மகிழ்ச்சியாக இருப்பது


Image result for suicide paintings

உலகில் மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது எனக்கு புரியாத சேதி. அதாவது மகிழ்ச்சி அசாத்தியம் என்றல்ல நான் சொல்ல வருவது.
குறிப்பாக எதையாவது செய்து உடனே மகிழ்ச்சியை அடைகிறவர்கள் இருக்கிறார்களா? மகிழ்ச்சியான நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் என தனியாய் உண்டா? உ.தா, மாலையில் நடை பழகுவது, குடும்பத்துடன் இருந்து சிரித்து பேசி டிவி பார்த்து உணவருந்தி சுற்றுலா சென்று, நண்பர்களோடு பப்புக்கு சென்று, காதலியோடு தன்னை மறந்து பேசியும் தொட்டு சீண்டியும் .. இவையெல்லாம் மகிழ்ச்சி தருகிறவை தான். ஆனால் உறுதியாக இல்லை. இவை அலுப்பையும் கசப்பையும் கூட தரலாம்.

 நான் இதுவரையிலான என் வாழ்வில் மகிழ்ச்சிக்காக இவை எதையும் செய்ததில்லை. எழுதுவது மட்டுமே எனக்கு தித்திப்பான ஒரே காரியம். அதையே திகட்டத் திகட்ட செய்து வந்திருக்கிறேன்.
ஆனால் அவநம்பிக்கை, கசப்பு, ஏமாற்றம், வெறுமை என்னை சூழும் போது எழுத்தும் என்னை கைவிட்டு விட்டு விடுகிறது. இதை உண்மையில் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
 கடந்த ஆறு மாதங்களில் நான் மெல்ல மெல்ல எழுத்து மீதான என் பிடிப்பை இழந்து வருகிறேன். என்னை உற்று கவனிப்பவர்கள் அதை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள். உறக்கத்தில் நடப்பதை போலத் தான் நான் இப்போதெல்லாம் எழுதுகிறேன்.
 எழுதினால் மகிழ்ச்சியாய் இருக்க இயலாது; மகிழ்ச்சியாய் இருந்தால் தான் தொடர்ந்து எழுதி அதிக மகிழ்ச்சியாய் இருக்க இயலும். இதை நான் சமீபத்தில் தான் உணர்ந்தேன்.
 எழுத்து வாழ்வின் போதாமைக்கான தீர்வு அல்ல. இத்தெளிவு எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாய் அமைந்தது.
 கடந்த சில மாதங்களில் அதனாலே நான் சகமனிதர்களிடம் திரும்ப சென்றேன். எப்போதும் செய்யாத அளவு அதிகமான உரையாடல்களில் ஈடுபட்டேன். உறவுகளில் மனம் கசிய கரைந்தேன். எப்போதும் நொறுங்கிப் போகும் அளவு பலவீனமானவனாய் என்னை வைத்துக் கொண்டேன். கடந்த சில மாதங்களில் நான் கற்றுக் கொண்ட சில விசயங்களை எந்த புத்தகமும் ஞானியும் அறிஞனும் எனக்கு சொல்லித் தந்ததில்லை.
ஆனாலும் வாழ்தல் சமவெளி பயணம் அல்ல. அது ஒரு மலையேற்றம் அல்லது நில்லாத வீழ்ச்சி. ஒன்று போராடி தம் கட்டி மேலே ஏற வேண்டும். ஆனால் எப்போது ஏறி முடித்து உச்சியை எட்டினோம் என நாம் அறிய மாட்டோம். என்றோ ஒருநாள் சட்டென கீழே உருளத் துவங்குவோம். அப்போதும் நம்மால் அதைத் தடுக்க இயலாது. உருளும் வேகத்தை மட்டுப்படுத்தலாம். அதிக அடி இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். என்ன தான் ஆழ்ந்த பற்றுடன் படித்தாலும் எழுதினாலும் வாழ்தலின் வீழ்ச்சியை தாங்க முடியாது.
நான் இத்தனை நாட்களும் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவனாய் இருந்திருக்கிறேன் என புரிந்து கொண்டேன். நல்ல நண்பர்கள், நல்ல குடும்பம், பரிவான வாசகர்கள், நல்ல வாய்ப்புகள் என எல்லாம் அமைந்து விட்டது. மகிழ்ச்சி எனக்குள் இயல்பாக ஊற்றெடுக்கும் ஒன்றாய் இருந்தது. நான் அதை நாடிச் சென்றதே இல்லை. இதுவே மகிழ்ச்சி மனித வாழ்வின் இயல்பான அடிப்படையான குணாதசியம் என என்னை தவறாக நம்பச் செய்தது.
அடுக்கடுக்காய் பல்வேறு மனிதர்களின் தோள்களில் நின்றபடி, சிக்கலான பல வாய்ப்புகள் தந்த உற்சாகத்தில் நான் இத்தனை நாட்கள் சந்தோசமாய் வாழ்ந்திருக்கிறேன். இம்மனிதர்கள் விலகினதும், பல்வேறு சமூக கட்டமைப்புகள் தளர்ந்ததும், வாய்ப்புகள் குறைந்ததும் நான் தனியானதும் மகிழ்ச்சியும் எட்டாக்கனியாகி விட்டது. எழுத்தை கடவுளாக வணங்கிய எனக்கு கடவுளும் கைவிடும் சூழல் ஏற்படும் என்பது விசித்திரமாக, நம்ப முடியாததாக இருந்தது.
