Skip to main content

எழுத்தாளனின் மிகப்பெரிய சவால்


 Image result for ஜெயமோகன்Image result for எஸ்.ராமகிருஷ்ணன்
எழுத்தாளர்கள் mood பற்றி பேசுவார்கள். நல்ல மூட் அமைய அவர்கள் தவமிருப்பார்கள். நீங்கள் எழுத்தாளன் என்றால், எழுதுவதற்கான ஊக்கமிக்க அந்த மனநிலையில் உணர்ச்சிகளால் ததும்பியபடி அதேவேளை உணர்ச்சிகளால் பாதிக்கப்படாமல் இருப்பீர்கள். ஒரு காதலைப் பிரிந்த வேதனையில் எழுத முடியாது; ஆனால் காலம் கடந்த பின் அந்த வேதனையை வெளிப்படுத்துவதற்கான ஒரு தவிப்பு உங்களுக்கு ஏற்படுகையில் நீங்கள் அதை சிறப்பாய் எழுத முடியும்.
ஒரு நண்பரிடம் இதைப் பற்றி மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது இமையம் பற்றி குறிப்பு வந்தது. அவரது மகன் நலமற்றிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் சிகிச்சைக்காக நிறைய பணம் செலவழித்திருக்கிறார். அதை விட முக்கியமாய் அவர் எந்தளவு உக்கிரமான உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டிருப்பார்! அவநம்பிக்கையின் நம்பிக்கையின் எல்லைகளுக்கு இடையில் எந்தளவு ஊசலாடியபடி தவித்திருப்பார்!

