Skip to main content

விஷ்ணுபுரம் கூட்டங்கள்: கருத்து மோதல்களும் அறிவுஜீவியும் (2)



முன்பு இருந்தது சிறு சிறு தீவிர குழுக்களின் சந்திப்புகள். ஆனால் இன்று உள்ள தேவை அறிவுஜீவிகள் சந்தித்துக் கொள்ள 60களில் நடந்த கொல்கொத்தா காபி கிளப் பாணி அறிவுஜீவி கூட்டங்கள் அல்ல. இன்று தீவிர இலக்கிய அறிமுகங்கள் தேடும் மத்திய மேல் மத்திய வர்க்கத்தினர் பலர் உள்ளனர். அவர்களுக்கு எளிய இலக்கிய வகுப்புகள் தேவைப்படுகிறது. அதாவது நீங்கள் BA English honors / BA Tamil (சிறுபத்திரிகை) honors (அப்படி ஒன்று இல்லை எனினும்) படிப்பில் சேர்ந்து ஆரம்ப நிலை இலக்கிய அறிமுகம் பெற இவர்கள் விரும்புகிறார்கள். இதற்கு வாசக சாலை கூட்டங்கள் (சின்ன அளவிலும்) விஷ்ணுபுரம் கூட்டங்கள் (பெரிய விரிவான அளவிலும்) உதவுகின்றன. மேலும் இது ஒரு இலக்கிய சமூகமாக்கல் தளமாகவும், இளம் எழுத்தாளர்கள் சந்தித்து ஊக்கம் பெறும் இடமாகவும் மாறுகிறது. விஷ்ணுபுரம் அமைப்பை பொறுத்தமட்டில் எந்தவொரு கல்லூரி / பல்கலைக்கழகத்தை விடவும் சிறப்பானதொரு தமிழ் நவீன இலக்கிய அறிமுகத்தை அது வழங்குகிறது என நம்புகிறேன்.

ஆனால் ஒரு கல்வி அமைப்பின் அடிப்படை இயல்புகளையும், நிறைகுறைகளையும் அது பெற்று விடுகிறது. பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட வரம்புக்குள் நின்று ஒரு குறிப்பிட்ட விதமாய் அங்கு பேச வேண்டும். உங்கள் நண்பரின் படைப்பை நீங்கள் விவாதிக்கையில் அவர் பெயரை குறிப்பிடல் ஆகாது. போகன் சங்கரை நான் சங்கர் என அழைக்க விரும்புகிறேன் என வையுங்கள். “சங்கரின் கதைகளின் அடிப்படையான குணாதசியம்” என்று ஆரம்பிக்கக் கூடாது. “எழுத்தாளர் போகன் சங்கரின் கதைகளின் அடிப்படையான குணாதசியம்” என்றே பேச வேண்டும். இம்மாதிரியான வழமைகள், விதிமுறைகள், சடங்குகள், கால அட்டவணை, சிலபஸ் என பல விசயங்கள் ஒரு கல்வி அமைப்பு சீராய் நடைபெற அவசியம் தான். நான் மறுக்கவில்லை. ஆனால் ஏற்கனவே வாசிப்பு மற்றும் சிந்தனை பயிற்சி கொண்ட அறிவுஜீவிக்கு இது அவசியம் இல்லை. ஆனால் விஷ்ணுபுரம் வட்டத்தில் நிறைய இளம் மாணவ / மாணவிகள் இருக்கிறார்கள். ஆக, ஜெயமோகன் அவர்களை அவ்வாறே நடத்துகிறார்.
ஒரு நல்ல பேராசிரியரைப் போல அவர் அவர்களின் தோளில் கையிட்டு ஜாலியாக ஒரு நண்பரை போல் இடமளித்து அரட்டை அடிக்கிறார். ஆனால் கூட்டம் துவங்கியதும் ஒரு கண்டிப்பான ஆசிரியர் ஆகிறார். ஒரு ஆசிரியனாக நான் பெரிய வகுப்புகளில் மிகத்தீவிர விவாதங்கள் அசாத்தியம் எனக் கண்டுள்ளேன். ஆகையால் நான் ஆர்வமுள்ள மிகச்சில மாணவர்களுக்கு மட்டுமேயான சிறப்பு வகுப்புகளையும் நடத்துவேன். நாங்கள் ஒரு பிரதியை சேர்ந்து வாசித்து ஆழமாய் விவாதிப்போம். பொதுவாக வகுப்பில் பேசாதவர்கள் இங்கு மிகுந்த ஆர்வத்துடன் பேசுவதை கவனித்துள்ளேன். இவ்வகுப்புகள் மிகுந்த திருப்தியை அளிப்பவை. இவை எண்பது, தொண்ணூறுகளின் சிறுபத்திரிகை கூட்டங்களைப் – ஒழுங்கற்ற அடிதடி கூட்டங்களைப் – போன்றவை. பெரிய வகுப்புகள் இன்றைய ஒழுங்கான பெரிய அளவில் திட்டமிட்டு நடத்தப்படுகிற இலக்கிய கூட்டங்கள். (பி.ஆர்.ஓ, சிறப்பு பேச்சாளர், வரைவு, லோகோ, அட்டவணை, பயண திட்டங்கள், மதிய உணவு, தேநீர் ஆகியன உள்ளிட்ட, மது அருந்தவோ சிகரெட் புகைக்கவோ அரட்டை அடிக்கவோ குறுக்கிட்டு மறுத்துப் பேசவோ அனுமதியற்ற கூட்டங்கள்.)
இக்கூட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தொழில்நுட்ப, சமூகமாக்கல், மேலாண்மை திறன்கள் கொண்டவர்கள். பசையானவர்கள். ஆகையால் இந்த இலக்கிய அமைப்புகளை இவர்கள் இன்று ஒருங்கிணைக்கையில் நடத்துகையில் அவை கார்ப்பரேட்டுகளாய் மாறுகின்றன. (கார்ப்பரேட் என்றாலே கெட்டவர்கள் என நான் கூறவில்லை.) கார்ப்பரேட்டுகளின் அடிப்படை நோக்கம் விரிவாக்கமும் உற்பத்தியும் அதன்வழி லாபமும். தமிழில் இலக்கிய கார்ப்பரேட்மயமாதல் முதல் காரியத்தை செய்து விட்டது. புத்தக பிரசுரத்தை இந்த அமைப்புகள் தீவிரமாய் எடுத்து சென்று, நூல் விநியோகத்தை சிறப்பாய் செயல்படுத்துமானால் இலக்கிய விழுமிய உற்பத்தியும் அமோகமாய் நடக்கும். (நான் இதை நக்கலாய் சொல்லவில்லை).
சிறுபத்திரிகைகளின் காலத்தில் இருந்து நாம் இன்று எங்கு வந்து நிற்கிறோம் என எண்ணினால் வியப்பாக உள்ளது!
கார்ப்பரேட்டுகள் நம் காலத்தின் தவிர்க்க இயலாத அம்சம். நான் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதன் தீமைகளைக் களைந்து நன்மைகளை உச்சபட்சமாய் அடைய நாம் முயல வேண்டும்.
இந்த சமகால பிரம்மாண்ட கூட்டங்களின் சமூக கலாச்சார பயனை நான் மறுக்கவில்லை. இவை ஏன் இப்படி இருக்கின்றன என்பதையே அலச முயல்கிறேன். 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...