Skip to main content

யுவ புரஸ்கார் லாபியிங்


சுனில் கிருஷ்ணனுக்கு யுவ புரஸ்கார் வழங்கப் போகிறார்கள் எனும் வதந்தியை ஒட்டி முகநூல் இலக்கிய வட்டாரங்களில் ஒரு சர்ச்சை தீ போல் பரவி வருகிறது. தன் பெயர் இப்படி விவாதிக்கப்படுவது சுனில் கிருஷ்ணனுக்கே வியப்பேற்படுத்தக் கூடும். விருதுக்கு முன்பு இப்படி ஊகத்தின் பெயரில் விவாதங்கள் ஆரோக்கியமானதா?

எப்படியும் ஊகத்தின் பெயரிலான இந்த அடிதடி மேலும் பல ஊகங்களைத் தூண்டுகிறது: ஒருவேளை யுவ புரஸ்கார் நடுவர் குழுவில் இருக்கும் ஒருவர் பிற குழு உறுப்பினர்களுடன் உள்ள புகைச்சல் அல்லது கருத்து முரண்பாடு காரணமாய் இப்படி செய்தியை கசிய விட்டிருக்கலாமோ? இதன் மூலம் வெளியில் இருந்து ஒரு மறைமுக அழுத்தம் பிற உறுப்பினர்கள் மீது கொடுக்கப்படுகிறதா? இது சரியா? இப்போது இந்த சர்ச்சையை முன்னெடுப்பவர்கள் பொறுப்புணர்வு கொண்ட, நேர்மையான படைப்பாளிகள். நாளை இதே வழிமுறையை தவறான சக்திகள் கையில் எடுத்தால்? உ.தா., பெருமாள் முருகன் மீது அவரது ஊர்க்காரர்களில் சில வலதுசாரிகள் கடும் வெறுப்பு கொண்டிருந்தார்கள் என்பதை அறிவீர்கள். அதுவே அவரை ஊரை விட்டு துரத்தும் சர்ச்சைக்கு, ஒடுக்குமுறைக்கு வழிவகுத்தது. நாளை “மாதொரு பாகன்” போன்ற நாவலொன்றை ஒரு படைப்பாளி எழுதுகிறார். அவருக்கு எதிராய் சில சக்திகள் திரள்கின்றன. சாகித்ய அகாதெமி விருதுக்கு அவரை தேர்ந்தெடுக்க அந்த சந்தர்பத்தில் விருதுக் க்குழுவினர் முடிவெடுக்கிறார்கள். இதில் உடன்படாத ஒருவர் செய்தியை கசிய விட்டு, அதனால் அவருக்கு எதிராய் சர்ச்சையும் போராட்டமும் வலுத்தால்? இன்று நாம் இலக்கிய நோக்கிற்காக செய்யும் விவாதத்தை, உருவாக்கும் சர்ச்சையை சிலர் நாளை தவறான நோக்கிற்காகவும் செய்யலாமே?
ஆகையால் சாகித்ய அகாதெமி நிர்வாகிகள் இப்படியான கசிவுகளை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, சாகித்ய அகாதெமி தேர்வில் சாதிய நோக்கு உள்ளதா? சுனில் கிருஷ்ணனின் சாதிய பின்னணியை கணக்கில் கொண்டே அவரை குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாய் ஒரு நண்பர் எழுதியுள்ளதைப் படித்தேன். இதுவரையில் நான் அப்படியோரு சாதிய மனச்சாய்வை தேர்வுகளில் கவனித்ததில்லை. கடந்த சில வருடங்களின் தேர்வுகளை கவனித்தாலே விளங்கும். எனக்கு அளிக்கப்பட்ட போது, விருதுக்குழுவினர் யாரும் என் சாதியினர் இல்லை. கடந்த சில வருடங்களில் இரு தலித்துகள் விருதைப் பெற்றுள்ளனர் – அப்போது விருதுக்குழுவில் தலித்துகள் இல்லை. ஆனால் நீங்கள் சாதிய விசுவாசத்தை மோப்பம் பிடித்துப் போனால் அது எங்காவது புலப்படலாம். இந்தியாவில் எங்கு தான் இல்லை? ஆனால் இதுவரையில் யுவ புரஸ்கார் தேர்வில் சாதி பட்டவர்த்தமாய் தென்பட்டதில்லை.
அடுத்து லாபியிங். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வட்டத்தில் தீவிரமாய் இயங்கி வருபவர் சுனில் கிருஷ்ணன். ஆகையால், இது ஜெயமோகனின் செல்வாக்கின் பெயரிலே நடக்கிறது என இன்னொரு முகநூல் பதிவு சொல்கிறது. நான் விருது பெற்ற போது நாஞ்சில் நாடன் குழுவில் இருந்தார். அவர் ஜெயமோகனுக்கு நெருக்கமானவர். 2007இல் இருந்தே நான் ஜெயமோகனை கடுமையாய் தாக்கி எழுதி வந்தவன். பதிலுக்கு அவர் என்னை முழுக்க நிராகரித்து எழுதிய கட்டுரை இன்னமும் அவர் தளத்தில் உள்ளது. அதன் பிறகு அவர் என்னிடம் பேசவே விருப்பமில்லை என ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். நான் அவரை போனில் அழைக்க முயன்ற போதும் துண்டித்தார். என் எழுத்து அவரை காயப்படுத்தி இருக்கலாம் அல்லது தேவையற்ற சச்சரவில் தன் ஆற்றலை வீணடிக்க வேண்டாம் என அவர் நினைத்திருக்கலாம். அவரது இந்த நிலைப்பாடு என்னை மேலும் காயப்படுத்தியது. இதன் பின்னர் அவரைத் தாக்குவதற்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் நான் வீணடித்ததில்லை.  