Skip to main content

டென்னிஸ் (4)


Image result for tennis paintings

நான் அவனது வகுப்பறை, அவன் வந்து போகும் வேளைகள், அவன் பயிற்சிக்கு வந்து புறப்படும் நேரம் என ஒவ்வொன்றையும் அறிந்தேன். எப்போதுமே சற்று தொலைவில் காற்தடங்கள் போல் அவனை தொடர்ந்தேன். ஒரு மாலையில் நான் தேநீர்க் கடையில் சுவரில் சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் நாளில் போன்றே அவன் அடித்த பந்து நான் அமர்ந்திருந்த வெற்று சிமிண்ட் இருக்கை அருகே உருண்டு போய் தேடி விட்டு பரிதவித்து நின்றது. “நீ திருந்துவதாய் தெரியவில்லை. அந்த இடத்தில் யாரோ உனக்கு சூனியம் வைத்திருக்கிறார்கள்என்றான் அவனுடன் ஆடியவன்.

ஆட்டம் முடியும் வேளையில் நான் வேகமாய் அங்கிருந்து அகன்றேன். ஆடுகளத்தில் இருந்து அவன் தன் நண்பர்களுடன் விளையாட்டுப் பொருட்களை வைக்கும் இடத்தை அடைந்து அங்கிருந்து தன் பையை எடுத்து விட்டு நடந்து பிரதான வழியை அடையும் நேரத்தை கணக்கிட்டுக் கொண்டேன். நான் அவனுக்கு முன்னரே அங்கு சென்று விட்டேன். குருதிப் பூக்களால் அடர்ந்த குல்மொஹர் மரம் ஒன்றின் கீழே கைகளை இறுகக் கட்டிக் கொண்டு நின்றேன். குளிரில் வெடவெடத்தது. முன்நெற்றியில் நெளிந்த மயிர்க்கற்றையின் கூர்முனை உறுத்தியது. அதை ஒதுக்கிட கையை வெளியே எடுக்கத் தோன்றவில்லை. தலையை உதறினேன். கற்றை என் இடது கண்ணை மறைத்து விழுந்தது. அவன் டென்னிஸ் ரேக்கட்டை காற்றில் வீசி பயிற்சி செய்தபடி தனித்து நடந்து வந்தான். நான் ஒற்றைக் கண்ணால் அவனை கவனித்தபடி வெடுவெடுவென நடந்து போனேன்.
சாலையெங்கும் சிவப்பு இலைகளை மிதித்து நடந்த போது தரையில் சிதறின சிறுசிறு பறவைகளைப் போல் அவை தோன்றின. என் பாதங்கள் நெருங்கின போது அச்சிறு செம்பறவைகள் லேசாய் அசைந்து கொடுத்தன. நானும் அவனும் அந்த சாலையில் நின்ற மிகப்பெரிய மரமான, காளான் வடிவில் கிளைகளை அகல விரித்த, ரெயின் ட்ரீயை நெருங்கினோம். நான் இப்போது ஊடுபாதை ஒன்றில் நுழைந்து ஓடி அவனுக்கு எதிர்ப்பக்கமாய் திறக்கும் பாதையில் தோன்றி மெல்ல நடந்தேன். பலமாய் மூச்சு வாங்குவதை காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய் கைகளை வீசியபடி நேராய் பார்த்து நடந்தேன். அவனைக் கடந்ததும் சட்டென நின்றுஏய் ஹைஎன்றேன். அவன் தலையை தூக்கி என்னைப் பார்த்ததும் கண்களை இடுக்கி உற்சாகம் தெரிக்க சிரித்தான்.
நீங்கஉங்களை டென்னிஸ் கோர்ட்டில்?”
ஆமா நான் தான்
ரொம்ப நல்லா ஆடுறீங்க
இல்ல இல்ல. நான் இப்போ தான் பழகுறேன்.”
உங்க ஸ்விங் ஷேப் நல்லா இருக்கு
ரியலி? நான் அன்னிக்கு வேணுமின்னே உங்க பக்கம் அடிக்கல”, அவன் முகம் சட்டென சிவந்தது.
நோ பிராப்ளம். ஐ எஞ்சாய்ட் இட் இன் பாக்ட்
அன்னிக்கு எல்லாம் தப்பாவே போய்க்கிட்டு இருந்தது
இல்ல சரியாத் தான் போனது
அவன் மீண்டும் முகம் சிவந்தான். அவன் ஆங்கிலத்தில் பேச திணறுவது கண்டு நான் இந்திக்கு மாறினேன். அவன் மூச்சு மெல்ல மெல்ல சீராவதை உணர்ந்தேன்.
உன் கிரிப் எப்படி காட்டு
அவன் காட்டினான்.
இது கொஞ்சம் செமி-வெஸ்டர்ன் இல்ல?”
அவன் தன் மணிக்கட்டை திருப்பி தன் கிரிப்பை திரும்ப திரும்ப பார்த்தான்.
என்னோடது கொஞ்சம் காண்டினெண்டல். நான் கொஞ்சம் ஓல்ட் டைப்
அப்படித் தெரியல”, அவன் சிரித்தான்.
