
உன்னைப் பார்ப்பது
புதிதாக இல்லை
நீ நீண்ட காலமாய்
இருக்கிறாய்
என்னுடன்
ஆனால்
உன்னை
இதோ இப்போது தான்
சந்தித்தேன்
விரல்களை கோர்த்துக் கொண்டு
அடர்ந்த நிழல்களின் மீதாய்
நடந்தோம்
உதிர்ந்த மஞ்சள் பூக்கள்
நம் காலடியில்
கசங்கி விழித்து பார்த்து உயிரிழப்பதைக் கண்டோம்
எனக்கு என் குரலையே கேட்பது போலிருக்கிறது
என்றேன்
நமது தேர்வுகள்
நமது ரசனைகள்
முன்முடிவுகள்
ரகசிய கோபங்கள்
விசித்திர துக்கங்கள்
பிரதியெடுத்தவை போன்று இருந்தன
எனது கண்ணாடி பிம்பம் நீ என்று நானும்
எதேச்சையாய் நான் உன் சாயலில் இருக்கிறேன் என நீயும்
கோரிக் கொண்டோம்
அடுத்து நான் எப்படி சற்றே மாறுபட்டவன் என்று
உனக்கு புரிய வைத்தேன்
நீயும் அதையே
எனக்கு வலியுறுத்தினாய்
மீண்டும் நாம் எப்படி
இந்தளவு பரஸ்பரம் மாறுபாடின்றி இருக்கிறோம்
என வியந்து கொண்டு
முரணை மறந்து சிரித்து வைத்தோம்
அப்போது தான் நான் சொன்னேன்
“அன்பே
உன்னைப் பார்ப்பது
புதிதாக இல்லை
நீ நீண்ட காலமாய்
இருக்கிறாய் என்னுடன்.
மேலும்…”
நீ குறுக்கிட்டு
“ஏனென்றால் நீ தான் கவனிக்காமல் இருந்தாய்
ஆனால்
நான்
இத்தனை நாளும்
உனக்கு வெகு அருகாமையில்
மூச்சு படும் தொலைவில் தான் இருந்தேன்”
உடனே நீ அந்த
பஞ்சு மிட்டாயை என்னிடம் நீட்டினாய்
இருவரின் வாயும்
கோமாளியுடையதைப் போல் மாறி இருப்பதை சொல்லி சிரித்தோம்