Skip to main content

தண்டனைக்கு எதிரான ஆறு வாதங்கள்



குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு மரண தண்டனை என்பது நம் பாராளுமன்றம் ஏற்றுக் கொண்ட பின் பலரும் இந்த தண்டனைக் கடுமையை பாராட்டி வருவதை பார்க்கிறேன். இது ஒரு சுயஏமாற்றலே அன்றி இதில் எந்த பயனும் இல்லை என்பது என் தரப்பு.
தண்டனைக்கு எதிரான எனது ஆறு வாதங்களை கீழே தருகிறேன்.


முதல் வாதம்: தண்டனைகள் குற்றங்களை குறைப்பதில்லை. இன்று உள்ளதை விட மிகக் கொடூரமான தண்டனைகள் வெள்ளையர் ஆட்சியின் போது இந்தியாவில் வழங்கப்பட்டது. அந்தமான் சிறைக்கொடுமைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள் தானே? ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி அன்று கொடுங்குற்றம். ஆனால் தண்டனைகள் கடுமையாக ஆக “குற்றங்கள்” பெருத்தனவே அன்றி சிறுக்கவில்லை. நாடு விடுதலை பெற வேண்டும் என்கிற சுதந்திர வேகம் மட்டுமல்ல இதன் உந்துசக்தி. இதற்கான காரணத்தை அடுத்த வாதத்தில் பார்ப்போம்.

இரண்டாவது வாதம்:

நாம் பொதுவாக நம்புவதைப் போல குற்றங்களை தனிமனிதர்கள் செய்வதில்லை. பெரும்பாலான குற்றங்களுக்குப் பின்னால் சமூக கலாச்சார அரசியல் அமைப்புகளின் முட்டுக்கொடுத்தல் இருக்கிறது. இந்த அமைப்புகளின் அடித்தளத்தில் நின்று ஒரு துணிச்சலுடன் தான் குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு கூட்டு உளவியல் தரும் தன்னம்பிக்கை தண்டனையை புறக்கணிக்க கேட்கிறது. கௌரவக் கொலைகள் இதற்கு ஒரு தகுந்த உதாரணம்.

 மக்கள் உண்மையில் தம்மை அழிப்பது குறித்து அஞ்சாதவர்கள். ஒரு திரளுக்காக தன்னை அழிப்பது நமது அடிப்படையான உளவியல். பெரும்பாலான நமது சமகால குற்றங்களுக்குப் பின்னால் இந்த கூட்டு மனநிலை உள்ளது.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நடப்பதற்கு (செக்ஸ் விருப்பத்தை தாண்டி) குழந்தைகளை தனிமனிதர்களாகவே மதிக்காத ஒரு மனநிலை உள்ளது. இது ஒரு கூட்டு மனநிலை.
பெண்கள் மீதான வன்முறையும் இப்படித் தான் நிகழ்கிறது. பெண்கள் தம்மை மதிப்பதில்லை எனும் ஒட்டுமொத்த ஆண்களின் கோபம் ஒரு நவீன சமூகத்தில் ஒரு தனிமனிஷி மீதான வன்முறையாக வெடிக்கலாம். அதில் ஈடுபடுகிறவன் தனக்குப் பின்னால் ஒரு சமூகமே இருப்பதாய் நம்பலாம். தான் செய்வது நியாயமே என்று கூட அவன் நினைக்கலாம். அதாவது அவனது உள்ளுணர்வு அவனை அவ்வாறு செலுத்தும் போது அவனுக்குத் தேவை செக்ஸ் இன்பம் மட்டும் அல்ல. அதை விட அதிகமாய் அவனுக்கு வேறொரு வல்லுறவு இன்பம் கிடைக்கிறது. அதை அவன் நாடுகையில் அவன் தனியாய் இருப்பதாய் நான் நம்பவில்லை. அவனுக்குப் பின் பல்வேறு சமூக அமைப்புகள் செயல்படுகின்றன (சாதி, மதம், நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், மொழியில் உள்ள பல குறியீடுகள்…).
தண்டனைகள் தொடர்ந்து தோல்வி உறுவதன் காரணம் அவை தனிமனிதனை குறிவைக்கின்றன என்பது. பெரும்பாலான குற்றங்களை தனிமனிதன் செய்வதில்லை – அவன் ஒரு கருவி மட்டுமே. சுதந்திர போராட்டத்தின் போது அவன் மேம்பட்ட ஒரு நோக்கிற்கான கருவியாக இருந்தான்; அது முடிந்து தேசப்ப்பிரிவினையின் போது இதே மேம்பட்ட இந்துக்கள் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டனர். அப்போது அவன் ஒரு கீழான நோக்கிற்கான கருவியாக மாறினான்.

