Skip to main content

இருவர் - ஒளிப்பதிவு காட்டும் உளப்பாங்கு (4)



அடுத்து இதே ஒளிப்பதிவு உத்தி எப்படி காதல் காட்சிகளின் போது ஆண் பெண் இடையிலான அதிகார ஏற்ற இறக்கங்களை சித்தரிக்க பயன்படுகிறது என காண்போம்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடங்களில் வருகிறார். ஒன்று ஆனந்தனின் முதல் மனைவி புஷ்பா. அடுத்து, புஷ்பா இறந்த பின் ஆனந்தனின் வாழ்க்கையில் இளம் நடிகையாக நுழையும் கல்பனா. கல்பனா பாடல் காட்சிகளில் பெரும்பாலும் மையப்படுத்தப்பட்டு தாழ் கோணத்தில் மிகுந்த அதிகார பாவனையுடன் காட்டப்படுகிறார். அவளது படமொன்றின் பிரிவியூவின் போது தான் ஆனந்தன் அவளை காண்கிறான். அப்போது அவள் மேலே திரையில் நடனமாட அவன் கீழே இருந்து காண்கிறான். ஆனந்தன் தாழ் கோணத்தில் காட்டப்பட்டாலும் அவருக்கு மேலே கல்பனா தெரிகிறாள் எனும் உணர்வு உள்ளது (இது அவனை பலவீனப்படுத்துகிறது). மேலும் ஆனந்தன் அவளைக் கண்டு, உருவ ஒற்றுமை ஏற்படுத்தும் அதிர்ச்சியில், தடுமாறிப் போகிறான்.







அடுத்து வரும் காட்சிகள் ஆனந்தன் அவளுடன் பழகி அவளை தன்வயப்படுத்திய பின் வருபவை. இப்போது கல்பனா அவனை எப்படி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என பலவிதங்களில் முயற்சி எடுத்து வருகிறாள். ஒரு மலையுச்சியின் வியூ பகுதி. கல்பனா முதலில் கீழே அமர்ந்திருக்கிறாள். அவள் தனக்கு எதிரே நாற்காலியில் இருந்து மேக் அப் போடும் ஆனந்தனை நோக்கி பேசுகிறாள்.

 அவனது முதல் மனைவி புஷ்பாவுக்கும் தனக்குமுள்ள தோற்ற ஒற்றுமை பற்றி விசாரிக்கிறாள். ஆனந்தன் மெல்ல தடுமாறுகிறான். இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில், ஆனந்தன் மேலேயும் அவள் கீழேயும் இருக்கிறாள்.





புஷ்பாவுக்கு தலைகீழாக ஒரு உருவம் இருந்தால் அது நீ தான்என ஆனந்தன் அவளுக்கும் தன் முதல் மனைவிக்குமான வேறுபாடுகளை பட்டியலிடுகிறான். புஷ்பாவை போலன்றி கல்பனா அகங்காரம் மிக்கவள், பெரியவர்களை மதிக்கத் தெரியாதவள், அனைவரையும் கட்டுப்படுத்த தவிப்பவள்அவன் இவ்வாறு பேச பேச கல்பனா கீழிறங்குகிறாள். கீழே வரும் காட்சிகளில் ஆனந்தன் திரும்பவும் தாழ் கோணத்தில் வருகிறான். ஆனால் முதல் காட்சியில் போல் அல்லாது அவன் ஆதிக்கம் செலுத்துகிறான். கல்பனா தன் தோற்ற ஒற்றுமையை, ஆனந்தனுக்கு தன் மீதுள்ள ஈர்ப்பை சுட்டிக் காட்டி பேசி உரையாடலின் போது தன் அதிகாரத்தை மீட்கிறாள். இப்போது இருவரும் சமமாகிறார்கள். அடுத்து மீண்டும் தன் மீது அவனுக்கு உள்ள காதல் நிலையற்றது, உறுதியற்றது எனத் தோன்ற அவள் மீண்டும் கீழே போகிறாள்.







 அவன் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்து அவளை நோக்குகிறான். ஆனாலும் அவளது கேள்விகள் அவனை அசைக்கின்றன. இதை உணர்ந்த அவள்இனி அவனுக்கு கீழே அமர வேண்டியதில்லை எனும் நம்பிக்கையுடன் - கம்பித் தடுப்பின் மீது அமர்ந்தும் சாய்ந்தபடியும் ஆனந்தனை கீழாக நோக்குகிறாள்.

 என்னைப் பார்த்தால் புஷ்பா போல உள்ளதா? என்னையும் காதலிக்க போறீங்களா?” என வினவுகிறாள். ஆனந்தன் பதறுகிறான். அவன் முழுக்க தன் கட்டுப்பாட்டில் உள்ளதை அவள் இப்போது உணர்கிறாள். ஆனால் இந்த அதிகார சமநிலை மீண்டும் மாறுகிறது.

இக்காட்சித் தொகுப்பு முழுக்க இருவரின் உறவில் உள்ள ஊசலாட்டத்தை மணிரத்னம் காட்சிமொழி மூலம் குறிப்புணர்த்தி இருப்பார்.
இதைப் போன்றே தமிழ்ச்செல்வனின் இரண்டாவது மனைவியான செந்தாமரைக்கும் இடையிலான காதல் காட்சியிலும் அதிகார ஊசலாட்டம் சித்தரிக்கப்பட்டிருக்கும். கீழே வரும் காட்சியில் செந்தாமரை தனக்கு போதுமான இடம் இல்லை என தமிழ்ச்செல்வனிடம் புகார் கூறுகிறாள் (அவனுக்கு ஏற்கனவே குடும்பம் உள்ளது). நான் உனக்கு யார், எனக்கு இங்கு என்ன இடம் என வினவுவாள். ஆக தமிழ்செல்வன் இப்போது தாழ்ந்து போக வேண்டும். அந்நிலையில் இருந்து ஒரு நெகிழ்ச்சியான கவித்துவமான வசனம் பேசி அவளை கண்ணீர் விட வைக்கிறான் தமிழ்ச்செல்வன். அடுத்து இருவரும் சமமாகிறார்கள். தாழ் கோணத்தில் இருந்து நேர் கோணத்தில் மிட் ஷாட்டுக்கு காட்சி மாறுகிறது.




Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...