
பிக்பாஸின் அடுத்த பருவத்திற்கு தயாராகும் போட்டியாளர்கள்
ஒரு பாடத்தை நன்றாய் கற்றிருப்பார்கள்: இங்கு ஜெயிக்க சதா ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி
ஷோவுக்கு ஒரு பொழுதுபோக்கு சாத்தியத்தை தந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அதே நேரம்,
யாரையும் அதிகம் துன்புறுத்தவோ புண்படுத்தவோ செய்யாமல் இருக்க வேண்டும். வீட்டுக்குள்
யாருடனும் இசைவாக இருப்பது நிலைப்புக்கு உதவாது. ரேட்டிங் ஏற உதவினால் மட்டுமே நீங்கள்
நீடிக்க இயலும்.
கார்ப்பரேட்டில் இன்றுள்ள சூழலும் இதுவே: அனைவருக்கும் இணக்கமான,
நட்பார்ந்தவர்களிடம் அனைவருமே அன்பாக இருப்பார்கள். ஆனால் அது ஒரு போட்டிக் களம் என்பதை
உணர்ந்து, தன்னை தக்க வைத்துக் கொள்ள, யாரையும் காலை வாரி விட துணிந்து செயல்பட வேண்டும்.
போட்டியுணர்வே இணக்க சுபாவத்தை விட முக்கியம். ரம்யா வெளியேற்றப்பட வைஷ்ணவியும் மும்தாஜும்
காப்பாற்றப்படுவது இதனால் தான்.
நான் முன்பு ஒரு நிறுவனத்தில் ஒரு பைலட் புரோஜெக்டில் வேலை
செய்தேன். மூன்று மாதங்களில் புரோஜக்ட் சொதப்ப, எங்களை ஒவ்வொருவராக வீட்டுக்கு அனுப்பினார்கள்.
வெளியேற்றத்தின் போதான நேர்முகத்தின் போது புரோஜெக்டை காப்பாற்ற இன்னும் என்னென்ன செய்ய
வேண்டும் என கேட்டார்கள். எனக்கு அது என் இறுதி நாள் எனத் தெரியாது. நான் என் சக ஊழியர்
ஒருவரை பாராட்டிப் பேசினேன்: அவருக்கு அத்துறையில் சில நல்ல தொடர்புகள் உண்டென்றும்,
அதைக் கொண்டு நிச்சயம் புரோஜெக்டின் தரத்தை மேம்படுத்த முடியும் என்றும் சொன்னேன்.
என் நோக்கம் உண்மையில் எப்படியாவது புரோஜக்டை இறுதி சுவாசம் அளித்து தேற்ற வேண்டும்
என்பது. மனித வள மேலாளர் மிகுந்த கரிசனத்தோடு என்னை கவனித்துக் கேட்டார். என் கருத்துக்களை
பாராட்டி கைகுலுக்கினார். ஒரு மாதத்தில் என்னை வெளியேறக் கேட்டு அடுத்த நாள் மின்னஞ்சல்
வந்தது. என் நண்பர் மட்டும் கூடுதலாய் மூன்று மாதங்கள் தங்கினார். நல்ல நண்பனாய் இருக்க
முயன்றதாய் நான் தோற்றேன். என் நண்பரோ அடுத்த நாள் நடந்த அவரது நேர்முகத்தின் போது
தன் நண்பனான என்னைப் பற்றி மேலாய் பேச வேண்டும் என்றெல்லாம் பிரயத்தனப்படவில்லை. மாறாக,
நான் அவரைப் பற்றி உயர்வாக சொன்னதை வைத்து அவர் தன் பிம்பத்தை கூடுதலாய் ஊதிப் பெருக்கி
மேதாவித்தனமாய் பேசி தப்பித்தார்.
பாலாஜி, டேனியல், மஹத், செண்டிராயன் எல்லாம் என் நண்பரைப்
போன்று ஷோவில் தம் இடத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதிலே ஆவேசமாய் இருப்பவர்கள்;
அதற்காய் அற்ப சண்டைகளில் ஈடுபட, தன்னிரக்கம் தொனிக்க பேச தயங்காதவர்கள்.
ஷோவில் இன்றைய அத்தியாயத்தில் (23 ஜூலை) செண்டிராயன் தனக்கு
ஐந்து வருடங்களாய் குழந்தை இல்லை என்றும், அதனால் தத்தெடுக்கப் போவதாயும் பேசியது பச்சை
நாடகத்தனம் மற்றும் அயோக்கியத்தனம். இதனால் தன் மனைவியின் மனம் புண்பட்டிருக்கும் என்பதைப்
பற்றி அவர் கவலை கொண்டாரா? எப்படியாவது தன்னிரக்கத்தை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில்
பிம்பத்தை பெருக்கவே அவர் விரும்புகிறார். (அவர் நிச்சயம் தத்தெடுப்பார் என எனக்குத்
தோன்றவில்லை.) ரம்யா சொல்வது போல் அந்த வீட்டில் ரொம்ப அப்பாவியாய் நாடகம் போடும் வேஷதாரி
செண்டிராயன் தான்.
நாம் வாழும் கார்ப்பரேட் உலகம் பாலாஜி, டேனியல், மஹத், செண்டிராயன்களின்
உலகம்! இங்கு நாம் அனைவரிடம் நட்பார்ந்து, சமூகமாக்கல் செய்து இணக்கமாய் இருக்க வேண்டும்
என ஆரம்பத்தில் கோருவார்கள்; நாமும் அப்படி இருந்தால் நம்மை அனைவரும் பாராட்டுவார்கள்;
ஆனால் ஒருநாள் “உங்க வேலைத்திறன் போதாதுங்க” என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்;
ஒரு அணியில் பிறரை விட உங்களை மேதாவி என்றும், அதிக திறமையானவர் என்றும் நீங்கள் காட்டிக்
கொண்டே இருக்க வேண்டும். அணியில் அதிகம் நேசிக்கப்படாதவராய் இருந்தாலும் நீங்கள் உங்களைப்
பற்றி உருவாக்கும் போட்டி பிம்பத்தினாலே நீண்ட காலம் நீடித்து பதவி உயர்வும் பெறுவீர்கள்.
பிக்பாஸும் இதே பண்பாட்டைத் தான் பிரதிபலிக்கிறது.