Skip to main content

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (6)



(எனது 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)

Image result for தேவர் மகன்

11. "அன்பு, விசுவாசம் ஆகியவைக்கு இன்னொரு கூர் முனை உள்ளது. அதுதான் துரோகம்" என்று உங்கள் கட்டுரையில் குறிப்பிடுகிறீர்கள். தமிழகத்தில் துரோகத்தின் காரணமாக அன்றாடம் நிறைய குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. தமிழ்ச் சமூகம், துரோகத்தை மனித இயல்புகளில் ஒன்றாகப் புரிந்து கொள்ள தவறிவிட்டதா?


ஆர். அபிலாஷ்: அன்பு, விசுவாசம் ஆகியவற்றின் மறுபக்கமே துரோகம் என்பது ஒரு தத்துவார்த்தமான அவதானிப்பு மட்டுமே. நாம் மிகவும் நேசிக்கிறவர்களின் பால் ஏதோ கண்காணா வெறுப்பையும் வளர்க்கிறோம். இதற்கு விளக்கமே இல்லை. மனித மனம் இது போன்ற புதிர்களால் நிரம்பியது. நமக்கு பிரியமான ஒருவர் துரோகம் இழைக்கும் போது நமக்கு அவர் பால் கொலைவெறி தோன்றுகிறது. நமது அளப்பரிய அன்பு ஒரு நொடியில் அளப்பரிய குரோதமாய் மாற்றமுறுகிறது.
 உண்மையான அன்பு எப்படி குருதி நாடும் பசியாக மாற முடியும்? எப்போதும் நம் வரலாற்றில், நம் அன்றாட சமூக நிகழ்வுகளில் இதுவே நடக்கிறது. நடப்புலகில் ஒருவர் நமக்கு துரோகம் இழைக்கும் போது அது மனித மனத்தின் இருண்மை புதிர்களில் ஒன்று என சுலபத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. சில எளிய சந்தர்பங்களில் நாம் அப்படி எண்ணி மன்னித்து விடலாம். ஆனால் பெரும்பாலும் நானோ நீங்களோ அங்கு இருந்தால் துரோகியின் கழுத்தை நெரித்து கொல்லவே தோன்றும். ஒரு எழுத்தாளனாய் என்னால் விலகி நின்று இதை அவதானிக்க முடியும். ஆனால் நடப்பில் ஒரு சமூகம் இப்பிரச்சனையில் விலகி நின்று நிதானமாய் நோக்க முடியாது.

12. தேவர்மகன், ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்கள் திரைக்கதை, ஒளிப்பதிவு போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் மூலமாக நல்ல காட்சி அனுபவத்தைக் கொடுத்துவிட்டு, தவறான கருத்தாக்கங்களை மக்கள் மனதில் விதைப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஆர். அபிலாஷ்: ஒரு படைப்புதவறான கருத்தாக்கங்களை மக்கள் மனதில் விதைக்கும்எனும் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. சினிமா இரு தரப்புகள் பங்கேற்கும் ஒரு உரையாடல், அவ்வளவு தான். அது ஒரு குத்துச்சண்டை போட்டி; அது ஒரு ஜோடி நடனம். சண்டையில் மூக்கு உடைந்தாலோ நடனத்தின் இடையே உதடுகள் கவ்வப்பட்டாலோ ஒரு தரப்பை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இதைப் பற்றி துவக்க பதில் ஒன்றில் விரிவாக பேசி விட்டதால் இங்கே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
13. "எம்.ஜி.ஆர்-சிவாஜி" , "ரஜினி-கமல்" வரிசையில் தொண்ணூறுகளில் கோலோச்சத் தொடங்கிய அஜித், விஜய் ஆகியோர் கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்களே?
ஆர். அபிலாஷ்: இது ஒரு பிரச்சனை என நான் பார்க்கவில்லை. வணிக சினிமாவுக்கு இந்த நட்சத்திர வரிசை அவசியமே. சினிமாவை விற்பது இவர்களால் சுலபமாகிறது.
சினிமா என்பது பல்லாயிரம் பேர் பங்கேற்கும் ஒரு பெரிய துறை. தியாகராஜன் குமாரராஜா போன்ற ஒருவர் எப்போதாவது தான் படம் எடுக்க முடியும். அதை நாம் கண்டு விவாதித்து பாராட்டலாம். நலன் குமாரசாமி போன்ற ஒருவர் பரீட்சார்த்தமான படங்களைத் தந்து அதை வெற்றிகரமாய் ஓட வைக்கவும் முடியலாம். ஆனால் தொடர்ந்து இந்த பாணி மாற்றுப் படங்களை தொழிற்சாலை பண்டங்களை போல் உற்பத்தி பண்ணிக் கொண்டிருக்க இயலாது.
நமது சினிமா துறை ஒரு தொழிற்சாலை. அதற்கு எம்.ஜி.ஆர் சிவாஜியில் இருந்து விஜய் அஜித் வரை அவசியம் தேவை. பெரிய ரிஸ்க் இல்லாத, மக்களுக்கு எளிய ஆறுதல் அளிக்கும் படங்களை உற்பத்தி பண்ணிக் கொண்டிருந்தால் மட்டுமே ஆயிரமாயிரம் குடும்பங்களில் அடுப்பெரியும்.

நமக்கு உண்மையில் அவசியம் நட்சத்திரங்கள் அற்ற சினிமா அல்ல. இந்த பிரம்மாண்ட சினிமாக்களுடன் ஒரு மாற்று சினிமா இயக்கமும் நடைபெறுவதே. வழக்கமான திரையரங்குகளை நம்பி மாற்று சினிமா ஜீவிக்க முடியாது. அதை குறைந்த செலவில் எடுத்து வெளியிட்டு விற்பதற்கு இணையம், டிவி சேனல் போன்ற புதிய பாதைகள் திறந்து வருகின்றன. எண்பதுகளில் மலையாள சினிமாவின் பொற்காலத்தின் போது மம்முட்டி, மோகன் லால் போன்ற வணிக நாயகர்கள் மாற்றுப் படங்களிலும் ஊக்கத்துடன் நடித்தார்கள். இது மாற்று சினிமா இயக்கத்தை பாதுகாக்கவும் வெற்றிபெறச் செய்யவும் உதவியது. இது தமிழிலும் நடக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...