தனிமனித குற்றங்கள் என நாம் கருதுபவற்றையும் மேற்சொன்ன கூட்டு குற்றங்களில் இருந்து நாம் வேறுபடுத்து பார்க்கக் கூடாது. ஒரு மனிதன் தனித்து குற்றங்களில் ஈடுபடும் போது அவனுக்குப் பின்னால் ஒரு மறைமுக கூட்டம் இருந்து ஊக்கம் அளிக்கிறது.

மூன்றாவது வாதம்: சமூக அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதார வலு அற்றவர்களே தொடர்ந்து தண்டனைக்கு உள்ளாகிறார்கள். ஏனெனில் தண்டனை என்பதை தமது எதிரிகளை ஒடுக்குவதற்கும் சமூகத்தை கட்டுப்பாட்டில் வைக்கவுமே அரசமைப்புகள் பயன்படுத்துகின்றன. ஆகையால் நீங்கள் தண்டனைகளை வலுவாக்குவது உங்கள் எதிரியின் கையில் புதிய ஆயுதத்தை அளிப்பதற்கு சமம். இறுதியில் அது உங்களுக்கு எதிராகத் தான் திரும்பும்.

நான்காவது வாதம்: தண்டனைக்கு அஞ்சியே நாம் அனைவரும் குற்றம் புரியாமல் சமர்த்தாக இருக்கிறோம் என கூறப்படுகிறது. இது ஒரு அபத்தம். குற்றம் புரியும் போது பிடிக்கப்படுவோம் என யாரும் நினைப்பதில்லை. குற்றம் புரிந்த பின்னரே நாம் அடுத்து என்ன நிகழும் என அஞ்சத் துவங்குவோம். அல்லது அஞ்சாமல் எதிர்காலத்தை பரிசீலிப்போம். ஆக மரண தண்டனை பயம் என ஒன்று ஏற்பட்டாலும் அது குற்றம் நடந்த பின்னரே ஏற்படும். எனவே குற்றத்தின் போது தோன்றாத தண்டனை பயம் குற்றத்தை தடுப்பதில்லை.

ஐந்தாவது வாதம்: வாய்ப்பும் சூழலும் மனநிலையும் அமைந்தால் யாரும் குற்றம் செய்வார்கள் என்பதே உண்மை. அப்படி எனில் நானும் நீங்களும் ஏன் செய்யவில்லை? தண்டனைக்கு பயந்தா நாம் ஒழுங்காக இருக்கிறோம்?
 நிச்சயமாக இல்லை. நமக்குள் ஒரு சமூக கூட்டுமனம் செயல்படுகிறது. அது நம்மை பரஸ்பர கூட்டிணைவுடன் சமரச போக்குடன் செயல்பட தூண்டுகிறது. நம்மை அறியாமல் இம்மனப்பான்மை நம்மை ஆட்டிப் படைக்கிறது. சிறை என்கிற அமைப்பு இல்லாவிடிலும் இங்கு குற்றங்களின் எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யாது. இது சம்மந்தமாய் உளவியல் ஆய்வுகள் பல நடந்துள்ளன. யாரும் கண்காணிக்காத இடத்தில் ஒரு குழந்தைக்கு தவறு செய்ய வாய்ப்பு இருக்கும் போது அது செய்யுமா தவிர்க்குமா? இந்த ஆய்வுகளில் தனித்து விடப்படும் குழந்தைகளும் நாணயமாய், கருணையுடன் நடந்து கொள்ளவே விருப்பம் காட்டுகின்றன. தண்டனை பயமே நம் செயல்பாடுகளை, தேர்வுகளை தீர்மானிக்கிறது எனும் வாதம் ஏற்கத்தக்கது அல்ல.