இந்த நிலையிலும் இமையம் எழுத்தில் ஊக்கம் குறையாமல் அதி தீவிரமாய் எழுதியபடி இருப்பார். அதனால் தான் அவர் மாமனிதர்.
எல்லா மனிதர் வாழ்விலும் இது போன்ற சோகங்கள், வேதனைகள் வரும் என்றாலும் எழுத்தாளர்களே இவற்றால் மிக அதிகமாய் கலங்கி உளம் குலைந்து போகிறவர்களாய் இருப்பார்கள்.
இன்னொரு பக்கம் வாழ்க்கை நிதானமாய் பெரிய விபத்துகள் இன்றி நேர்கோட்டில் சென்று கொண்டிருந்தாலும் எழுத்து வாழ்வில் தொடர்ந்து உன்னிப்பாய் செயல்பட முடியாது. மனதுக்குள் ஏதோ ஒரு ஸ்விட்ச் இருக்கிறது; அதை கடவுள் அணைத்து விடுவார். மனம் இருண்டு விடும். வாழ்க்கை இருண்டு விடும். தத்தளிப்பே அன்றாட வாழ்க்கைப் போராட்டமாக இருக்கும்.
பிரச்சனைகள் இப்படி புறமிருந்தும் உள்ளுக்குள் இருந்தும் தோன்றி நம்மை தாக்கி நிலைகுலைய செய்யும். இதன் நடுவில் ஒரு எழுத்தாளன் தன்னை தக்க வைப்பது தான் ஆகப்பெரிய சவால் என்றார் நண்பர்.
நான் உடன்பட்டேன். ஆனாலும் உண்மையான சவால் இது கூட அல்ல.
போனில் battery saving mode இருப்பது போல படைப்பாளிக்குள்ளும் ஒன்று உண்டு. அவன் சில ஆண்டுகள் முக்கியமாய் தீவிரமாய் எதையும் எழுதாமல் வெறுமனே படிப்பது, கூட்டங்களுக்கு சென்று நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, முகநூலில் கிறுக்குவது என மிதமாய் இருப்பான். சட்டென சிலர் இந்த மிதநிலையில் இருந்து மீண்டு வந்து முக்கியமான நூல்களாய் – ஒரு அட்டகாசமான கவிதைத் தொகுப்பு, நாவல் என – எழுதுவார்கள். ஆனால் பலரும் இதில் இருந்து மீள மாட்டார்கள். அதனாலே கணிசமான எழுத்தாளர்களின் படைப்பு வாழ்வில் உச்சம் என ஒரு வருடமோ சில வருடங்களோ மட்டுமே இருக்கும். முப்பது வருட எழுத்தாள வாழ்வில் நான்கு ஐந்து வருடங்களுக்கு மேல் வெறியுடன் எதையும் எழுதவோ இயங்கவோ மாட்டார்கள். ஒருவர் நாவல் எழுதுவதை நிறுத்தி விட்டு வெறும் கூட்டங்களாய் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தால் எனக்கு அவரைக் கண்டு வருத்தமாய் இருக்கும். இது எழுத்தாளனுக்கு சாபக்கேடான பருவம்.
துயரக் கடலை நீந்தி வருவதை விட இந்த மிதநிலையை தாண்டி வருவதே ஆகப்பெரிய சவால் என நண்பரிடம் சொன்னேன். நம் முன்னோடிகளில் பிரமிள், கா.ந.சு, ஆத்மாநாம், தி.ஜா, லா.ச.ரா, சு.ரா என பலரும் எண்ணெய் வற்றாத சுடர் விளக்காய் நீண்ட காலம் எரிந்திருக்கிறார்கள். புயலிலும் மழையிலும் கெடாத சுடராய் நிலைத்திருக்கிறார்கள்.
சரி, அது வேறொரு காலம். இன்றைய காலம் நிரந்தரமின்மையின் காலம் என்றார் நண்பர். அவர்களை நம்முடன் ஒப்பிட முடியாது என்றார். இல்லை நம் காலத்திலும் எஸ்.ரா, ஜெயமோகன் ஆகியோர் இப்படியான சாதனையாளர்களே என்றேன்.
கட்டுரைகளைக் கூட தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க முடியும். ஆனால் சிறுகதை மற்றும் நாவலில் தொடர்ந்து இயங்குவது மிக மிக சிரமம். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல மனித மனத்தால் தொடர்ந்து உக்கிரமான நடவடிக்கைகளில் தோய முடியாது. தொடர்ந்து எழுத்தில் கவனத்தை தக்க வைத்து, நம்மை மீளுருவாக்கம் செய்வதற்கு துணிந்தால் மட்டுமே கால் நூற்றாண்டுக்கு மேலாக நாவல்கள் எழுத முடியும்.
வெறுமனே எழுத்துப் பயிற்சி இருந்தால் மட்டும் போதாது. மட்டுப்படாத அபாரமான மன ஆற்றல், தளராது ஓடும் ஆற்றல் வேண்டும். பெரும் கொந்தளிப்பான சிக்கல்கள் ஏற்படும் போது முழுக்க தடுமாறி நம் எழுத்தாளுமையை அதில் இழந்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளும் திறமை வேண்டும்.
நமது அன்றாட வாழ்க்கை எழுத்துப் பணிக்கு நேர் எதிரான களத்தில் இயங்கும் ஒன்று. இங்கு செல்லுபடியாகும் உணர்ச்சிகள், கருத்துக்களுக்கு அங்கு சற்றும் மதிப்பிராது. ஆக, நீங்கள் இரண்டு மனிதர்களாக ஒரே சமயம் இருக்க முடிய வேண்டும். ஒரு சின்ன அலுவலக வேலைக்காக ஐந்து மணி நேரத்துக்கு மேல் உழைத்து விட்டு, உங்கள் நாவலில் அதை விட உக்கிரமான ஒரு விசயத்துக்காக - அலுவலக வேலைக்கான மனநிலையில் இருந்து முழுக்க மாறி - மிகுந்த அர்ப்பணிப்புடன் இயங்க வேண்டும்.
நீங்கள் பத்து வருடங்களில் ஐந்து நாவல்கள் எழுதுவது என்பது வெறுமனே 2500 பக்கங்களை தட்டச்சு செய்வது மட்டும் அல்ல; பக்கம் பக்கமாய் சொற்களை வடிப்பது மட்டும் அல்ல; கற்பனை செய்வதும் மனதை ஒருமுகப்படுத்தும் மட்டும் அல்ல. பத்து வருடங்களும் புதுப்புது கனவுகளை வளர்த்து அவற்றினுள் வாழ்வது. கனவுகளை நம்புவது, கனவுகளுக்காய் எல்லா அன்றாட பிரச்சனைகளையும் கடந்து உற்சாகமாய் உழைப்பது. இது தான் மிக மிக சிரமம்.
அதுவும் இவ்வளவு உழைத்த பின் சமூகம் உங்களை யாரென்றே திரும்பிப் பார்க்காமல் இருக்கும் போது, தளராமல் அடுத்த கனவொன்றை பின் தொடர்ந்து போக வேண்டும்.
நம் முன்னோடிகளும் ஜெயமோகன் போன்ற சமகால எழுத்தாளுமைகளும் இதற்காகவே போற்றத் தக்கவர்கள்!


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...