமோகன்?
Image result for jeyamohan robot
நீங்கள் ரஜினியின் ரோபோ 2 படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளீர்கள் ஜெமோகன், அதற்காக உங்கள் எழுத்துக்கள் அனைத்திற்கும் சங்கர் பொறுப்பாக வேண்டுமா சொல்லுங்கள்?
கடைசியாக மனுஷ்யபுத்திரனின் அந்தக் கவிதை. கவிதை என்பது கொஞ்சம் நுட்பமான விஷயங்களுக்குரியது. அன்றாட அரசியலின் செயற்கையான உணர்ச்சிகளுக்காக படிமங்களையும் சொற்களையும் பயன்படுத்துவது கவிதையைக் கொல்வதுதான்.    இத்தகைய மலினமான விவாதங்கள் வழியாக அந்த நாலாந்தர ஜோடனைக் கவிதை ஓர் இலக்கிய அடையாளமாக ஆகிவிடக்கூடும். அதை அடையாளம் காட்டுவது இலக்கியவிமர்சகனின் கடமை.”
அன்புள்ள ஜெமோகன், அது மனுஷ்யபுத்திரனின் சிறந்த கவிதை அல்ல தான். ஆனால் அது இலக்கிய நுணுக்கங்கள் கொண்ட ஒரு அரசியல் பகடி அக்கவிதை. அதை எப்படி நாலாந்தர ஜோடனைக் கவிதை என உங்களால் கூற முடிகிறது? கோபம் தலைக்கேறி விட்டால் வாய்க்கு வந்ததை எல்லாம் கூறுவீர்களா? உங்கள் அரசியல் பிடிக்காதவர்கள் கூட “எனக்கு ஜெயமோகன் வலதுசாரி அரசியலுடன் உடன்பாடிருப்பதில்லை. ஆனால் அவர் நல்ல புனைவெழுத்தாளர்” என்றே சொல்கிறார்கள். ஆனால் நீங்களோ மனுஷ்யபுத்திரன் இந்துத்துவாவை தாக்குகிறார் என்பதற்காய் இப்படி உங்கள் இலக்கிய நுண்ணுணர்வையும் மறந்து அவர் கவிதையின் இலக்கிய தகுதியை நிராகரித்து கண்மூடித்தனமாய் எழுதுகிறீர்களே? உங்கள் ரத்தக்கொதிப்பு அடங்கிய பின், சில நாட்களுக்குப் பின், அக்கவிதையை நீங்கள் மீள படித்தால் அது “நாலாந்தர கவிதை” அல்ல என உணர்வீர்கள். நாலாந்தரம் என்றால் ஸ்நேகன், பா.விஜய் ஆகியோர் எழுதுவது. தேவி கவிதை அப்படியா உள்ளது சொல்லுங்கள்?
இந்த குப்பைக்கிடங்கிலும் மாணிக்கம் போல இந்த கட்டுரையின் முதல் பாதியில் ஜெயமோகனின் ஒரு நல்ல அவதானிப்பு வருகிறது:
தங்களுக்கு பலி அளிக்கப்படவில்லை, தங்கள் ஆணைகள் மீறப்படுகின்றன என்பதனால் சினம்கொண்டு நகரங்களை முற்றாக அழிக்கும் தெய்வங்களைப்பற்றிய கதைகள் எல்லா தொல்மதங்களிலும் உள்ளன.ஏனென்றால் இந்த அம்சம் பழங்குடி வழிபாடுகளிலிருந்து தொடங்குவது. பழங்குடித் தெய்வங்கள் அனைத்துமே பலிகொள்பவையும் அருள்பவையும்தான்.
 முதல்நோக்கில் அது மானுடனின் அச்சத்தின் வெளிப்பாடாகத் தோன்றும். ஆனால் அது ஒரு பெரிய தரிசனமும்கூடத்தான். இயற்கையின் அளவிலா ஆற்றலே உணவாகவும் மருந்தாகவும் அழிவாகவும் நோயாகவும் வருகிறது, அவை ஓர் உச்சநிலையில் ஒன்றே என்பது ஒரு தொல்தரிசனம். ஒரு சிறுசுனையின் பேரழகை இயற்கை என ரசிக்கையில் பெருவெள்ளத்தையும் அவ்வாறே எண்ணிக்கடக்க முடியவேண்டும். ”
இதை மிகவும் ரசித்தேன் ஜெயமோகன். இறையை ஏன் ஒரு எதிர்மறை, அழிவு சக்தியாகவும் காணக் கூடாது எனும் வாதத்தை முன்வைத்து நான் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். எனது “கால்கள்” நாவலில் போலியோ பாதிக்கப்பட்ட மையபாத்திரம் இறுதியில் வந்தடையும் தரிசனமும் இது தான்.
நீங்கள் தயவு செய்து இது போல ஆழமாய் காத்திரமாய் மட்டும் எழுதுங்கள் ஜெயமோகன். விஷத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். ஆலகால விஷத்தை முழுங்க நாங்கள் ஒன்றும் சிவபெருமான் அல்ல!



Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...