அடுத்து இதே ஒளிப்பதிவு உத்தி எப்படி காதல் காட்சிகளின் போது ஆண் பெண் இடையிலான அதிகார ஏற்ற இறக்கங்களை சித்தரிக்க பயன்படுகிறது என காண்போம் . இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடங்களில் வருகிறார் . ஒன்று ஆனந்தனின் முதல் மனைவி புஷ்பா . அடுத்து , புஷ்பா இறந்த பின் ஆனந்தனின் வாழ்க்கையில் இளம் நடிகையாக நுழையும் கல்பனா . கல்பனா பாடல் காட்சிகளில் பெரும்பாலும் மையப்படுத்தப்பட்டு தாழ் கோணத்தில் மிகுந்த அதிகார பாவனையுடன் காட்டப்படுகிறார் . அவளது படமொன்றின் பிரிவியூவின் போது தான் ஆனந்தன் அவளை காண்கிறான் . அப்போது அவள் மேலே திரையில் நடனமாட அவன் கீழே இருந்து காண்கிறான் . ஆனந்தன் தாழ் கோணத்தில் காட்டப்பட்டாலும் அவருக்கு மேலே கல்பனா தெரிகிறாள் எனும் உணர்வு உள்ளது ( இது அவனை பலவீனப்படுத்துகிறது ) . மேலும் ஆனந்தன் அவளைக் கண்டு , உருவ ஒற்றுமை ஏற்படுத்தும் அதிர்ச்சியில் , தடுமாறிப் போகிறான் .