அப்படித் தான் நான் மகிழ்ச்சியை நாடத் துவங்கினேன். துக்கத்தை கடந்து போக எத்தனித்தேன். அப்படித் தான் முதல் வரியில் உள்ள கேள்வி எனக்குத் தோன்றியது.
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் எல்லாம் தற்காலிகமாகி விடுகின்றன. நீண்ட கால நண்பர்களை சம்பாதிப்பது ஒரு காலத்தில் மிக சுலபமாக இருந்ததுண்டு. ஆனால் பால்யம் முடிந்து, இளமை ஆவியாக நமக்கு வாய்ப்புகள் உறவுகள் அப்பளம் போல் நொறுங்கக் கூடியவையாக, கனவு போல் கலையக் கூடியவையாக மாறுகின்றன. இதே பட்டியலில் உடல்நிலை, வேலை வாய்ப்புகள், நினைவுத் திறன், சமூக ஒத்திசைவு ஆகியவையும் சேரும்.
 மெல்ல மெல்ல உருகி வரும் ஒரு பனிப்பாளத்தில் நடந்து போகும் உணர்வு இது. எப்போதும் சட்டென நொறுங்கி நீங்கள் பள்ளத்தில் விழுவீர்கள் எனத் தெரியாது. இது தற்காலிகத் தன்மையை, நிலையின்மையை அதே பாணியில் கையாளலாமே என எனக்குத் தோன்றியது, மிக மிக சந்தர்ப்பவசமாய் தான் இந்த முடிவை எட்டினேன்.
ஒவ்வொரு முறை துயரம் என்னை மூடும் போதும் நான் இன்னும் இரு நாட்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுப்பேன். திட்டமிடுவேன். தயாராவேன். உடனே மனம் துக்கத்தை உதறி விட்டு இயல்பாகி விடும். அதிக உத்வேகத்துடன் வேலை செய்வேன். இரு நாட்களை மெல்ல ஒரு வாரமாக தள்ளிப் போடுவேன். ஒரு வாரம் பின்பு பத்து நாட்களாகும். ஆனால் வாழ்வை முடித்துக் கொள்ளலாம் எனும் முடிவு தரும் சுதந்திரம் அபாரமானது. அது நம்மை எல்லா பாரங்களில் இருந்து விடுவிக்கிறது.
கடவுள் நம்மிடம் இன்னமும் கருணையுடன் இருக்கிறாரா என இந்த இடைப்பட்ட காலவெளியில் அறிந்து கொள்ளலாம். என் அனுபவம் என்னவெனில் இந்த சந்தர்பத்தில் தான் மிக அதிகமாய் கனிவான மனிதர்களை நான் சந்திப்பேன். நம்பிக்கையூட்டும் அனுபவங்கள் அதிகமாகும். யாராவது எனக்கு பாதுகாவலர்கள் போல் கூடவே வருவார்கள். மனம் தற்கொலையில் இருந்து மீண்ட பின் இந்த தேவதைகளும் தம் வீட்டுக்குப் போய் விடுவார்கள்.
இம்முறை நான் சற்று நீண்ட அவகாசம் எடுத்துக் கொண்டேன். 2019 ஜனவரியில் செய்யலாம் என முடிவெடுத்தேன். அதுவரை எந்த பொறுப்பும் இன்றி, எதிர்பார்ப்புகளும் இன்றி, கவலைகளே இன்றி, எல்லாவற்றையும் உதறி விட்டு வாழ வேண்டும் என நினைத்தேன். ஆனால் அப்படி நினைக்கும் நொடி மட்டுமே தித்திக்கிறது. நீண்ட கால இடைவெளியில் அப்படி இருப்பது மிக மிக சிரமம்.
வேலை செய்தே ஆக வேண்டும். வேலையில் இயல்பாகவே பொறுப்புகள் வந்து விடுகின்றன.
புதுப்புது உறவுகள் ஏற்படுகின்றன. இந்த உறவுகளை என்ன தான் முயன்றாலும் சீரியசாக எடுக்காமல் இருக்க முடியாது.
சாக்ரடீஸ் தான் விடம் அருந்தி மரிப்பதற்கு முன்பு தன் நண்பரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறார். ஒரு நண்பரிடம் கடனாக பெற்ற சேவலை திரும்ப எனக்காக கொடுத்து விடு!
 செத்த பின் கடனாளியாக இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன? அதுவும் சாக்ரடீஸ் போன்ற ஒரு மேதையை வரலாறு அந்த சின்ன கடனுக்காக பழிக்கப் போவதில்லை. ஆனால் மரணத்துக்கு சற்று முன் வரை நாம் அன்றாடத்தின் அத்தனை அற்ப கவலைகளையும் சீரியசாக எடுத்தே ஆக வேண்டும்.
எழுத்து?
எழுத்து ஒரு கடுமையான பணி. ஒரு நாளிதழில் மூன்று வருடங்களாய் ஒரு பத்தி எழுதி வருகிறேன். அதை சட்டென நிறுத்த முடியாது. என்ன சொல்லி நிறுத்துவது? அப்படியே நிறுத்தினாலும் தினமும் எழுதி பழகி விட்டது. நிறுத்துவது மிக மிக சிரமம்.
அதனால் தான் பொறுப்பின்றி ஜாலியாக இருப்போம் என நினைக்கிற போது அதை எப்படி செய்வது எனும் திகைப்பு தோன்றுகிறது. உண்மையில் அப்படி இருக்கிறவர்களுக்கும் அது எப்படி எனத் தெரியாது.

