போரும் அமைதியும் – தல்ஸ்தாய்
தெய்வம் உண்மையில் இருந்து அவரை தரிசிப்பது போன்றதே இந்நாவல்.
இதைப் படித்த பின் நாம் படிக்கிற நாவல்கள் இதன் சுருக்க வடிவம் / துண்டு துக்கடா போல
தோன்றுவதை தவிர்க்க முடியாது.
நார்வேஜியன் வுட் – முராகாமி
இதை முராகாமியின் சிறந்த நாவல் என சொல்ல மாட்டேன். எனிலும்
ஆத்மார்த்தமான, நிர்மலமான காதல் கதை என்கிற வகையில், கைவிடப்பட்ட வாழ்க்கையின், கையாலாகாத
உறவுநிலைகளின் தத்தளிப்புகளை அவ்வளவு கவித்துவமாய், நகைச்சுவையாய் அவர் சித்தரித்ததை
கருதுகையில் இந்நாவலை மறக்க முடியாது.
விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
தமிழின் ஆகச்சிறந்த நாவல் இது என்பதில் எனக்கு ஐயமில்லை.
புதுவிதமான மொழிகளை கையாள்வது, முழுக்க ஒன்றோறொண்டு முரண்கொள்ளும் உணர்வுநிலைகளுக்குள்
விளையாடுவது, காட்சிபூர்வமான சித்தரிப்புகளால் நம்மை திகைக்கவும் பதறவும் வைப்பது,
சுயதேடல் எனும் உன்மத்தத்தை உரைநடையிலும் கையாள முடியும் என நிரூபித்தது, கற்பனையிலும்
அறிவார்ந்தும் இது மேற்கொள்ளும் விரிவு ஆகியவை மேற்சொன்ன தகுதியை இதற்கு அளிக்கிறது.
இதை செவ்வியல் / வரலாற்று நாவல் என்பதை விட இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்பான
லட்சியத்தின் அந்த பொற்காலம், அதன் சீரழிவு, மார்க்ஸியவாதிகளும் காந்தியவாதிகளும் கொண்டாடிய
நம்பிக்கைகளின் தத்தளிப்பு, அறம் பற்றின விவாதங்கள், அவற்றின் இறுதி வீழ்ச்சி ஆகியவை
பற்றின ஒரு நீதிக்கதை (parable) எனச் சொல்லலாம்.
நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன்
கால ஓட்டம் மிகத் தனியானது. அது ஒரு சக்கரவியூகம். அதில்
இருந்து நாம் தப்பிக்க முடியாது. உடைக்க முடியாது. அதன் போக்கை தீர்மானிக்கவும் முடியாது.
இதை உணரும் மனிதர்களின் தீவிரமான தனிமையை தொட்டுக் காட்டும் தமிழ் நாவல்களில் இது முதன்மையானது.
எஸ்.ராவை லத்தீன் அமெரிக்க இலக்கியம் பாதித்ததன் உன்னதமான விளைவு என இந்நாவலை சொல்லலாம்.
ரெண்டு நாட்கள் விடுப்பெடுத்து இந்நாவலை படித்து லயித்த நாட்களை மறக்க முடியாது. படித்ததுமே
நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன், “இதோ தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்று. இதை இவராலே
இனி மீற முடியுமா?”.
Fear of Freedom – எரிக் புரோம்
கட்டுரை நூல்களில் இதை தேர்ந்தெடுக்கக் காரணம் தனிப்பட்டது.
நான் மன அழுத்தத்தில் இருந்த சந்தர்பத்தில் இந்நூலை எதேச்சையாய் படித்தேன். இது அளித்த
தர்க்கம், அவதானிப்புகள், மனித சுபாவம் பற்றின ஆழமான பார்வை என்னை அழுத்திய துக்கத்தை
துடைத்து அகற்றின. துக்கம் என்பது அச்சம், அச்சம் என்பது பிழையான பார்வையில் இருந்து
வருவது, சிந்தனை சீரானால் துக்கம் போம் என்று நான் அன்று இதை வாசித்து கண்டு கொண்டேன்.
நான் 2007இல் எழுதின முதல் கட்டுரை முதல் எரிக் புரோமை தொடர்ந்து மேற்கோள் காட்டி வருகிறேன்.
ஒரு புத்தகம் உங்களுக்கு மனநலம் அளிக்கும் என யார் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்.
ஆனால் எனக்கு அப்படி ஒன்று நடந்தது – ஆகையால் நம்ப வேண்டி இருக்கிறது. முக்கியமான நூல்.