ஆறாவது வாதம்: கொடூர குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் மனிதன் எனும் தகுதி அற்றவர்கள். மனம் பிறழ்ந்தவர்கள். அவர்களை பொதுவெளியில் உலவ விடக் கூடாது.
 இதுவரை இங்கே நடந்துள்ள கொடுங்குற்றங்களை செய்தவர்கள் சைகோக்கள் அல்ல. சூழலும் அசட்டு தைரியமும் அமைந்தவர்கள். தம் செயல்களுக்கான சமூக கலாச்சார ஆதரவைப் பெற்றவர்கள். சில ஆண்டுகளுக்கு முன் தில்லியில் நிர்பயா கொடூரமாய் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். அதற்கு ஒரு காரணம் அவள் தனியாக காதலனுடன் தெருவில் நின்றாள் என்பது. அவள் இரண்டு குழந்தைகள், கணவன் சகிதம் நின்றிருந்தால் அந்த இளைஞர்கள் அவளை அடித்து தூக்கிக் கொண்டு போயிருப்பார்களா? ம்ஹும்.
செய்திருப்பார்கள். அது ஒரு மதக்கலவரச் சூழல் எனில், அவள் மாற்று மதத்தவள் எனில். ஆக ஒவ்வொரு குற்றத்துக்குப் பின்னும் சமூகம் அளிக்கும் ஒரு தர்க்க நியாயம் உள்ளது. சமூகம் ஏந்திப் பிடிக்காமல் ஒரு குற்றவாளி இயங்க முடியாது.

 இது எப்படி நடக்கிறது என்பதை அறிய ஆசீபா வழக்குக்கு வருவோம்.
ஆசீபா மீதான குற்றத்தை எடுத்துக் கொண்டால் அக்குற்றவாளிகளுக்குப் பின்னால் பெரும் கூட்டம் ஒன்றின் ஆதரவு இருந்தது. அப்போது இயல்பாகவே ஒரு மிகை நம்பிக்கை அவர்களை செலுத்தியது. சாதி மதக் கலவரங்களில் நிகழ்வதும் இதுவே.
சரி ஆசிபாவின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் அது அடுத்து இது போன்ற குற்றங்கள் நிகழ்வதை தடுக்காதா?
இஸ்லாமிய பழங்குடிகள் மீதான கூட்டு வெறுப்பு அந்த இந்து பெரும்பான்மை சமூகத்தில் நிலவும் வரை பலவடிவங்களில் குற்றங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். தண்டிக்கப்பட்டவர்கள் சமூக தியாகிகளாகி விடுவார்கள். இதை ஒரு மனித நேயத்துக்கு எதிரான பாதகமாக பார்க்க முடியாதபடி மக்களின் கண்கள் வெறுப்பால் மூடப்பட்டிருக்கும். அதுவரை இக்குற்றங்களை தடுக்க இயலாது.

தண்டனை பயம் இம்மக்களை சீண்டுமா சொல்லுங்கள்? சமூக கட்டமைப்புகள், கூட்டுமனநிலை ஆகியவற்றை தவிர்த்து நாம் குற்றத்தை புரிந்து கொள்ளவே முடியாது.

முடிவாக:
குற்றவாளி என்பவன் தனிமனிதன் அல்ல. ஆகையால் அவனுக்கு தண்டனை பயத்தை தனியாக எதிர்கொள்ள தேவை இருப்பதில்லை.
நீங்கள் தண்டனை பயத்தை ஒரு பெரிய சமூக அமைப்புக்கு காட்ட வேண்டும். அது முடியுமா? முடியாது.

தண்டனை என்பது கடைசியில் ஒரு பூச்சாண்டி மட்டும் தான். நம் ஆறுதலுக்காக மீள மீள தண்டனையை கடுமையாக்குவது பற்றிப் பேசலாம்...


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...