நான் என் தலையை அழுத்திக் கோதி விட்டேன்.
நீ இதுக்கு முன்னாடி பேட்மிண்டன் ஆடுவியோ?”
எப்பிடித் தெரியும்?”
நீ மணிக்கட்டை…” அவன் பச்சை நரம்புகள் புடைத்த கையைப் பற்றி காட்டினேன், “நீ செர்வ் பண்ணும் போது இப்பிடி மணிக்கட்டை அசைக்கிறே. அப்பிடி பண்றதுனால தான் உனக்கு கண்டுரோல் இல்லாம போகுது. டென்னிஸ்ல போர் ஆர்ம் ஸ்டிப்பா இருக்கணும்.”
அவன் தலையசைத்தான். பிறகு நெர்வஸாக சிரித்தான். முகம் முழுக்க பரவும் சிவப்பு. அச்சிவப்பு ஒரு தீச்சுடராய் என்னைத் தொட்டு விழுங்கி எனக்குள் இறங்கியது.
பிரதான வாயிலை அடைந்ததும் நாங்கள் பிரிந்தோம்.
அடுத்த நாள் மாலையிலும் நான் பதுங்கி நின்று கவனித்தேன். அவன் கண்கள் என்னைத் தேடின. ஆனால் அவனது செர்வீஸ் ஷாட்கள் இப்போது ஒழுங்காய் எய்த அம்புகள் போல் நளினமாய் சென்றன. எதிர்சாரியில் ஆடினவர் பல தடவைகள் திணறினார். அவன் அன்று ஏதோ ஆட்கொண்டது போல் ஆடினான்.
மீண்டும் அவனுக்கு எதிரே வந்து ஹை சொல்லி அவனுடன் நடையில் இணைந்து கொண்டேன்.
இன்னிக்கு ரொம்ப நல்லா ஆடினே
சிவப்பாய் வெட்கிநீ பார்த்துக்கிட்டு இருந்தேன்னு தோணிக்கிட்டே இருந்துது
அவனைப் பற்றி உரையாடல் நடுவே சில விசயங்களைச் சொன்னான். சொந்த ஊர் உ.பி. பிறந்து வளர்ந்தது வங்காளத்தில். அவன் இந்தியில் தெரிந்த வங்காளக் கொச்சை நினைவுக்கு வந்தது. ஒரு நாய்க்குட்டி நடைபழகுவது போன்ற கொச்சை இந்தி. எனக்கு அவன் கொச்சையின், குழந்தைமையின் முதுகில் வருடித் தரத் தோன்றியது.
வரும் நாட்களில் தொடர்ந்து சந்தித்தோம். வாயிலை அடைந்து அவன் வீட்டுக்குக் கிளம்பும் போது என்னையும் கூட வர கேட்பான். அவனுடன் ஊர் சுற்ற அழைப்பான். மறுத்து விடுவேன். எனக்கு அவனுடன் அந்த பாதை முடியும் திருப்பத்தை கடந்து செல்லவே அச்சமாய் இருந்தது. மலர்க்கொத்துக்களும் செங்கனல் இலைகளும் கைகோர்த்து வானை மூடின அந்த சாலையைக் கடந்து வாகனங்கள் உறுமி விரையும் குறுகின, நெரிசல் மிகுந்த வெளிகளில் அவனுடன் நடப்பது செயற்கையாய் பட்டது. அவன் ரொம்ப சாதாரணமானவனாய் ஆகி விடுவான் என அஞ்சினேன்.
ஒருநாள் பனி பாதையை மறைத்திருந்தது. இரு பக்கமும் பனி வெண் துகில்களாய் சன்னமாய் சூழ்ந்தன. குல்மொஹர் மரத்தடியில் ஒடுங்கினோம். அவன் தோள்களுக்கு நடுவே புதைந்து கொண்டேன். ஒரு நொடி பார்வையை மேலே உயர்த்தினேன். பனிக் கூரைக்குக் கீழே கண்ணைப் பறிக்கும் சிவப்பு வெருட்டியது. சற்று நேரத்தில் பனி முழுக்க விலகி, கண்ணைக் கூசச் செய்யும் துல்லிய வெளிச்சம் எங்கும் சூழ்ந்தது. வெயிலற்ற கடும் ஒளி. அந்த கண்ணாடித் துல்லியம் எனக்கு தூங்கும் போது யாரோ போர்வையை உருவின உணர்வைக் கொடுத்தது.
அடுத்த நாள் முதல் விடுமுறை துவங்குகிறது. அவன் சமூக வலைதளங்கள் எதிலும் இல்லை என்பது எனக்கு ஆச்சரியமூட்டியது. தன்னிடம் ஸ்மார்ட் போன் கூட இல்லை என்றான். ஒரு நண்பனின் வீட்டில் அப்போது இருப்பதாகவும், விரைவில் ஒரு புது வீட்டுக்கு செல்வதாகவும் சொன்னான். ஆகையால் நான் அவனது முகவரியை விசாரிக்கவில்லை. எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டேன்.
அடுத்தடுத்த நாட்களில் நான் மட்டும் கல்லூரி வளாகத்துக்கு சென்று கொண்டிருந்தேன். தனிமையில் அமர்ந்து உதிரும் இலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...