எனக்கு யுவ புரஸ்கார் அளிக்கப்பட்ட 2014 வரையில் நான் அவரைப் பாராட்டி எழுதினதே இல்லை. என் தளத்தில் உள்ள கட்டுரைகளை எடுத்து நீங்களே சோதித்துப் பார்க்கலாம். ஆக, யுவ புரஸ்கார் விருதைப் பெற்றவர்களில் என்னளவு ஜெயமோகனைப் பழித்தவர்கள் வேறில்லை. இன்னொரு விசயம் கடந்த வருடம் வரை – சுமார் பத்து வருடங்கள் – நான் அவரிடம் போனில் கூட பேசினதில்லை. கடந்த வருடம் சென்னையை விட்டு, அங்குள்ள இலக்கிய நண்பர்களைப் பிரிந்து, என் குடும்பத்தை ஒருவகையில் நிரந்தரமாய் பிரிந்து, கிளம்பும் கசப்பில் மிகவும் நெகிழ்வுற்றிருந்தேன். எனக்கு சென்னையை விட்டு பெங்களூர் வருவது உலகை விட்டே உயிர்பிரிந்து போவது போன்ற உணர்வைத் தந்தது. கண்கள் கசிந்து கொண்டே இருந்தன. அந்த சந்தர்பத்தில் ஜெயமோகனை அழைத்து சில நிமிடங்கள் பேசினேன். அதை அடுத்து அவர் என்னை விஷ்ணுபுரம் விருது நிகழ்ச்சிக்கு அழைத்தார். அங்கு பங்கு பெற்று பேசினேன். அதை அடுத்து கூட அந்த நிகழ்ச்சி நடந்த விதம் பற்றின என் விமர்சனங்களை நான் விரிவாக எழுதினதை படித்திருப்பீர்கள். நான் எப்போதும் யாரிடமும் சரணடைந்ததில்லை. எப்போதுமே!
 நீங்கள் குறிப்பிடும் ஜெயமோகனின் செல்வாக்கு உண்மை எனில் 2014இல் எனக்கு யுவ புரஸ்கார் கிடைத்திருக்கவே கூடாது. ஏன் கிடைத்தது? நீங்கள் சொல்வது போல் அவர் ஒரு இலக்கிய காட்பாதர் என்றால் எனக்கு விருது கிடைப்பதைத் தான் அவர் முதலில் தடுத்திருக்க வேண்டும். நாஞ்சில் நாடன் போன்ற அவரது இணக்கமான நண்பர்கள் குழுவில் இடம்பெற்றிருக்க அவர் அன்று அதை சுலபமாய் தடுத்திடுக்கலாமே? ஏன் தடுக்கவில்லை?
இங்கு எல்லாமே சாதி, லாபியிங், பணம், செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையிலே நடக்கிறது என்பது ஒரு மலினமான சிந்தனை மற்றும் மிகையான பார்வை. சமீபத்தில் ஒரு தோழியிடம் பேசிக் கொண்டிருக்கையில் லீனா மணிமேகலையின் பெயர் வந்தது. உடனே தோழி “அந்த அம்மா ரொம்ப லாபி பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டேன். அப்படித் தான் இவ்வளவு புகழையும் பெற்றிருப்பார் போல” என்றார். எனக்கு சட்டென கடுப்பாகியது. லீனாவின் பங்களிப்பு என்ன, அவர் எப்படியான படைப்பாளி என விளக்கினேன். வதந்திகளைக் கொண்டு எழுத்தாளர்களை மதிப்பிடக் கூடாது என கண்டித்தேன். ஆனால் நம் சூழலில் இதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இங்கு நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் – இலக்கிய உலகில் எதுவுமே இலவசமாய் வழங்கப்படுவதில்லை. எந்த சிறு அங்கீகாரத்தின் பின்னும் ஒரு படைப்பாளியின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளது. தொடர்ந்து லாபியிங் லாபியிங் என கூவி நாம் எந்த படைப்பாளியையும் மலினப்படுத்தக் கூடாது. ஒருவரை “அவர் என்னய்யா எழுதிட்டார்?” என தடாலடியாய் நிராகரிக்கும் முன் அவரது எழுத்துக்களை முழுக்க விரிவாய் படியுங்கள். அதன் பிறகு உங்கள் விமர்சன அளவுகோல் என்ன என்பதை தெளிவுபடுத்தி சான்றுடன் எழுதுங்கள். மனுஷி பாரதிக்கு நடந்த அவமானம் மன்னிக்க முடியாது ஒன்று. யுவ புரஸ்கார் அவருக்கு அளிக்கப்பட்டதை ஒட்டி அவரை யார் யாரோ கேள்வி கேட்டார்கள். ஆனால் இலக்கியத்துக்காக சிறு கல்லை கூட தூக்கிப் போடாமல் வெறுமனே கூட்டங்களுக்கு வந்து அமர்ந்து வதந்தி பேசுகிறவர்கள் மனுஷி பாரதி போன்ற ஒரு படைப்பாளியை தனிப்பட்ட எரிச்சல்களுக்காய் இவ்வாறு விமர்சிப்பதற்கு தயங்க வேண்டும். அப்படி செய்வதற்கே அவமானப்பட வேண்டும்!
இந்த முறை அப்படியான கட்டபஞ்சாயத்துகள் நடக்க கூடாது என வேண்டிக் கொள்கிறேன். பேசாமல் போய் பிக்பாஸ் பாருங்கள்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...