ஹைக்கூவின்
தத்துவம்
ஹைக்கூ
இவ்வாறு ஜப்பானுக்கும் ஜென் பௌத்தத்தில் ஈடுபாடு கொண்டோருக்கும் மட்டுமே உரித்தானதாய்
இருப்பது அதை ஐரோப்பிய கவிதைப் பரப்பில் இருந்து துண்டு பட வைத்தது. நமது தமிழ் நவீன கவிதை ஐரோப்பிய நவீன கவிதையின் ஒன்று
விட்ட தம்பியாக இருப்பதனால் அதற்கு ஜென் பௌத்த சாயலோ ஹைக்கூவின் தொடர்போ பெரிதாய் இல்லை.
யுவன், மனுஷ்யபுத்திரன், தேவதச்சன் ஆகியோர் ஜென் தாக்கம் கொண்ட நவீன கவிதை எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் ஹைக்கூ கோரும் மனநிலையில் இருந்து இக்கவிதைகளின் மனநிலை மாறுபட்டது.
அது என்ன வித்தியாசம்?
ஹைக்கூவுக்கும்
நவீன கவிதைக்குமான வித்தியாசம்
நவீன
கவிதை ஒரு தனித்த பார்வையை, சிந்தனையை, ஒருவித திறப்பை நோக்கி வாசகனை செலுத்துவது. உதாரணமாய்,
நகுலனின் இந்த பிரசித்தமான குறுங்கவிதையை பாருங்கள்:
“ராமசந்திரா என்று கேட்டேன்
ராமசந்திரன் என்றார்
எந்த ராமசந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை”
ஒரு பெயரை ஒருவரது பெயராக சுலபத்தில் எடுத்துக் கொள்வதன்
அபத்தத்தை பகடி செய்கிறது இக்கவிதை. இது முழுக்க சிந்தனையின்
தளத்தில் நிகழ்கிறது. ஆனால் அன்றாட
சிந்தனையை கடந்த ஒரு தனித்த பார்வையும் இது அளிக்கிறது.
அடுத்து மனுஷ்யபுத்திரனின் சிறு கவிதை ஒன்று.
சிவப்புப் பாவாடை
சிவப்புப்பாவாடை
வேண்டுமெனச்சொல்ல
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொண்டையறுத்து
பாவனை இரத்தம் பெருக்குகிறாள்
ஊமைச் சிறுமி
வேண்டுமெனச்சொல்ல
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொண்டையறுத்து
பாவனை இரத்தம் பெருக்குகிறாள்
ஊமைச் சிறுமி
இதுவும் மொழியின் அபத்தம் பற்றின கவிதையே.
சிவப்பு எனும் நிறத்தைக் காட்ட அவள் ஏன் குறிப்பாய் தொண்டையை
அறுப்பதாய் நடிக்க வேண்டும்? ஆனால் அப்படி நிகழ்கிறது –
அங்கு பெருகும் பாவனை ரத்தம் அன்றாட வாழ்வில் வன்முறை எவ்வளவு
சாதாரணமான யாரையும் உறுத்தாத ஒன்றாய் வெளிப்பட்டு மறைகிறது என்பதைக் காட்டுகிறது.
குறிப்பாய், அது எப்படி நம் மொழியில் மீண்டும்
மீண்டும் நிகழ்கிறது, அதை இயல்பாய் நாம் எடுத்துக் கொள்வதில்
எவ்வளவு அபத்தம் உள்ளது என இக்கவிதை பேசுகிறது. நகுலனின்
கவிதை போல இக்கவிதை சிந்தனை வடிவிலானது அல்ல; காட்சிபூர்வமானது;
ஆனாலும் இதுவும் நம் சிந்தனையை தூண்டுகிறது. இது
நவீன கவிதையின் ஒரு மாறாத சுபாவம்: ஜராசந்தனைப் போல அதை
எப்படித் தான் பிய்த்துப் போட்டாலும் அது நம் சிந்தனையை தூண்டியபடி இருக்கும்.