Comments

devan kumaran said…
அன்புமிக்க அபிலேஷ் அவர்களுக்கு,
உண்மைதான். தற்கொலை மனநிலை நம் பாரத்தை இறக்குகிறது. ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பினை முடிக்க இயலாத சூழ்நிலை. அரியர் இல்லாதவன் அரை மனிதன் என்ற கூற்றில் நான் முழு மனிதனாக இருந்தேன். அப்போதிருந்த மனநிலையில் தற்கொலை மட்டுமே தீர்வு என எண்ணி , சில நாட்கள் பொறுத்து அம் முயற்சியில் ஈடுபட்டு பிழைக்க வைக்கப்பட்டேன். அந்த சில நாட்களில் பாரம் குறைவது போன்ற ஒரு தோற்றம் உருவாவது உண்மைதான். ஆனால் அது ஒரு தோற்றமே. மீண்டவுடன் மீண்டும் நிதர்சனத்தை எதிர் கொண்டாக வேண்டும்.
செயல்பாடுகள் மட்டுமே வாழ்வின் மீது ஒரு பிடிப்பினை ஊட்டுவதாக உள்ளது. நிலையற்ற நிலை நம் இதயத்தின் ஆழத்தில் நிலை கொண்டுள்ளது. அது நம் விழிப்புணர்விற்குள் வரும் போது வாழ்வின் மீதான பிடிப்பு விலகுகிறது.
செயல்தன்மையே மீள்வதற்கு ஒரே வழியாகும்.
அன்புடன்
தே. குமரன்
தருமபுரி .